Thursday, July 26, 2018

சுந்தர்ராஜன்

பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானங்களும் மூழ்கிக்கொண்டிருக்கும் அம்பானி நிறுவனமும்:

பா.ஜ அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பங்கு கொண்டு எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தார் ராகுல் காந்தி. அந்த விவாதத்தில் அவர் எழுப்பிய முக்கியமான விசயம் இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து "ரபேல்" விமானம் வாங்கியது தொடர்பானது. அதற்கு பதிலளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம் ரகசியமானது என்றும் அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார். பாதுகாப்பு துறை அமைச்சர் மறந்தது, ரபேல் விமானங்கள் வாங்குவது இந்திய மக்களின் வரிப்பணத்தில்தான், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் பணத்திலல்ல என்பதை. இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் எந்த பொருளின் வணிக விஷயங்களும் (commercial aspect) மக்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும், தொழில்நுட்பம் (Technology) சார்ந்த விஷயங்களை வேண்டுமானால் அவர்கள் ரகசியமானது என்று சொல்லிக்கொள்ளலாம்.

அந்த விவாதத்தில் ராகுல் எழுப்பிய மற்றொரு விஷயம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பிரான்ஸ் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றியது. இந்த ஒப்பந்தமே இந்திய அரசு ரபேல் விமானங்களை வாங்கும் என்கிற அடிப்படையில்தான் கையெழுத்தாகியுள்ளது, அதை தனிப்பட்ட இரு நிறுவனங்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தமாக கருதமுடியாது.

நாடாளுமன்ற விவாதத்திற்கு பிறகு, இது தொடர்பாக ராகுல் காந்திக்கு விரிவான கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் அனில் அம்பானி - "அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர்". அந்த கடிதத்தில் ரிலையன்ஸ் நேவி (navy) மற்றும் பொறியியல் நிறுவனம் மிகவும் அனுபவம் வாய்ந்தது எனவும், அமெரிக்கா போர் கப்பல்கள் உட்பட பல போர்கப்பல்களை தாங்கள் பராமரித்து வருதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் துறையில் தங்கள் நிறுவனத்திடம்தான் மிகப்பெரிய கப்பல்கட்டுமான தளம் இருப்பதாகவும், இந்திய கப்பல் படைக்கு 5 ரோந்து கப்பல்களுக்கும், கடலோர காவல் படைக்கு 14 ரோந்து கப்பல்கள் தயாரித்து கொண்டிருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.     

மேற்சொன்ன அனில் அம்பானியின் கடிதத்தை படித்தால் சில கேள்விகள் எழுகின்றன. சாதாரண ரோந்து கப்பல்கள் தயாரிப்பதும், ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்கள் தயாரிப்பதும் அல்லது தயாரிப்பில் பங்கேற்பதும் ஒன்றாகுமா?. தொழில்நுட்படம் சார்ந்த விஷயங்களை விட மோசமாக இருப்பது "ரிலையன்ஸ் நேவி மற்றும் பொறியியல்" நிறுவனத்தின் நிலை. கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிறுவனம், அந்த காலாண்டில் மட்டும் 409 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது.       

சுயாதீனமான தணிக்கையாளர்களான பதக் நிறுவனம், "ரிலையன்ஸ் நேவி நிறுவனத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.  தணிக்கையாளர்கள்  அறிக்கை, கடந்த பல ஆண்டுகளாக ரிலையன்ஸ் நேவி நிறுவனம் நஷ்டம் மட்டுமே அடைந்து வருகிறது என்றும் கடன்கொடுத்தவர்கள் நம்பிக்கையை இழந்து கடனை திரும்ப கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் தெரிவிக்கிறது.

ரிலையன்ஸ் நேவி நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 8,500 கோடி உள்ளது, அதை வராக்கடனாக அறிவிக்கும் பட்சத்தில், நிதி அளித்த பல வங்கிகள் சிக்கலில் மாட்டும் என்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது. பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கியும் IDBI  வங்கியும்தான் அதிக கடனளித்துள்ளன, தனியார் வங்கிகளான HDFCயும் yes பேங்க்கும் குறைந்த அளவில் கடன் கொடுத்துள்ளன. இவை அனைத்தும் வராகடனாக வாய்ப்புள்ளது. 2017 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வாங்கிய கடனிற்கு வட்டிகூட கட்டமுடியாத நிலையில்தான் ரிலையன்ஸ் நேவி நிறுவனம் இருந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு "பிப்பாவ் பாதுகாப்பு கட்டுமான" நிறுவனத்தை அதிகமான கடனுடன் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியது முதல் அதன் பிரச்சனைகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறதே ஒழிய குறைவதாக இல்லை.

போர் விமான தொழில்நுட்பத்தில் அதிகமான அனுபவம் இல்லாத, எந்த நேரத்திலும் நிதி நெருக்கடியில் மூழ்கக்கூடிய நிறுவனத்துடன் பிரான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டு இந்திய விமான படைக்கு விமானங்கள் தயாரித்து தரப்போகிறது.

இதைவிட இந்த தேசத்தை யாராவது ஏமாற்ற முடியுமா ?

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...