அண்ணாவின் நல்ல சகுனம்.
இரு வார அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, அன்பும் அரசியலுமாக கழிந்த நாட்களின் அனுபவங்களைச் சுமந்தவாறே சான் பிரான்சிஸ்கோவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்தேன். விமான நிலைத்தில் குடிவரவுப் பகுதி...
பாஸ்போர்ட்டோடு நின்றுகொண்டிருந்தேன். நீண்ட க்யூ. தூக்கக் கலக்கத்தில் பல நினைப்புகள். சில மணிநேரங்களுக்கு முன்பு பார்த்த படம் ஒன்றின் காட்சிகள் மண்டையில் தெறித்துக் கொண்டிருந்தன.
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வருகையில் த டெர்மினல் என்ற படம் பார்த்தேன். விமான நிலையத்தில். நடக்கும் கதை.
குரகோசியா என்ற நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் நியூயார்க் ஜே எஃப் கே விமான நிலையத்தைச் சென்றடைகிறார். குடிவரவு அதிகாரி அந்தப் பயணியை உள்ளே விட மறுக்கிறார். உங்கள் பாஸ்போர்ட் செல்லாது என்கிறார். பயணிக்கு அதிர்ச்சி..
விஷயம் இதுதான். அவர் குரகோசியாவில் கிளம்பி நியூ யார்க் வருவதற்குள் குரகோசியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு அந்த நாட்டின் மீதான ராஜீய அங்கீகாரத்தை அமெரிக்கா ரத்து செய்துவிடுகிறது. அந்தப் பயணி இப்போது அமெரிக்காவுக்குள்ளும் நுழைய முடியாது. சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாது. அதன் பிறகு என்ன ஆனது? மீதியை வெண்திரையில் காண்க. ஸ்பீல்பெர்க் படமாயிற்றே...
கையில் பாஸ்போர்ட்டும் மனத்தில் இந்தக் கதையுமாக, குடிவரவில் முத்திரைப் பெறுகிறேன். அங்கே அமர்ந்துகொண்டிருந்தவர் ஒரு இந்திக்கார அதிகாரி. தூக்கம் கலைந்துவிட்டது.
ஒரு பயண நேரத்தில் ஒரு நாடே காணாமல் போனதைப் போல், புதிதாக ஒரு நாடு உருவாகியிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டே,
குடிவரவைத் தாண்டி எஸ்கலேட்டரில் இறங்கிவந்த போது கண்ணில்பட்டது
- பெரிய அளவுக்கு அண்ணாவின் படம் ஒன்று...
தேசத்துக்கு பெயர் தந்தவன். அட்டகாசமாக சிரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு மூலையில்...
தில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்ட முடிகிறது. ஆனால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட முடியவில்லை. ஒரு முனையத்துக்கு மட்டுமே அவர் பெயர் சூட்டப்பட்டது.
அவன் நாட்டுக்கே பெயர்வைத்தான் அன்று. அவன் பெயரை ஒரு விமான நிலையத்துக்குக்கூட வைக்க வக்கற்று இருக்கிறோம் நாம், இன்று.
ஸ்பீல்பெர்க், குறித்துவைத்துக்கொள்ளடா.
அண்ணா பன்னாட்டு முனையம் ஒரு நாள் அண்ணா பன்னாட்டு விமான நிலையமாக மாறும். எனது பாஸ்போர்ட்டும் தமிழை நாடும். எங்கள் நிலையங்களை நாங்களே நடத்துவோம். எங்கள் பறப்பகத்துக்கு விமானங்களும் அங்கே பணியாற்றுவோரும் தமிழைப் பேசுவார்கள். கட்டாயமாக.
அது மட்டுமல்ல.
அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தை மையமாகக் கொண்டு குரகோசியாவுக்கும் நியூ யார்க் ஜே எஃப் கேவுக்கும் தில்லி இந்திராகாந்திக்கும் பறக்கும் எங்கள் ஏர் தமிழ்நாடு விமானங்கள்...
No comments:
Post a Comment