தந்தையைக் கொல்லத்துணிந்த 'தல' ரசிகன்!!
மீண்டும் சினமா சகதியில் சிக்குகிறதா தமிழகம்?
------------------------------------------------------------------
'தன் ரசிகர்கள் சமூக விழிப்புணர்வு பெற வேண்டும். எதிர்காலத்தில் அரசியலிலும் பங்குபெற வேண்டும் . தனக்கும் கட்டவுட் வைக்க வேண்டும். அதிக விலை கொடுத்து டிக்கெட்டும் வாங்க வேண்டும்' என்று நினைக்கும் நடிகர்களின் ரசிகர்கள் யாரும் வாங்காத கெட்ப்பெயர்கள் அனைத்தையும் நேற்று ஒரே நாளில் அஜித் ரசிகர்கள் வாங்கினார்கள்.
கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும்போது விபத்து ! படம் பார்க்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரிப்பு ! திரையரங்கில் இடம் பிடிக்க ஏற்பட்டத் தகராறில் கத்திக்குத்து ! இத்தனையும், 'தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம்' என்று கட்டளையிட்ட ஒரு நடிகரின் ரசிகர்களுக்கு நிகழ்ந்துள்ளது என்று சொன்னால், யாராவது நம்புவார்களா ?
அஜித்துக்கான சம்பளமே, முதல் மூன்று நாள் அவர்கள் ரசிகர்கள் செய்யும் ரணகலத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. பெயருக்கு தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொன்ன அஜித், இதுவரை நேற்று நடைபெற்ற சம்பவத்துக்கு எவ்வித பதிலையும் தரவில்லை. குறைந்தபட்சம் தனக்காக அழியும் ரசிகர்களுக்கு அறிவுரை கூட சொல்லவில்லை.
ஒரு நடிகன் தொடர்ந்து முன்னணி இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள ரசிகர்கள் எனும் அப்பாவிகள் மிக மிக அவசியம். ரசிகர்களை தாண்டி பொதுவானவர்களுக்கு அஜித் மீதுள்ள மரியாதையே , அவர் மற்ற நடிகர்களைப்போல் தன் ரசிகர்களை உபயோகப்படுத்திக்கொள்வதில்லை என்ற நற்பெயர்தான். ஆனால், அது உண்மையா? என்றுப்பார்த்தால் , பொய் என்றே பதில் வருகிறது.
தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்ட அஜித்தின் ரசிகர்களை யார் ஒருங்கிணைக்கிறார்கள் ? அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரும் தயாரிப்பாளரா ? தொடர்ந்து அவர் படத்தை இயக்கும் இயக்குநரா ? அவர் படத்தை வெளியிடும் விநியோஸ்தர்களா? அஜித்தின் பி.ஆர்.ஓவா? அல்லது ஊடகங்களா ?
படம் பார்க்க தனக்குப் பணம் தர மறுத்த தந்தையை எரித்துக்கொள்ளத் துணிந்த அஜித்குமார் என்ற அஜித் ரசிகர் நேற்று எழுப்பிய அதிபயங்கர அதிர்வலையே நம்மை இத்தனைக்கேள்விகளை கேட்க வைக்கிறது.
ரசிகர்கள் தரும் பணத்தில் தனக்கு சம்பளம் மட்டும் வேண்டும். ஆனால், எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம். அவர்களைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை. அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நான் பொறுப்பும் இல்லை என்பது எத்தனைப்பெரிய சுரண்டல்?
'அஜித் ரொம்ப நல்லவர் ' என்று நற்சான்றிதழ் வழங்கும் ஊடகங்கள் ஏன் இந்த கேவலமான சம்பவங்களுக்கு அவரை கேள்வி கேட்க மறுக்கின்றன ?
கடந்த சில ஆண்டுகளாகத்தான் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் சமூக அக்கறை கொண்டவர்களாக மாறி வருகிறார்கள் என்று மகிழ்ந்த பலருக்கு, விஸ்வாசம் பேட்டை படங்களின் மூலம் ஊடகங்கள் தரும் முக்கியத்துவம் பெரும் கவலை அளிக்கிறது.
ரஜினியை விட அஜித் ஒரு படி உயரம்....என்ற ஒரு பிம்பத்தை சிலர் வலிந்து கட்டமைப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஒரு பக்கம் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய்காக லட்சக்கணக்கான மக்கள் பிச்சை எடுக்கிறார்கள். கஜா புயலில் சிக்கி சீரழிந்த டெல்டா மக்கள் அகதிகளாக வலம் வருகிறார்கள். எத்த சலணமும் அற்ற அரசியல் கட்சிகள் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கின்றன. பொங்கல் முடியும்வரை பேட்ட விஸ்வாசம் என்ற பாம்பு கீரிப்பிள்ளை சண்டையை காட்ட ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன.
திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு. அதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கு. மெல்ல மாறிவத்த நிலையில் மீண்டும் விசிலடிச்சான் குஞ்சிகளின் கூடாரமாக தமிழகத்தை மாற்ற ஒரு கூட்டம் அலைகிறது. அதுவும் ரசிகர் மன்றமே வேண்டாம் என அறைகூவல் செய்த நடிகரின் மூலம்.
ரசிகர்களை செம்மைப்படுத்துங்கள் அஜித். இல்லை, நடிப்பை நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழர்கள் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்துக்காக பெரும் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் தம்பிகள் உங்கள் கட்டவுட்டில் இருந்து விழுவதை , படம் பார்க்க பணம் தராத அப்பனை கொல்ல துணிவதை, திரையரங்கில் தங்களுக்குள் வெட்டிக்கொள்வதை வேடிக்கைப் பார்க்க மாட்டோம்.
ஏற்கனவே திரை எம்மை சிறைபடுத்தியது போதும்.
- தாகம் இதழுக்காக....கரிகாலன்
No comments:
Post a Comment