கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் இனி நாம் என்னென்ன செய்ய முடியும்?
[1] தொடர்ந்து போராடுவோம்:
குறுகிய கால--மக்கள் திரள்—நேரடி--கள நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். வெற்றி-தோல்வியைப் பற்றி கவலைப்படக் கூடாது. பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுவது போல வெற்றி வீடு தேடி வரும் என்று கருதக்கூடாது. இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்று உறுதியாக எண்ணிக் கொண்டு ஒரு கரும யோகியாகவே செயல்பட வேண்டும். “கற்பி, ஒன்று சேர், போராடு (Educate, Organize, Agitate)!” எனும் புரட்சியாளர் அம்பேத்கர் மந்திரத்தை மனதிற்கொண்டு முன்னேறுவோம்.
[2] மக்களுக்குத் தோள்கொடுப்போம்:
அரசுக்கு, அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடுகிற அதே வேளையில், மக்களுக்கு, பாதிப்புக்குள்ளாகிறவர்களுக்கு ஆதரவாகவும் இயங்க வேண்டும் நாம். இங்கே நமது மந்திரம்: “காத்துக் கொள், அணியமாக்கு, தொடர்ந்து செல் (Protect, Prepare, Proceed)” என்பதாகத்தானிருக்க முடியும்.
[3] காத்துக் கொள்வோம்:
[i] மக்களை, பிற உயிர்களை காத்துக் கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அவ்வப்போது காற்று, நீர், கடல் வழி வெளியேறும் கழிவுகளை, கசிவுகளை, கதிர்வீச்சை அவதானிக்கத் தேவைப்படும் கருவிகளோடு, மக்களைக் காக்கும் “அவதானிப்பு நிலையங்கள்” (Monitoring Stations) ஆங்காங்கே நிறுவப்பட வேண்டும்.
[ii] அணுமின் நிலையம் முறையாக செயல்படத் துவங்கும்போது மக்களை, பிற உயிர்களை பல்வேறு நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் ஒப்பீடு செய்து பார்ப்பதற்கு, இந்த நிலையம் இயங்கத் துவங்குவதற்கு முன்பிருந்த சுற்றுச்சூழல், மக்கள் உடல்நலம் பற்றி நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். இம்மாதிரியானத் தரவுகளை (Baseline Data) நாம் சேர்த்து பாதுகாத்து வைக்க வேண்டும்.
[4] அணியமாக்குவோம்:
[i] கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தகவல்களை, செய்திகளை, சங்கதிகளை, சங்கடங்களை, கோளாறுகளையெல்லாம் சேகரிக்கும், தொகுக்கும், தொடர்புபடுத்தும், ஆய்வுகளுக்கு உதவும், மக்களுக்கு அறியத்தரும் ஓர் “ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் மையம்” (Documentation and Information Centre) ஏற்படுத்தப்பட வேண்டும்.
[ii] கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடக்கும், நடக்கவிருக்கும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளவும், செய்திகளை மக்களுக்கு முறையாகக் கொண்டு செல்லவும் உதவும் வகையில் அவ்வப்போது ஊடகத் தோழர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏனையோருக்கும் “ஊடகப் பயிற்சி மற்றும் தகவல் முகாம்கள்” (Media Training and Information Campaign) நடத்தப்பட வேண்டும்.
[iii] இந்திய ஆளும் வர்க்கம் மிகப் பெருமளவில் அணுமின்சாரம் தயாரிக்கத் திட்டமிடும்போது, கல்வியறிவற்ற, காரண காரியங்கள் எதுவும் அறியாத நமது மக்களுக்கு அணுமின் நிலையங்கள், அணுவாயுதங்கள், யுரேனியச் சுரங்கங்கள், கதிர்வீச்சுக் கழிவுகள், அணுமின் நிலையங்களை செயலிழக்கச்செய்தல் போன்றவை பற்றியெல்லாம் நாம் சொல்லிக் கொடுத்தாக வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இந்தப் பணிகளை செவ்வனேச் செய்ய மாட்டார்கள். ஏற்கனவே அணுசக்தித் துறையின் செயல்பாடுகள் முழுவதுமாக மூடிமறைக்கப்படுகின்றன. துணுக்குத் தகவல்களையும், அரைகுறை உண்மைகளையும், அப்பட்டமானப் பொய்களையும் பேசும் இந்தத் துறைக்கு திறந்தவெளித் தன்மையோ, பொறுப்புணர்வோ, சனநாயகப் பண்புகளோ அறவே கிடையாது. இவர்கள் எதிர்ப்பை சகித்துக் கொள்ளாதவர்கள், எதிரிகளை அழிக்கத் துடிப்பவர்கள், பயத்தின் உதவியோடு மக்களைக் கட்டுப்படுத்த முனைகிறவர்கள்.
இலாப வெறியோடு அலையும் பன்னாட்டு நிறுவனங்களும், இரகசியத் தன்மையோடு இயங்கும் அரச இயந்திரமும், எதேச்சாதிகாரப் போக்கு கொண்ட அணுசக்தித் துறையும் கைகோர்த்தால், பாமர மக்கள் பாழுங்கிணற்றுக்குள் தள்ளப்படுவார்கள். இந்த முதலாளித்துவ-அரசத்துவ-அணுத்துவக் கலவை மீனவர், தலித், சிறுபான்மையினர் போன்ற விளிம்புநிலை மக்களை வீழ்த்தி அழித்துவிடும்.
எனவே அணுசக்தித் தொடர்பான தொழிற்சாலைகள் கடலோர மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகள் மீதும், உட்பகுதி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து உரிமைகள் மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாலைகள் அருகே வாழும் விளிம்புநிலை மக்களின் பொருளாதார, உணவு, ஊட்டச்சத்துத் தணிக்கை (economic, food and nutrition audits) அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். இந்த ஆபத்தான பகுதிகளில் வாழும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், கால்நடைகள், வனவிலங்குகள், பறவைகள், மரம் செடி கொடிகள், பயிர்கள் போன்றவற்றின் மீதான கதிர்வீச்சுத் தாக்கங்கள், நோய்வாய்ப்படுதல், பாதுகாப்புக் குறைகள் போன்றவற்றைத் தொடர்ந்து ஆய்வுசெய்து, அவதானித்துக் காத்துக்கொள்ள வேண்டும்.
இம்மாதிரி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அறிவியலாளர்களும், மீன்வள நிபுணர்களும், விவசாயிகளும், ஊட்டச்சத்து விற்பன்னர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் அணியமாக இருந்தாலும், தேவையானத் தகவல்களை சேகரிக்க, ஆவணப்படுத்த, அணுவிசை எதிர்ப்பு குழுக்களுக்குக் கொடுத்து உதவ ஆய்வு மையங்கள் தேவைப்படுகின்றன. அணு இயற்பியல் (Nuclear Physics), அணுப் பொருளாதாரம் (Nuclear Economics), அணு அரசியல் (Nuclear Politics) போன்ற நுண்ணறிவு விடயங்களை சாதாரண மக்களும் தெரிந்து, புரிந்துகொள்ளும் வகையில் தகவல்களை சேகரித்து, இந்தியாவின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்த்து, துண்டறிக்கைகளாக, சிறு வெளியீடுகளாக, புத்தகங்களாக வெளியிட வேண்டும். இன்னோரன்ன வேலைகளைச் செய்ய “அணுசக்தி கண்காணிப்பகங்கள்” (Nuclear Energy Watch Services, NEWS) தொடங்கப்பட வேண்டும்.
[5] தொடர்ந்து செல்வோம்:
இடிந்தகரையில் நடந்தது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மட்டும் எதிரானப் போராட்டமல்ல. இது கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் மற்றும் அங்கே நடக்கும் விரிவாக்கத்தை எதிர்க்கும் போராட்டம். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அகில இந்திய அணுக்கழிவுக் கிட்டங்கியாகப் போகும் சதியை எதிர்க்கும் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கிராமத்திலுள்ள அணுவாற்றல் எரிசக்தி மையத்தின் (Nuclear Fuel Complex) சிர்க்கோனியம் ஆலையை (Zirconium Complex) மூடச் சொல்லும் போராட்டம். உலக நாடுகள் அனைத்தும் அணுவாயுதங்களை அழிக்கக்கோரும் போராட்டம். ஒட்டுமொத்த அணுசக்திக்கு எதிரானப் போராட்டம். இந்தியாவின் தவறான எரிசக்தி கொள்கைக்கு எதிரானப் போராட்டம். அணுசக்தியற்ற தமிழகம், இந்தியா, தெற்காசியா, உலகம் போன்றவற்றை உருவாக்குவது இடிந்தகரை மக்களும், கடலோர மக்களும், கடற்கரையோர மக்களும், போராட்டக் குழுவிலுள்ளோரும் மட்டுமேக் கவலைப்படக்கூடிய விடயமல்ல. இது ஒரு பரந்துபட்ட, நீண்டகாலப் போராட்டம்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் பதினைந்து பேர் கொண்ட போராட்டக்குழுவும், இடிந்தகரை எனும் ஒரு சிறிய கிராமமும், எங்கள் பகுதி மீனவ மக்களும், விவசாயிகளுமாக சுமார் 1,550 நாட்கள் இந்தப் போராட்டத்தை இழுத்து வந்திருக்கிறோம். இனி தமிழகமெங்குமுள்ள சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள் இதை ஏற்று நடத்த முன்வரவேண்டும். மேலே குறிப்பிட்டது போல, நீண்ட கால--கருத்துத் திரள்—மறைமுக—அரசியல் நடவடிக்கைகளை நாம் அனைவருமாக மேற்கொண்டாக வேண்டும்.
எரிசக்தி, அணுசக்தி போன்ற கொள்கைகளை மாற்றுவதற்கு அரசியல் மற்றும் அரசக் கொள்கை ஆதரவுத் தேடல்கள் (Political and Policy Lobbying) நடத்த வேண்டும். வாசிக்கும், வளமாக சிந்திக்கும், வாதிக்கும் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் அரசக் கொள்கைகள் பற்றிய விவாதம் நடத்த வேண்டும். இடிந்தகரை போராட்டத்தின் காரணமாக அணுசக்திக்கு எதிராக நிலைப்பாடு எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் அரசியல் தளத்தில் கருத்துப் பரப்பல் முதல் தேர்தல் பிரச்சினையாக்குவது வரை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
அனைத்து அணுசக்தித் திட்டங்களைப் பற்றிய ஒரு பரந்துபட்ட தேசிய விவாதம் நடத்துவோம். நாடெங்கும் நிறுவப்படவிருக்கும் திட்டங்கள் பற்றிய கீழ்க்காணும் அறிக்கைகளை ஆங்கிலம், இந்தி, மற்றும் உள்ளூர் மொழிகளில் தயாரித்து வழங்குவோம்:
• சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை (Environmental Impact Assessment),
• தல ஆய்வறிக்கை (Site Evaluation Report),
• பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report),
• பேரிடர் தயாரிப்புத் திட்டம் (Emergency Preparedness Plan),
• உலைகளின் தொழில் ஆற்றுகை மதிப்பீடு (Concerned Reactor’s Performance Report),
• இழப்பீடு அறிக்கை (Liability Regimes).
இந்திய தேசம் முழுவதும் இந்த அறிக்கைகளை, அணுசக்தித் திட்டங்களின் அபாரமான செலவை; உணவு இழப்பு, ஊட்டச் சத்து இழப்பு மற்றும் நோய்வாய்ப்படுதல் போன்ற மறைமுக விலைகளை; அணுக்கழிவு மேலாண்மைக்கும், செயலிழக்கச்செய்யவும் ஆகும் செலவுகளை; பாதுகாப்புப் பிரச்சினைகளை எல்லாம் விவாதிப்போம். இந்தியாவை அணுசக்திமயமாக்க வேண்டுமா என்று அனைவரையும் கேட்போம். பெரும்பாலானோர் “ஆமாம்” என்று பதிலிறுத்தால், அப்படியேச் செய்வோம்.
ஆனால் மக்கள் கருத்துக்களை அறியாது, அவர்களுக்கு எந்தத் தகவலும் கொடுக்காது, இந்திய ஆட்சியாளர்கள் தங்களின் கமிஷனுக்காக, இந்திய அறிவியலாளர்கள் தங்களின் சுகபோக வாழ்வுக்காக, இந்திய முதலாளிகள் தங்கள் லாபத்துக்காக ஒட்டு மொத்த மக்களையும் ஒரு பேராபத்துக்குள் தள்ள நாம் அனுமதிக்கக்கூடாது.
நம்மைப் பொறுத்தவரை, தொடங்கியதைத் தொடர்வோம். துணிச்சலுடன் நிற்போம். நமது குழந்தைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு எந்தவிதமான தமிழகத்தை, இந்தியாவை, உலகத்தை விட்டுச் செல்ல வேண்டும் என மக்களே முடிவெடுக்கட்டும்!
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
பச்சைத் தமிழகம் கட்சி
No comments:
Post a Comment