எடப்பாடி ஆட்சியில் நடப்பது என்ன?
தமிழக அரசின் வருவாய் துறையில் நடக்கும் அக்கிரமம்!
நில வரைமுறை சட்டத்தின் மூலம் நடக்கும் அதி பயங்கர இமாலய ஊழல் !!
-----------------------------------------------------------------------
# மிக நீண்ட பதிவுதான் .....சகித்துக்கொள்ளுங்கள் , தமிழ்நாட்டின் தலை எழுத்தாயிற்றே ....
நில வரைமுறை சட்டம் (Tamilnadu government Regularisation act) என்பது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அண்மைக்காலமாக பணம் கொட்டும் அட்சயப்பாத்திரமாக உள்ளது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்குவதைத் தடுக்க கொண்டுவரப்பட்ட இந்தச்சட்டம் உண்மையிலேயே பயன் தந்ததா என்பதைப்பார்ப்போம்.
உங்களுக்கு சொந்தமான பட்டா இடங்களில் நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்றாலோ அல்லது நீங்கள் அதை விற்பனை செய்ய வேண்டும் என்றாலோ தமிழக அரசின் வரைமுறை இணையத்தில் ரூபாய் 500 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பதிவான சான்றை உங்கள் நிலம் அல்லது மனைக்கு உரிய அரசு அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அதனுடன் உங்கள் நிலப்பத்திரம் மற்றும் அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். இந்த நொடியில் இருந்துதான் தமிழக அரசின் கொள்ளை ஆரம்பமாகும் . இதோ தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை நமது வாசகர் திரு. ராமமூர்த்தி பகிர்கிறார்....
" நவம்பர் மாதத்தோடு நில வரைமுறை பதிவு மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததால் ரூபாய் 500 செலுத்தி அரசு இணையத்தில் பதிவு செய்ய முயற்சி செய்தேன். எனக்கு இணையம் மூலம் பண பரிவர்தனை செய்ய தெரியாது என்பதால் என் வீட்டு மனை சர்வே எண்ணுக்கான பூவிருந்தவல்லி ஊராட்சி அலுவலகத்தை அனுகினேன். அலுவலகத்தில் பி.டி.ஓ இல்லை. நிர்வாகியிடம் விசாரித்தேன். பி.டி.ஓ தன் மகன் திருமணத்திற்காக விடுமுறையில் இருப்பதால் , உதவி ஆணையரை சந்திக்கச்சொன்னார்கள். அவரைச் சந்திக்கச் சென்றேன்.
" சார், கொரட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சர்வே எண்ணில் என் நிலம் வருகிறது , வீடு கட்ட கடன் கேட்டு வங்கியை அனுகினேன். உரிய அலுவலகத்தில் அப்ரூவல் வாங்கி வரச்சொன்னார்கள்"
உதவி ஆணையர்- சார் ஆணையர் (பி.டி.ஓ) விடுமுறையில் உள்ளார். நான் நேற்றுதான் மாற்றலாகி இங்கு வந்திருக்கிறேன். இந்த அலுவலகத்தின் கீழ் வரும் ஊர்களை பற்றி நான் தெரிந்துகொள்ள இரண்டு நாள்கள் ஆகும்.நீங்கள் நிர்வாகியைப் பாருங்கள் "
நிர்வாகி அறைக்குள் நாம் நுழைய..நம்மை பல கரை வேட்டிகள் சூழ்ந்தன , 'சார் என்ன மேட்டர் சொல்லுங்க' என்றபடி நெருங்கின.
நிர்வாகியிடம் மீண்டும் அனைத்தையும் நான் ஒப்பிவிக்க....
நிர்வாகி - சார் ...உங்க மனை மெயின் ரோட்டில் வருவதால் நீங்கள் சி.எம்.டி.ஏவுக்குதான் அப்ளை பண்ணனும். முதல்ல ஒரு லைசன்ஸ்டு சர்வையர பாருங்க. அவர் உங்கள கைட் பண்ணுவார்.
நான் - இங்க யாரும் சர்வையர் இல்லையா சார்.
நிர்வாகி- அதோ அங்க ஒருத்தர் நிக்கராரு பாருங்க. அவருக்கு தெரியும்.( அவர் கைகாட்டிய இடத்தில்...நம்மை மடக்கிய கரை வேட்டி)
கரைவேட்டி - அப்பவே கேட்டேன். நீங்க நேரா வளசரவாக்கம் போங்க. இந்த முகவரியில் ஒரு மேடம் இருப்பாங்க. எல்லாம் அவங்களே பாத்துப்பாங்க .
அவர் சொன்ன வளசரவாக்கம் முகவரியை தேடி அலைந்து கண்டுபிடித்தேன். 35 வயது மதிக்கத்தக்கப் பெண்மணி வாசலிலேயே நம்மை வரவேற்றார். நம்மை போல் பலர் அவர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
சர்வையர் பெண் - சார், நீங்க வருவீங்கன்னு சொன்னார். ரெகுலைரைசேஷன் முடிய இன்னும் மூனு நாள்தான் இருக்கு. 1000 ரூபாய் கொடுங்க. இப்பவே அரசு இணையத்தில் பதிவு பண்ணிடலாம்.
நான்- 500 ரூபாய்ன்னு சொன்னாங்களே மேடம்.
பெண்- கவர்மெண்ட பீஸ் ஒன்லி 500. என் பீஸ் 500. சீக்கிரம் கொடுங்க. நிறைய பேர் வெயிட்டிங்.
வேறு வழி இன்றி பணம் தந்தேன்
பெண்- நீங்க கிளம்புங்க. உங்க மொபைல் எண்ணுக்கு அரசிடமிருந்து மெசேஜ் வரும். நாளைக்கு வரும்போது உங்க மனையோட பட்டா, சிட்டா, அடங்கல், எப்.எம். ஸ்கெட்ச் , 30 வருஷம் ஈ.சி எல்லாம் கொண்டாந்திருங்க. ஈ.சி . வேணும்முன்னா 500 கொடுத்திட்டுப் போங்க . நானே நெட்ல அப்ளை பண்ணிடறேன். ( மீண்டும் 500 கொடுத்தேன் ) மத்த டீடெய்ல்ஸ் நாளைக்கு சொல்றேன்.
மறுநாள் அவர் கேட்ட பத்திரங்களுடன் சென்றேன்.
நான்- மேடம் என் மனைக்கு பக்குத்துல ரெண்டு செண்ட் இடம் எனக்கு இருக்கு. என் மகளுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு. எடத்த வாங்க ஒருத்தர் தயாரா இருக்கார். ஆனா ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பதிவு பண்ண மாட்றாங்க. அந்த எடத்துக்கும் அரசோட ரெகுலரைசேஷன் வாங்கனும்மாம்.
பெண்- நேத்தே இந்த மேட்டர சொல்லி இருக்கலாம்ல. அதுக்கும் 1000 கொடுங்க. ஆன்லைன்ல ரெஜிஸ்டர் பண்ணிடலாம். இப்ப டோட்டலா உங்களுக்கு ரெண்டு ரெகுலைரைசேஷன் பண்ணணும். ஒரு மனை டிராயிங்குக்கு 7000 சார்ஜ். ரெண்டு மனைக்கு 14000. ஆன்லைன் பதிவுக்கு 2000. ஈ.சிக்கு 1000. பி.டி.ஒ ஆபிஸ் செலான் கட்ட 500 + 500 = 1000. பில் போடுபவருக்கு 1000. ஒரு மனைக்கு பி.டி .ஓக்கு 5000. சி.எம்.டி.ஏ. பிளானருக்கு 5000. உங்க இடம் இன்ஸ்பெக்ஷனுக்கு 2000. டோட்டலா 37000. இந்த ஒர்க் முடிஞ்ச உடனே ஒரு மனைக்கு கவர்மெண்ட் பீஸ் டி.டியா கொடுக்கனும். அதுக்கு எப்படியும் 20000 வரும். டோட்டலா 57000. 50 % இப்பக் கொடுங்க. மீது டி.டி.எடுக்கும்போது கொடுங்க.
அதிர்ந்துப்போனேன் நான். என் வீட்டு பட்டா இடத்தை விற்க, வீடு கட்ட நான் ஏன் இத்தனை ஆயிரம் செலவு செய்ய வேண்டும்?
அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வந்தததே விவசாய நிலங்களை வீட்டு மனையாகாமல் தடுக்கத்தானே. என் நிலம் விவசாய நிலமே கிடையாதே.
2000 செலுத்தி அரசு இணையத்தில் அந்த பெண் மூலம் பதிவு மட்டும் செய்து கொண்டேன். பிளான் வரைய வேறு வழி இல்லாமல் 12000 தந்தேன். அவர் தந்த பிளான் மற்றும் பத்திரங்களோடு மீண்டும் பூவிருந்தவல்லி ஊராட்சி அலுவலகம் சென்றேன். நிர்வாகியை சத்தித்தேன்.
நிர்வாகி- மேடம பாத்தீங்களா ? அவங்களே முடிச்சிருப்பாங்களே. ஏன் நீங்க அலையறீங்க? உங்க இஷ்டம். அதோ அவர்கிட்ட பணம் கட்டுங்க.
மிக நீண்ட வரிசை. காத்திருத்து இரண்டு வீட்டு மனைக்கும் பத்திரம் மற்று பிளானுடன் 1000 ரூபாய் கொடுத்தேன். பத்திரங்களை ஒரு ஓரமாக தூக்கி எறிந்தார் அவர். பணத்தை மட்டும் பத்திரமாக பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.
நான் - சார் பணம் கட்டிய சலான்...
பியூன் - அடுத்த வாரம் வாங்க பாக்கலாம்
நான்- அடுத்த வாரமா ?
பியூன் - நான் ஒரு ஆள்தான். எத்தன வேலைய பக்குறது (அவர் சொல்லும்போதே சிலர் அவர் கையில் 500 ரூபாய் திணித்தனர். நானும் திணித்தேன்)இரண்டு நாள் கழித்து வரச்சொன்னார் சிரித்தபடி.
இரண்டு நாள் கழித்து....
பியூன் - சார் நாளைக்கு வாங்க. ஒர்க் லோட் ஓவர்.
மறுநாள்
பியூன் - இன்னும் பில் போடல சார். ( அவரைச்சுற்றி கரை வேட்டிகள். அ.தி.மு.க + தி.மு.க இடைத்தரகர்கள் ) உள்ளிருந்த நிர்வாகி நம்மைப் பாவமாகப் பார்த்தார்.
மகன் திருமணத்தை முடித்த பி.டி.ஓ மீண்டும் அலுவலகம் வந்துவிட்டதாக பேச்சு காதில் பட, பொறுமை இழந்து அவரைச்சந்திக்கச்சென்றேன்.அரை மணி நேர காத்திருப்புக்குப்பின். நடந்தவற்றை கேட்டுக்கொண்டார் அவர். கத்தை கத்தையாக பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார்.பி.டி.ஓ. நம்மைப் பார்த்தவுடன் சலிப்புடன் பேசினார்.
பியூனை அழைத்த அவர்...
" என்ன, சார் கிட்ட சலானுக்கு பணம் வாங்கிட்டு ஏன் பில் தர மாட்ற ? "
பியூன் - சார் நான் ஒரு ஆள் எத்தன வேல பாக்குறது. உங்களுக்கு டீ வேற வாங்கி வரச்சொன்னாங்க ( நக்கலாக பதில் அளித்தார் நம்மை முறைத்தபடி )
அவர் சலான் ரெடி . மேனேஜர் கையெழுத்துப் போடனும். அவர் மலைக்கு போய்ட்டார்...புது குண்டைப்போட்டார் பியூன்.
பி.டி.ஓ நம்மைப்பார்த்தார். ஒரு வாரம் கழித்து நாம் வர வேண்டும் என்று அவர் பார்வை சொன்னது.
மீண்டும் ஒரு வாரம் கழித்து.
பல நேர காத்திருப்புக்குப்பின் ஒரு வழியாக மாலை 6 மணிக்கு நம் கைக்கு சலான் வந்தது.
ஒருவாரம் கழித்து மீண்டும் அதே அலுவலகம்.
பியூன் நம்மை ஏற இறங்கப்பார்த்தார்
நான் - சார் என் பைல் என்னாச்சி ?
பியூன் - ஒரு வாரம்தான ஆச்சி. போய்ட்டு பத்து நாள் கழிச்சி வாங்க. போம்போது பி.டி.ஓ கிட்ட கம்ளைன்ட் பண்ணிட்டுப்போங்க என்றார் நக்கலாக.
மீண்டும் 10 நாள் கழித்து....
இந்த முறை நேரடியாக பி.டி.ஓவை சந்திக்க சென்றேன். மீண்டும் பல மணி நேரக் காத்திருப்பு.
பி.டி.ஓ- (மீண்டும் கத்தை கத்தையாக பணம் எண்ணிக்கொண்டிருந்த பி.டி.ஓ நம்மைப்பார்த்ததும் டென்ஷன் ஆனார்)
உங்க பைல் இன்னும் எங்கிட்ட வரல. A3 கலைவாணிக்கிட்ட கேளுங்க.
நாம் உள்ளே சென்று A3 கலைவாணியை தேட...அவரை சுமார் 20 பேர் சூழ்ந்திருந்தனர்.
கலைவாணி - சார் உங்க பைல் சி.எம்.டி.ஏ பிளானர்கிட்ட அனுப்பியாச்சி.
நான்- அவர் எங்க இருக்கார் மேடம் ?
கலைவாணி- சார் அவர் திங்கள்கிழமை மட்டும்தான் வருவார். நீங்க நெக்ஸ்ட் மன்டே வாங்க .
சுவற்றில் மாட்டியிருந்த ஜெயலலிதா படத்தை முறைத்தபடி வெளியேறினேன்.
எதிரில் வந்து கரை வேட்டி சிரித்தபடி சொன்னது...'வளசரவாக்கம் மேடம் கிட்ட கேட்டத கொடுத்திருந்தா இன்நேரம் உங்க பைல் உங்ககிட்ட இருந்திருக்கும்....உங்களுக்கு தேவையா ?' என்றார் !!
உண்மைதான். எனக்குப் பிறகு வந்தவர்கள் எப்போதோ தங்கள் வேலையை முடித்துக்கொண்டனர்.
வெளியே வரும்போது அலுவலக வாசலில் வேகமாக வந்து நின்றது ஓர் அரசுப்பேருந்து . உள்ளே பயனிகள் அமர்ந்திருந்தனர். வேகமாக இறங்கிய ஓட்டுநர் ஊராட்சி அலுவலகம் உள்ளே சென்று, வந்த வேகத்தில் திரும்பினார்.
அவர் பின்னால் ஓடி ....விசாரித்தேன்.
ஓட்டுநர் - சார் வீடு கட்ட பிளான் அப்ரூவலுக்கு மனு போட்டு ஆறு மாசமாச்சி. கேட்ட பணத்தையும் கொடுத்துட்டேன். பிரகாஷ் கிட்ட பணத்த கொடுத்தும் இப்படி இழுக்குறானுங்களே....
நான்- பிரகாஷா யாரது ?
ஓட்டுநர் - பிரகாஷ் தெரியாதா. அவர்தான் இங்க ஆல் இன் ஆல். அவரை மீறி அணுவும் அசையாது.
சொல்லிவிட்டு பேருந்தை ஓட்டிச்சென்றார்.
ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மிகப்பெரும் கட்டுமான நிறுவனங்களின் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். நிமிடத்துக்கு ஒருமுறை அ.தி.மு.க தி.மு.க கொடி போட்ட வாகனங்கள் பறந்து வந்து திரும்பின.
என்னைப் போன்ற அப்பாவிகள் அழுதபடி நின்றனர்.
திங்கட்கிழமை வந்தது....
சி.எம்.டி.ஏ பிளானர் அலுவலகம் முன் நான்தான் முதல் ஆள். காலை 11 மணி. ஆனால் ,அவர் கால்டாக்சியில் வந்து இறங்கியதோ மதியம் 1.30 க்கு. அதற்குள் பல முக்கியஸ்தர்கள் பென்ஸ் மற்றும் ஆடி காரில் அவரைக்கான வந்து விட்டனர். எல்லோரும் சந்தித்துவிட்டு சென்ற பிறகும் பொது மக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
சார் சாப்பிட்றார்
சார் தூங்றார்.....அறிவிப்பு மட்டும்.
சில மணி நேரம் கழித்து உள்ளே அனுமதி. விநாயகரே பேன்ட் சட்டையில் உள்ளே அமர்ந்திருந்தார். அவர்தான் சி.எம்.டி.ஏ பிளானர் ரங்கநாதன் .
ஒரு பத்திரிகையாளர் நண்பரின் விசிட்டிங் கார்டை அவரிடம் நீட்டினேன். அமரச்சொன்னார்.
நம் இரண்டு பைலையும் ஒருவரைத் தேடச்சொன்னார். நெடுநேரம் தேடி எடுத்தார் அவர். அவர்தான் ஆல் இன் ஆல் பிரகாஷ்.
ரங்கநாதன்- ஒகே உங்க பைல் கெடச்சிடிச்சி.நீங்க அடுத்த திங்கள் வாங்க. பேசுவோம். மீண்டும் கண்களை மூடிக்கொண்டார் ஸ்ரீ ரங்கநாதர் !
வெறுத்துப்போய் பத்திரிகை நண்பருக்கு தொலைபேசினேன். அவர் பி.டி.ஓவிடம் பேசினார்.
" சார் ...உங்க நண்பர் இடம் சி.எம்.டி.ஏ லிமிட்ல வருது. ரங்கநாதன்தான் முடிவு பண்ணனும் " என்றாராம்.
அடுத்த திங்கள். இம்முறை ஸ்ரீ ரங்கநாதரை காண மதியமே சென்றேன்.
ரங்கா - வாங்க. உங்க பத்திரிகை நண்பர் பேசினார். உங்க இடத்த பாக்கனும். அடுத்த திங்கள் வாங்க விசிட் பண்ணிடுவோம்...என்றார்
உலகில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தையிலும் தமிழக அரசைத் திட்டித்தீர்த்தேன் ....மனசுக்குள்.
வாசலில் பேருந்து...ஓடி வந்தார் அதே ஓட்டுநர்...." வேல முடிஞ்சிதா ஜி ? பிரகாஷ பாருங்க " உள்ளே ஓடினார்.
அடப்பாவி...பிரகாஷ பாத்து உன் வேலை முடிஞ்சிருந்தா ...நீ ஏன்டா அரசுப்பேருந்தோட அலையற...? மனசுக்குள் மீண்டும் புலம்பினேன்.
அடுத்த திங்கள்....கால்டாக்சியில் ஸ்ரீ ரங்கநாதரை இன்ஸ்பெக்ஷனுக்கு கொரட்டூர் அழைத்துச்சென்றேன். பிரகாஷை அவர் அறையில் விட்டுவிட்டு என்னுடன் வந்தார் ரங்கநாதன். பெயருக்கு என் இடத்தை அளந்தார்.
" பின்னாடி என்ன ஆறா ? "
" ஆமாம் சார் "
திரும்பும் வழியில் நம் பத்திரிகை நண்பர் தொலைபேசியில் ரங்கநாதனுடன் பேசினார்.
' உங்களுக்காகத்தான் உங்க நண்பர் இடத்தை பார்க்க போனேன். பாத்துக்கிறேன்" என்றார்.
தன் உடலை இறக்க முடியாமல் காரில் இருந்து இறக்கினார். அவரைக்கான ஏராளமான லே அவுட் அதிபர்கள் காத்திருந்தனர்.
வழக்கம்போல் நம்மை அடுத்த திங்கள் வரச்சொன்னார்.
அடுத்த திங்கள் வந்தது.
ரங்கநாதன்- உங்க பைல ஸ்டடி பண்ணிட்டேன். பின்னாடி கொசஸ்தலை ஆறு. அதான் யோசிக்கிறேன். நீங்க ஒண்ணு செய்யுங்க. பி.டபிள்யூ.டில ஒரு என்.ஓ.சி வாங்கிவந்துடுங்களேன்.
நான் - என்ன சார் இது அநியாயம். நான் உங்கிட்ட கேட்பது என் வீட்டு மனைக்கான ரெகுலைரைசேஷன். நான் உங்க கிட்ட பில்டிங் அப்ரூவல் கேட்கலையே ? என் பக்கத்து மனைகாரர் சி.எம்.டி .ஏவுல 15 வருஷத்துக்கு முன்னாடியே அப்ரூவல் வாங்கி நாலு அடுக்கு மாடி கட்டி இருக்கார்.
ரங்கநாதன்- அந்த அப்ரூவல் கொடுங்க. உங்களுக்கும் அத வச்சி அப்ரூவல் தரேன்.
சட்டென கையில் வைத்திருந்த பக்கத்து மனையின் அப்ரூவல் காபியை நீட்டினேன். ரங்கா அதை எதிர்பார்க்கவில்லை. இதற்காக அடுத்த திங்கள் என்னை வரச்சொல்லி இருப்பார்.
இருந்தும் ....அடுத்த திங்கள்தான் வரச்சொன்னார்....மீண்டும் ஸ்டடி பண்ண வேண்டுமாம்.
பி.டி.ஓ அலுவலகத்தில் உள்ள அனைவரும் என்னைப்பார்த்து சிரித்தனர்.
" மவனே ....லஞ்சம் தராம நீ அப்ரூவல் வாங்கிடிவியா ? " சிரிப்பின் அர்த்தம் இதுதான்.
அடுத்த திங்களும் வந்தது....அதாவது 2018 நவம்பர் மாதம் தொடங்கி இதோ 2019 ஜனவரி மத்தியிலான திங்கள்....
" சார் உங்க பைல பி.டி.ஓக்கே ரிட்டர்ன் பண்ணிட்டேன். உங்க இடத்துக்கு பின்னாடி ஆறு இருக்கு. சோ என்.ஓ.சி மஸ்ட் !! " தெளிவாக பேசினார் ரங்கநாதன்.
அவர் சொன்ன என்.ஓ.சியின் அர்த்தம் நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் அல்ல ....'எனக்கு நீ லஞ்சம் தரலன்னா....உனக்கு அப்ரூவல் இல்லன்னு' அர்த்தம் ....
ரெகுலைரைசேஷன் இல்லாததால் ராமமூர்த்தியால் தன் இடத்தை விற்க முடியாமல் போனது. மகள் திருமணமும் நின்றுபோனது. வீடு கட்டும் கனவும் பொய்யானது.
சென்னை அருகில் உள்ள பூவிருந்தவல்லி ஊராட்சி அலுவலகத்திலேயே இத்தனைக்கொடுமை என்றால்....தமிழகம் முழுவதும் இந்த நில வரைமுறை சட்டத்தின் மூலம் நடக்கும் கொள்ளை எத்தனை ஆயிரம் கோடிகள் மக்களே? பூவிருந்தவல்லி ஊராட்சி அலுவலகத்தின் ஒரு நாளைய லஞ்சம் 50 லட்சம் என்று கூறப்படுகிறது. 50 லட்சம் × 365 நாள் × தமிழ் நாட்டில் உள்ள ஊராட்சி அலுவலகம் + சி.எம்.டி.ஏ அலுவலகம் கலெக்ஷன்......எத்தனை ஆயிரம் கோடிகள்?
உண்மையில் விவசாய நிலங்களை தமிழக அரசு காக்க எண்ணி இருந்தால், லே அவுட் அதிபர்கள் மட்டுமே இந்த நில வரைமுறை சட்டத்தால் பாதிக்கப்பட்டு இருப்பர். ஆனால், இங்கு கொலை செய்யப்படுவது ஒரு சென்ட் இரண்டு சென்ட் நிலம் வைத்திருக்கும் அப்பாவி மக்கள்.
மனசாட்சி உள்ள நண்பர்கள் இச்செய்தியை பகிரவும்.
இச்செய்தியை பல முன்னணி பத்திரிகை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சொன்னோம். எல்லோரும் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் கலெக்ஷன் ரிப்போர்டிங்கில் பிசியாக இருந்தனர்.
# தாகம் இதழுக்காக ....கரிகாலன்