களமிறங்கும் அ.தி.மு.க !
கதிகலங்கும் அ.ம.மு.க !
கவண் எடுக்கும் பா.ஜ.க !
----------------------------------------------
ஐந்து மாநில தேர்தல் தோல்வியை சரிகட்ட தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் கனிசமான எம்.பி.தொகுதிகளை அள்ள பா.ஜ.க பல வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த மக்கள் நலக்கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை தமிழகத்தில் தரவில்லை என்றாலும் , இந்திய அளவில் பா.ஜ.க பெற்ற வெற்றி அதை சரி செய்தது.
போனால் போகிறது என்று தமிழ்நாட்டுக்கு போடப்பட்ட எயிம்ஸ் மருத்துவமனை பிச்சையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் மோடி , ரஜினியை சந்திக்கிறார். ஆக வழக்கமான 'வாய்ஸ்' ரெடி.
மோடி தமிழ் மண்ணில் கால் வைக்கும் போது , தினகரன் தவிர்த்த அ.தி.மு.க அ.ம.மு.க இணைப்பு நடைபெற்று இருக்க வேண்டும் என்கிற மேலிடக்கட்டளைக்கு எந்த ஒரு பலனும் இதுவரை கிட்டவில்லை. தமிழ் நாட்டில் ரஜினி வாய்ஸோடு பா.ஜ.க அ.தி.மு.க பா.ம.க மற்றும் கடைசி நேரத்தில் தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சியை இழுத்து அமையப்போகும் கூட்டணிக்கு அ.ம.மு.க இணைப்பு அல்லது உடைப்பு அச்சாணியாகக் கருதப்படுகிறது . காரணம் ஆர்.கே.நகர் தேர்தலை அத்தனை எளிதாக மறக்க யாரும் தயாராக இல்லை.
இனியும் தினகரனை கெஞ்சிப்பயனில்லை என்பதால் , ஜெயலலிதாவின் மரணத்தை கையில் எடுக்கத் துணிந்துவிட்டது அ.தி.மு.க தரப்பு. ஒரு பக்கம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள, அன்வர்ராஜாவை நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக பேச வைத்தது. அதே வேளையில் மாநிலத்தின் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நேற்றைய ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை பல அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதே அ.தி.மு.க அரசு அமைத்த ஆறுமுக சாமியின் விசாரணை இன்னும் முடிந்தபாடில்லை. அதையும் தாண்டிய விசாரணை ஒன்றினை சட்ட அமைச்சரே அவசரமாக கோருகிறார்.
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்துவிடும். வெறும் ஆளுநர் ஆட்சியை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதைவிட, அடிமை அ.தி.மு.க அரசின் ஆதரவோடு , கூட்டணியோடு தேர்தலை சந்திக்கவே பா.ஜ.க விரும்புகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தாமரை தமிழிசை கைப்பையில் மட்டுமே மலர்ந்துள்ளது என்பதை மோடி நன்கு அறிவார்.
அ.ம.மு.கவை உடை , முடியவில்லையா? ஜெயலலிதா மர்ம மரணத்தை சசிகலா தலையில் போடு ....என்பதே கடைசி நேர ஆப்பரேஷன். இதன் மூலம் தமிழக மக்கள் தினகரன் அணிக்கு வாக்களிப்பதை தடுக்க வேண்டும் என்பதே திட்டம்.
இதுவரை இந்திய தேர்தல் ஆணைய வரலாற்றில் இல்லாத அத்துமீறலாக , ஜனநாயகப்படுகொலையாக , காலியாக உள்ள தொகுதிகளைத் தவிர்த்துவிட்டு, திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்திருப்பது , தமிழக கட்சிகளின் உண்மையான பலத்தை சேதாரமில்லாமல் மேலிடம் அறிந்துகொள்ள விரும்புவதையே காட்டுகிறது.
எப்படியோ திருவாரூர் தேர்தல் மீண்டும் தி.மு.கவுக்கு ஓர் அக்னிப்பரிட்சை. இதுவரை தேர்தலில் தோற்காத கலைஞரை , அவரது மரணத்துக்கு பின்பாவது தோற்கடிக்க வேண்டும் என்பதே தற்போதைய திட்டம்.
ஆர்.கே.நகர் தேர்தல் போல் தி.மு.க இம்முறை அசட்டையாக இருந்துவிட முடியாது. மாபெரும் வெற்றி மட்டுமே தி.மு.கவின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும்.
திருவாரூர் தேர்தல் தேரின் உற்சவர்.... யார்?
- தாகம் இதழுக்காக...கரிகாலன்
No comments:
Post a Comment