அது ஒரு கனா..!
---------------------------------
வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா..
இதுவும் அப்படியான ஒரு வீட்டின் கதைதான்..
சில ஆண்டுகள் இருக்கும்..
இரவு நேரம்.. வயல்வெளிகளுக்கு நடுவில் இருக்கும் அந்த கிராமத்திற்குள் நுழைந்தேன்.. என் பால்யத்தின் நினைவுகளை மிச்சம் வைத்திருக்கும் ஊர் அது.
அன்று அந்த ஊரின் முத்தாரம்மனுக்கு கொடைவிழா.. ஊர் எல்லைக்குள் நுழையும்போதே மேளதாள இசையின் ஒலி வரவேற்றது. ஊரே ஜெகஜோதியாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த கொடைவிழாவுக்கு என் வீட்டு பங்கு வரியை கொடுக்க தான் அன்று அந்த ஊருக்கு சென்றிருந்தேன்.
ஊருக்குள் நுழைந்ததும் என் வாகனம் ஒரு பாழடைந்த வீட்டின் முன்றது..
தெருவில் நின்றபடியே அந்த வீட்டை முழுவதுமாக பார்த்தேன். வாசலில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டு சாவி போட்டு திறக்க வாய்ப்பற்ற நிலையில் துருப்பிடித்து பரிதாபமாக தொங்கிக் கொண்டிருந்தது.
மாட்டுத்தொழுவம்.. சமையலறை எல்லாம் நின்ற இடத்திலே அப்படியே புதைந்துப்போயிருந்தது. வீட்டின் ஒவ்வொரு மூலையும் பெரும் விரிசலில் சாய்வதற்காக நாள் பார்த்து காத்திருந்தன..
என் கண் முன் இப்போது வாழ்வதற்கு தகுதியற்றதாக காட்சியளித்த அந்த வீட்டில் தான் நான் என் பால்யத்தை கடந்தேன். அந்த வீட்டின் சுவர்களில் தான் என் முதல் கிறுக்கல் கிறுக்கப்பட்டிருந்தது.
பசங்களோடு சேர்ந்து ஓணான் பிடிக்க போனவனை கூப்பிட்டு கையில் ஒரு கதைப்புத்தகத்தை கொடுத்து ,``மற்ற பசங்கள மாதிரி இல்லாம நாம எப்பவும் ’அலக்கா’ (தனித்துவமா) இருக்கணும்டா..” என்று அந்த வீட்டின் தோட்டத்தில் வைத்து தான் என் தாத்தா எனக்குள் தனித்துவ சிந்தனையை புகுத்தினார்.
எங்கள் வீட்டு லட்சுமி எனும் மாடு பனிகுடம் உடந்து குட்டியை வெளியே தள்ள முக்கிக்கொண்டிருக்க பாட்டி கன்றின் தலையை பிடித்து வெளியே இழுத்துபோட்டதை நேரடியாக பார்த்ததெல்லாம் அந்த வீட்டின் தொழுவத்தில் தான்.
மாட்டு தொழுவத்திலிருந்த நான்கு பசு மாடுகளில் சினையாக இருந்த மாடு ஒன்று ஒருநாள் இறந்துபோனபோது அந்த வீடே கலங்கிப்போய் நின்றது.
ஒருநாள் ஐஸ் கட்டிகளுக்கு நடுவே படுக்க வைத்திருந்த தாத்தாவுக்கு அப்பா மும்பையிலிருந்து வர முடியாத சூழலில் கொள்ளி வைத்ததும் அந்த வீட்டில் தான்.
அதன்பிறகு தனி மனுஷியாக எங்களை பாட்டி வளர்த்து ஆளாக்கியது அந்த வீட்டில் தான். வயலில் கதிர் அறுப்பின்போது பாட்டியுடன் கோபித்துக்கொண்டு இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தாங்க முடியாமல் முன்றாம் நாள் கிடைத்த சோற்றை அள்ளி அள்ளி விழுங்கியதும் அந்த வீட்டில் தான்.
எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கிய வீட்டை விட்டு ஒருநாள் நாங்கள் அனைவரும் மும்பை வந்து அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தோம்.
சில ஆண்டுகளுக்குப்பிறகு வயோதிகத்தின் காரணமாக பாட்டியும் மாடு கன்றுகளை விற்றுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு மும்பையில் எங்களோடு வந்து சேர்ந்து அங்கேயே உடல் நலக்குறைவால் மறைந்தும்போனார்.
என் அப்பா ஒரே ஆண் பிள்ளை. அதனால் அங்கு ரத்த உறவுகள் என்று எவரும் இல்லை என்பதால் பாட்டி காலத்துக்குப்பிறகு அந்த ஊரின் வேர்க்கொடி அறுந்துப்போனது.
``வாய்யா..”னு கூப்பிட உறவுகளற்ற வீட்டுக்கும் ஊருக்கும் யாருக்காக செல்வது.எப்போதாவது அந்த பக்கம் போனால் சும்மா எட்டிப்பார்ப்பதோடு சரி.
கடைசியாக ஊரைவிட்டு வரும்போது பாட்டி போட்ட பூட்டுதான் இப்போது என் கண் முன்னே துருப்பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது.
அந்த இரவின் மங்கலான நிலவொளியில் வீட்டை பார்க்க பார்க்க பாட்டி, தாத்தா, அக்காள்கள், மாடு கன்றுகள் நாய்க்குட்டிகள், தென்னப்பிள்ளை, தோட்டம் முழுவதும் படர்ந்திருந்த பூசணி, வெள்ளரி, சுரைக்காய் கொடிகள் என
வீட்டின் பால்ய நினைவுகள் மனதிற்குள் ஒரு வலியை உண்டு பண்ண ஆரம்பித்தது.
நான் மிகவும் இறுக்கமானவன்..
ஆனால் சுற்றிலும் இருந்த வீடுகளில் உறவினர்களின் வருகையும் மகிழ்ச்சியான உரையாடல்களும் உபசரிப்புகளும் நிறைந்த அந்த ஊரின் பிற வீடுகளுக்கு நடுவே இருந்த அந்த பாழடைந்த வீட்டின் தோட்டத்தில் நின்ற நான், ,``பேரன் இப்படி வீட்டை போட்டுட்டானே”னு என்று தாத்தா பாட்டி மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்.. என்று நினைத்த நொடியில் அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தேன்..
சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டு வெளியே வந்தேன். கோவிலுக்கு சென்று வரியை கொடுத்துவிட்டு அம்மனை கும்பிட்டேன். கரகாட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. கொடை பார்க்கும் ஆர்வம் இல்லாமல் பக்கத்துவிட்டுக்கார சித்தப்பா ஒருவர் இல்லத்தில் அன்றைய இரவை கழித்தேன்.
மதியம் சாப்பிட்டது. பசிக்க ஆரம்பித்தது. சித்தப்பா பலமுறை வந்து சாப்பிட்டச்சொல்லி வற்புத்தினார். ஆனால் ``வரும்போதுதான் சாப்பிட்டேன்.. பசிக்கல..” என்று பொய் சொல்லிவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டேன்.
தூக்கம் வரவில்லை.. பாழடைந்த அதே இடத்தில் வீட்டை கட்டி பாட்டி தாத்தா மனதை மகிழ்ச்சிப்படுத்துறோம் என்று முடிவு செய்தேன்.. அதுவரை இந்த ஊரில் ஒருவர் வீட்டிலும் ஒரு சொட்டு தண்ணீர் குடிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன்..
அதன்பிறகு அந்த ஊருக்கு எப்போது சென்றாலும் சரி ஒருவர் வீட்டிலும் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். இங்க வீட்டைக்கட்டி நம்ம வீட்டில் தான் சமைத்து சாப்பிட வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தேன்.
வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தது. எண்ணம் நிறைவேறாமல் பணத்தட்டுப்பாடு உட்பட ஏதேதோ தடைகள் வந்து கொண்டிருந்தன..
குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு வைராக்கியத்தோடு உழைக்க ஆரம்பித்தேன்..
என் எண்ணத்தை பேராற்றல் நிறைவேற்றியது.
அன்று இரவு நின்றழுத அதே இடத்தில் பாட்டி தாத்தாவின் நினைவாக `பொன்னையா-பாலம்மாள்’ இல்லத்தை கட்டி எழுப்பினேன்..
இதோ..
20 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த வீட்டின் முற்றத்தில் இன்று மீண்டும் பொங்கல் சிறப்பாக பொங்கி வழிந்தது..
என் தாத்தா பாட்டியின் மனம் அந்த பொங்கலைப்போல் பூரித்திருக்கும்..
ஏனெனில் வீடு என்பது வெறும் வீடல்ல...
நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.. :)
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
15-1-19
No comments:
Post a Comment