அரங்கம் நிறைந்திருக்கிறது. இளசுகளின் விசில் சத்தத்தால் அந்தப் பழைய கல்லூரியின் கலைவிழாவில் இளமை ததும்புகிறது. அதிர வைக்கும் இசைக்கு ஆண்-பெண் மாணவர் இணைந்து ஆடிய ஆட்டம் பேராசிரியர்களுக்கும் வயதைக் குறைத்தது. கறுப்பு-வெள்ளை காலத்து கனவுகள் கலர் கலராக மலர்ந்தன.
ஆட்டம் விறுவிறுப்படைய, காகிதக் கணைகள் மேடை நோக்கி சீறி வந்தன பாராட்டுகளாக!
அடுத்தடுத்து நடந்த பலகுரலிசை.. பாட்டுக் கச்சேரி என எல்லாமும் அதகளம்தான். கைதட்டல்களால் கட்டடம் இடிந்துவிழுமோ என்கிற அளவிற்கு கோலாகலம்.
இப்போது மேடையில் அவன் நிற்கிறான். நாடகத்தின் நாயகனாக! அருகில் நாயகி என்று யாரும் இல்லை. அதற்குப் பதில்தான் பார்வையாளர் மாடத்தில் அவள் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறாளே!
நீண்ட வசனத்தை அவன் தன்னந்தனியாகப் பேசி, அசத்திக் காட்ட வேண்டும். பிசிறின்றிப் பேசிவிடுவான், யாரும் இல்லாவிட்டால்! கூட்டமாக இருக்கும்போது கூச்சம் அவன் வார்த்தைகளை விழுங்கிவிடுவது வழக்கம். பயிற்சி தந்த பேராசிரியர் ஒரு வழி சொல்லிக் கொடுத்தார்.
“மேடையில் பேசுறதுக்கு முன்னாடி, உனக்குத் தெரிஞ்ச யாராவது அரங்கத்தில் இருக்காங்களான்னு பார்த்துக்க.. அவங்க முகத்தையே பார்த்து பேசு. அவங்க ரசிப்பாங்க. நீயும் அவங்ககிட்ட ஒப்பிக்கிற மாதிரியே நினைச்சி ஏற்ற இறக்கத்தோடு பேசு. அப்பப்ப முகத்தை மற்ற பக்கமும் திருப்பிக்க. திரும்பவும் அவங்களைப் பார்த்துப் பேசு. பயமில்லாம மொத்த வசனத்தையும் பேசி முடிச்சிடலாம்”.
அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் மேடை ஏறினான். தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் என்று தேடியவனின் கண்ணுக்கு வேறெவரும் தெரியவில்லை. பார்வையாளர் மாடத்தில் அழகு குலுங்க உட்கார்ந்திருந்த அவள் மட்டும்தான் அவன் கண்ணுக்குத் தெரிந்தாள். அவளுக்கும் அக்கம்பக்கம் உட்கார்ந்தவர்கள் யாரும் தெரியவில்லை. மேடையில் நின்ற அவன் மட்டும்தான் தெரிந்தான்.
அவன் கண்கள் அவளை நோக்கின. அவள் கண்கள் அவனையே பார்த்தன. இமைக்காமல் பார்ப்பார்களாமே தேவலோகத்து ஆட்கள்? அவர்களே ஆச்சரியப்படும்படி, கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும். கண்ணின் வழியே நெஞ்சம் நுழைந்த காதல், உடலெங்கும் குறுகுறுத்தது. ஒரு குடம் தளும்ப பால் இருந்தாலும், அதில் ஒரு துளி மோர் பட்டால், மொத்த பாலும் தயிராகிவிடும். அவர்களின் கண் பார்வை பட்டதும், காதல் நெஞ்சத்தில் ஊறிய பால், காமத்தில் தோய்ந்து தயிரானது. உடலின் ரத்த ஓட்டத்தில் ரசாயன மாற்றம் நடப்பதை அவனுக்குள் புகுந்திருந்த அவளும், அவளுக்குள் ஊடுருவிய அவனும் உணர்ந்துகொண்டனர். வாய், வசனம் பேசுவதைக்கூட உணராமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவருக்கும் கண்களே வாய்களாகி ஒருவரையொருவர் பார்வையாலேயே சாப்பிடத் தொடங்கினர்.
உதட்டின் சுவையும் அரவணைப்பின் சுகமும் உடல் தரும் கிளர்ச்சியும் கண்கள் வழியே உள்ளம் வரை கரை மீறிய வெள்ளமாக வழிந்தோடின. நாடகக் காட்சி மேடையில் அரங்கேற, மனதின் மேடையில் அவனும் அவளும் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
காகிதக் கணைகளால் சூழ்ந்த அரங்கில் அவனும், கூர்மையான போர்வாள் போன்ற கண்களைக் கொண்டு ஊடுருவி பார்த்த அவளும் அறுவை சிகிச்சை ஏதுமின்றி இதயம் மாற்றிக் கொண்டு, காதல் இன்பத்தில் கரைபுரண்டனர்.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.
....... ....... .....
...... ....... .....
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.
வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும்.
இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார்.
கம்பராமாயணம்- பாலகாண்டம்- மிதிலைக் காட்சிப் படலம்
(பாடியவர்- சேக்கிழார் அல்ல)
No comments:
Post a Comment