கல்யாணமாகி மூணு வருஷமாச்சு, குழந்தை இல்லை, உன்னை விவாகரத்து செய்யப்போறேன்னு சொன்ன புருஷன் இப்போ திருந்தி, என்னையும் பொண்ணையும் தாங்குறார்ன்னு சொன்னா கூட படிச்சவ.
எப்படி இந்த மாற்றம்ன்னு கேட்டப்ப..
கடைசியா ஒருமுறை ஏதாவது கருத்தரிப்பு மையம் மூலம் முயற்சி செய்வோம், இல்லைன்னா உங்க முடிவுன்னு சொல்லிட்டு, ஏதோ ஒரு க்ளினிக் போயிருக்காங்க. அங்கிருந்த நர்ஸ், ஐம்பது வயசுக்கு மேலே இருக்குமாம், சில டெஸ்ட்கள் எடுக்கச் சொல்லிட்டு, பணம் கட்டிட்டு, அடுத்த வாரம் ஒரு சின்ன கவுன்சிலிங் இருக்கும், உடம்பு பரிசோதனைகள் எல்லாம் இருக்கு, தயாரா வந்துடுங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம்.
ஒருவாரத்துக்கப்புறம் போனப்ப, தனித்தனியா ரெண்டு பேரையும் கூப்பிட்டுப் பேசி, அப்புறம் ஒண்ணா வெச்சுப் பேசி, இவளைக் காமிச்சு, உங்க மனைவிக்கு உடல் ரீதியான எந்த சிக்கலும் இல்லை,உங்களுக்குத் தான் கொஞ்சம் சிக்கல்ன்னு சொன்னதும், பேயறைஞ்ச மாதிரி பார்த்துட்டு, மெடிக்கல் ஹிஸ்டரி கேட்டப்ப, தன்னோட அப்பா அம்மாவுக்கு ஆறு வருசத்துக்குப் பிறகுதான் நானே பிறந்தேன்னு சொல்லிருக்கார்.
நர்சம்மா உடனே இதான் சாக்குன்னு நூறுல நாப்பது ஆண்களுக்குத் தான் இப்போல்லாம் பிரச்சனை இருக்குன்னு சொல்லி, மனுஷனை நேரடியாவே திட்டி இனிமே பொண்டாட்டிக்கிட்ட ஒழுங்கா நடந்துக்கோன்னு அனுப்பிருக்காங்க. அதுலருந்து வீட்ல அமைதி தானாம்.
இவ தனியா நர்சம்மாவைப் பார்த்து பேசினப்ப, உன் புருஷனுக்கும் எந்த குறையும் இல்லை, குணம் சரியில்லை அதான் இப்படி சொன்னேன்னு சிரிச்சாங்களாம். குழந்தை பிறந்ததும் அவங்களே இதை அவரைக் கூப்பிட்டு சொல்லியும் இருக்காங்க. என் அனுபவத்துல எத்தனைப் பேரைப் பார்த்திருப்பேன், பொண்டாட்டியை ஒழுங்கா வெச்சுக்கோன்னு சொல்லி, குழந்தைக்கு தடுப்பூசியெல்லாம் சரியா போடுங்கன்னு அனுப்பி வைச்சிருக்காங்க.
No comments:
Post a Comment