தந்தை பெரியாரைக் கொண்டாடியது ஒரு காலத்தில் அறிவுலகச் செயல்பாடாக இருந்ததைப்போல், அவரை இழிவாகப் பேசுவது தற்போதைய அறிவுலகச் செயல்பாடு என்பதைப்போல் ஆகிவிட்டது. இது ஒரு வக்கிரம் என்பார் ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யா.
நாம் பெரியாரை எவ்வளவு வாசித்தோம், எவ்வளவு உள்வாங்கினோம். என்பதை நமக்கு நாமே சிந்தித்துவிட்டு, பிறகு பழிப்பதைத் தொடரலாம். சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டு வாழ்ந்த மனிதன் அவர். பொது வாழ்வில் இருந்த காலங்களில் அவரின் ஓய்வு காலம் என்பது மிக மிகக்குறைவு. அத்தனை உழைத்த, அத்தனை பேசிய ஒரு மனிதனைப் போகிறபோக்கில் சிறுபிள்ளைத் தனமாக இழித்துரைக்க மிகக் குறுகிப்போன மனங்களால் மட்டுமே இயலும்.
எவ்வளவு வாசித்தாலும் மிச்சமிருப்பார் தந்தை பெரியார். எவ்வளவு உள்வாங்கினாலும் மிச்சமிருப்பார் அவர். அவரென்ன புனித பிம்பமா எனக் கேள்வி வரலாம், வள்ளுவனுக்கு விழா எடுத்த பெரியார் தான், கற்பு நெறி பற்றி வள்ளுவனோடு முரண்பட்டார். எதையும் அப்படியே ஏற்றுக் கொண்டவரில்லை அவர், தன்னையும் அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொன்னவரில்லை. எனவே கருத்து வேறுபாடுகளை விவாதிக்கலாமே தவிற, அவரைக் கற்காமலேயே நமது அறிவாற்றலைக் காட்டுகிறோம் என்று இழித்துரைத்துக்கொண்டிருப்பது என்ன நியாயமோ புரியவில்லை.
அவர் சிந்திக்காத துறை உண்டா என்றே சந்தேகம் வருகிறது. மனிதனின் எல்லாச் செயல்பாடுகளைப் பற்றியும் சிந்தித்த மிகச்சில ஆளுமைகளில் பெரியார் முக்கியமானவர். இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பிறகும் பெரியாரைக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இவ்வளவையும் ஒரு மனிதர் எப்படிச் சிந்தித்தார் என்கிற வியப்பு அப்போதும் மிஞ்சும்.
ஒரு வெளிநாட்டு ஊடகக் குழு பெரியாரை நேர்காண வந்திருந்ததாம். நேர்காணல் முடிந்த பிறகு அந்தக்குழுவினர் அவரிடம் உங்கள் கருத்துக்கள் எங்களை மிகவும் ஈர்த்திருக்கின்றது என்றார்களாம். நல்லது என் கட்சி பலப்பட்டிருக்கிறது என்றாராம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சக்தி இருப்பதை நம்புவது எங்களுக்கு சௌகரியமாக இருக்கிறது என்றார்களாம். நல்லது நீங்கள் முச்சந்தியில் நிர்வாணமாக நிற்கிரீர்கள் என்கிறேன் நான், அது உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதென்றால் நான் என்ன செய்யட்டும் என்றாராம்.
அவர் எதற்கும் அஞ்சியதாகப் பதிவுகள் இல்லை. நாம் இப்போது வாழ்கின்ற சுயமரியாதை வாழ்வின் சிற்பி அவர் என்பதை மறுக்கவே முடியாது. அப்படி யாராவது மறுக்கிறோம் என்றால் அந்த அஞ்சாமையைப் போதித்தவரும் அவர்தான் அய்யமில்லை.
மனிதனை மனிதனாகப் பார்ப்பதற்கு நமக்கு பெரியாரின் கண்கள் வேண்டும். சக மனிதனை ஆயிரம் பாகுபாடுடன் நடத்திய காலத்தில் துவங்கி இன்று வரை அவரின் கருத்துக்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது மனிதம் காக்க. அண்ணல் அம்பேத்கரையும், மாமேதை மார்க்ஸையும், தந்தை பெரியாரையும் தவிர்த்துவிட்டு நாம் வாழமுடியும். மனிதனாக வாழமுடியுமா என்பதுதான் கேள்வி.
இவர்கள் மூவரின் கருத்துக்களைக் கொண்டுதான் நாம் இன்று ஏற்பட்டிருக்கிற அரசியல் நெருக்கடிகளையும் கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்படும் சவால்களையும் எதிர்கொண்டாக வேண்டும். பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட இந்தக் கருத்தியல்கள் மனிதம் என்கிற ஒற்றைப் புள்ளியில் வலுவாக இணைந்திருக்கின்றன. அந்தப் புள்ளியை உள்வாங்கி அரசியல் புரிதலோடு நாம் நம்மை கூர்தீட்டிக் கொள்ளவில்லை என்றால். பெரியார் காலத்திற்கு முன்பு, அம்பேத்கர் காலத்திற்கு முன்பு, மார்க்ஸ் காலத்திற்கு முன்பு இருந்த ஓர் உலகத்தை நோக்கிப் பயணிக்கவேண்டிய கெடுவாய்ப்பு நமக்கு முன்னால் நடுநாயகமாக இருக்கிறது.
இவர்கள் மூவரும் இணைந்திருக்கிற ஓவியங்கள் சிலகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் வருகின்றன. அந்தப்படங்களைக் கிண்டல் செய்பவர்களும் இங்கே இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த ஒன்றுபடுதலின் அவசியம் புரியவில்லையா அல்லது அவ்வாறு ஒன்றுபட்டுவிட்டால் தங்கள் பிழைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்கிற அச்சமா என்று நமக்குக் கேள்வி இருக்கின்றது. அவர் சிலையை உடைப்போம் என்று அறிவிப்பதே வீரம் என்று எதிரிகள் கருதுமளவு கருத்தியலாக இறங்கி இருக்கிறார் தந்தை பெரியார்.
இப்படிப் பகுத்து ஆய்ந்து இவர்களை அடையாளம் காண்பதற்கான வழிமுறையைக் கூட நமக்கு நீலமும், கருப்பும், சிவப்பும் தான் கற்றுக்கொடுத்திருக்கின்றன. இன்றைக்கும் காவி தன் விசத்தைக் கக்கும்போதெல்லாம் கைத்தடி தான் விசம் முறிக்கப் பயன்படுகிறது. நீங்கள் அவரிடம் வேறுபடுவதற்கான காரணம் ஒன்றே ஒன்று இருக்குமாயின், அவரைப்பின்பற்றவும் ஒரே ஒரு காரணமாவது இருந்தே ஆகும்.
வாழ்ந்தபோதும், வாழ்க்கைக்குப் பிறகும் நம் எதிரிகள் யாரென அடையாளப் படுத்திக்கொண்டே இருக்கிற எம் பெரியார் பகுத்தறிவுப் பகலவன் இன்னும் ஒளி கூடிக்கொண்டே இருப்பார். அவர் பிறந்தநாளான இன்று நீங்கள் ஒன்றை மனதில் இறுத்துங்கள் இனி பெரியாரைப் பின்பற்றவோ, பழிக்கவோ, உடன்படவோ, முரண்படவோ அவரை முதலில் வாசியுங்கள். அவர் எழுத்துக்களையும், அவரைப்பற்றிய எழுத்துக்களையும், அவர் பெருமைகளையும், அவரைப்பற்றிய குற்றச்சாட்டுக்களையும், அதற்கான அவரது விளக்கங்களையும், மறுப்புகளையும் தேடித்தேடி வாசியுங்கள். பிறகு விவாதியுங்கள், வாதாடுங்கள், தெளிவு பெறுங்கள். யார்கண்டது நீங்களும் கூட அவரது அடுத்த பிறந்தநாளுக்கு ஒரு கட்டுரை எழுதலாம். அந்த ஆய்ந்து தெளியும் அறிவைத்தான் பகுத்து அறியும் பண்பைத்தான் மனிதனிடம் அவர் எதிர்பார்த்தார்.
ஆன்மன்
17.09.2018
No comments:
Post a Comment