Thursday, July 12, 2018

எழுத்தாளர் பாமரன்

ஏறக்குறைய முப்பதாண்டுகள் முன்பு....
.
சென்னையில் இருந்து தகவல்கள் வருகின்றன. போராளி அமைப்புகளின் தலைவர்கள் கடும் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும்...
.
ராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் வெகு விரைவில் தங்களுக்குள் ஒப்பந்தம் ஒன்றினை நிறைவேற்றிக் கொள்ள இருப்பதாகவும்...  எண்ணற்ற செய்திகள்.
.
அவ்வேளையில் கோயமுத்தூரில் இருந்த எங்களுக்குள் ஏற்பட்ட ஒரே பேரதிர்ச்சி.....
.
ஒப்பந்தமா?
.
யாருக்கும் யாருக்கும் இடையில்?
.
ஒப்பந்தம் என்றால் சண்டையிடும் இரு தரப்புக்கு மத்தியில்தானே ஏற்பட வேண்டும்.?
.
சமாதானம் செய்து வைக்கும் முயற்சியில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசுக்கு இதில் என்ன வேலை?
.
இந்தியாவின் மத்திய அரசு இதில் சாட்சிக் கையெழுத்துதானே இடவேண்டும். அதைவிட்டு விட்டு ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் மாற்றி மாற்றி கையொப்பம் இட்டுக் கொண்டால் அது எப்படிச் சரியாகும்?
.
யுத்தம் போராளி அமைப்புகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமா?
.
அல்லது  இவர்களுக்குள்ளா?
.
கோபத்தில் கோவை மட்டுமல்ல மொத்த தமிழகமுமே கொதித்தெழுந்தது.
.
யார் கோபப்பட்டு....
யார் கொதித்தெழுந்து...
யார் கூக்குரலிட்டு.... யார் கேட்கப் போகிறார்கள்?
.
அப்படி எவர் கருத்தையும் கேட்காமல் இந்திய ராணுவத்தினை புதை சேற்றில் கொண்டுபோய்த் தள்ளிய வரலாறும்...
.
எண்ணற்ற ஆண்டுகளாய் சிங்கள அரசின் பேரின வெறியால் துயருற்று வந்த ஈழ மக்கள் மேலும் பின்னோக்கி பல்லாண்டுகள் தள்ளி விடப்பட்ட பேரவலமும்தான் இங்கே

“ஈழம் 87 – வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மறம்.” என்கிற  படக்கதைப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது..
.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையே திசை மாற்றிப் போட்ட இந்த உருப்படாத ஒப்பந்தத்தின் காலகட்டமான 1987 ஜூலை தொடங்கி அமைதியின் பெயரால் சென்ற ஆக்கிரமிப்புப்படை வாபஸ் ஆன 1990 வரையிலான நாட்களில் என்னென்ன நடந்தன என்பவற்றை ஆணித்தரமாக புட்டுப்புட்டு வைக்கிறது இந்த 143 பக்க புத்தகம். அதுவும் ஓவியங்கள் வழியாக.
.
எண்பதுகளுக்குப் பிற்பாடு பிறந்தவர்களுக்கு அந்த காலகட்டத்திய சம்பவங்களைச் சொல்லும் இந்த நூல் நிச்சயம் ஒரு கருவூலம்தான்.
.
ஆயினும் இந்நூலை ஒப்பந்தம் உருவான 87 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியிருப்பதற்குப் பதிலாக 1983 யூலைப் படுகொலைகள் தொடங்கி திம்புவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை வரையிலும் நடந்த வரலாற்று நிகழ்வுகளோடு கொடுத்திருந்தால் மிகச் சரியாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம்.
.
ஏனெனில்....
அப்போதுதான் இன்றைய தலைமுறையினர்க்கு இந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக் காலங்களில் வெளியுறவுத் துறை கைக்கொண்ட அணுகுமுறைகளுக்கும் ராஜீவ் காலத்தில் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் நடந்து கொண்ட வினோத அணுகுமுறைகளுக்குமான வித்தியாசம் புலப்படும்.
.
போராளி அமைப்புகளுக்கு முகாம்கள் அமைத்துக் கொடுத்து பயிற்சி அளித்தது...

இலங்கை அரசினை வழிக்குக் கொண்டுவர பார்த்தசாரதி போன்ற அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களது அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டது உட்பட எண்ணற்ற சாதகமான நிகழ்வுகள் நிகழ்ந்த இந்திரா காந்தியின் காலகட்டத்தினையும்.....
.
ஆனால்....
.
ஆணவம்மிக்க அரைவேக்காட்டுத்தனமான ஊழல் அதிகாரியான ரொமேஷ் பண்டாரியின் அபத்தமான கூற்றுக்களை நம்பியது...
.
திம்பு பேச்சுவார்த்தையில் ஒன்றுபட்டு நின்ற அனைத்து போராளி அமைப்புகளையும் அதன் பிற்பாடு ஒன்றுக்கொன்று மோதவிட்டது....      
.
பேச்சுவார்த்தையின் தோல்வியைச் சகிக்காது ஆன்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன் போன்றோரை நாடு கடத்தியது....
.
போன்ற வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த ராஜீவ் காந்தியின் காலகட்டத்தினையும்.... இன்னும் ஏழெட்டு பக்கங்களுக்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டிருந்தால் .....
.
இன்றைய தலைமுறையினருக்கு இந்திரா காலத்திய அணுகுமுறைகளுக்கும் ராஜீவின் முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளுக்குமான வித்தியாசங்கள் புலப்பட ஏதுவாக இருந்திருக்கும் என்பது எனது பணிவான எண்ணம்.
.
அதைவிடவும் ஆக்கிரமிப்புப்படை இலங்கையில் இருந்து திரும்பியபோது இங்கு பிரதமராய் இருந்த வி.பி.சிங் அவர்களின் பங்களிப்பு குறித்தும் அவர் காலத்தில் அயலுறவு கொள்கை வகுப்பாளர்கள் ஓரளவுக்கு எவ்விதம் வாலைச் சுருட்டி வைத்திருக்குமாறு அடக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
.
இந்தவேளையில் எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த "களத்தில் கேட்கும் கானங்கள்" என்கிற ஒலிப்பேழைதான் நினைவுக்கு வருகிறது.
.
இந்திய சிறீலங்கா அரசுகளின் கூட்டுச் சதியால் பலாலியில் பலியாகி தீருவில் வெளியில் தீயாகிவிட்ட தியாகிகள் குமரப்பா, புலேந்திரன் உடன் மேலும் பத்து ஜீவன்களது துயரும்....
.
அத்துரோகத்துக்குத் துணை போன இந்திய அதிகார வர்க்கமும்...
.
அதன் விளைவாய் இடியுடன் பெருமழை எழுந்த கதைகளும் அப்படியே கண்ணில் நிழலாடுகின்றன.
.
அப்பேழை இசையில் துயர் நிரப்பி நம் செவிகளைத் தொட்டது என்றால்...

இந்நூலோ ஓவியங்களில் துயர் நிரப்பி நம் கண்களைக் கலங்கடிக்கின்றன,
.
நூலில் நெருடலான விஷயம் ஒன்று உண்டென்றால்…

.”தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர் இடையே கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் ஏற்பட்டன.” என்று வரும் வரிகள்தான்.
.
தமிழக மக்களிடம் ஈழமக்கள் கற்றுக் கொள்ள வேண்டியதும் உண்டு
.
கற்றுக் கொள்ளக் கூடாததும் உண்டு.
.
அவ்விதமே ஈழமக்களிடம் தமிழக மக்கள்   கொள்ள வேண்டியதும் உண்டு.
.
தள்ள வேண்டியதும் உண்டு.
.
அதில் ஒன்றுதான் ”தமிழர்கள்… முஸ்லிம்கள்…. என தமிழ் பேசும் மக்களைப் பிரித்து பேதப்படுத்தும் சொல்லாடல்.
.
தமிழகத்தினர் இதைப் போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடும்போது தமிழகம் எப்படிப் பேதமின்றி பிணைந்து கிடக்கிறதோ அப்படியே தங்களது வார்த்தைப் பிரயோகங்களையும் அமைத்துக் கொள்வதுதான் முறையானது. சரியானது.
.
அதுதான் ஈழத்திற்கும் நன்று.
.
தமிழகத்திற்கும் நன்று.
.
இச்சிறு நூலில் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி டெல்லி அசோகா ஓட்டலில் வைத்து பிரபாகரன் அவர்களும் ஆன்டன் பாலசிங்கம் அவர்களும் மிரட்டப்படுவது
.
பிற்பாடு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை வைத்து சமாதானப்படுத்த முயற்சிப்பது...
.
ராஜீவ் காந்தியுடனான நேரடி சந்திப்பில்  சொல்லும் "ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்டான" எழுதப்படாத ஒப்பந்தம்....
.
அதை நம்பி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பது...
.
அதேவேளையில்  மற்றொரு புறத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் ( E.P.R.L.F)  இயக்கத்தினருக்கு ரா (R.A.W) ஆயுதங்களை அள்ளிக் கொடுப்பது....
.
இந்தியத் தூதர் தீட்சித்தின் ஆணவப் போக்கு...
.
அமைதியை நிலைநாட்ட என்று அழைத்து வரப்பட்ட இந்தியப் படையினரை இலங்கைக்கான கூலிப்படையாக மாற்ற நினைக்கிறார்களே டெல்லியில் உள்ள அதிகார வர்க்கத்தினர் என உள்ளுக்குள் குமைந்த மேஜர் ஹர்கிரட்சிங்...
.
திலீபனின் துயர் தரும் தற்கொடை....
.
என அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதற்கு மனம் விட்டுப் பாராட்டலாம் இந்நூலாக்கக் குழுவினரை.
.
வன்னிக் கலைஞனின் பொருத்தமான ஓவியங்களுக்கு மிக நேர்த்தியான வரிகளைத் தந்திருப்பவர் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.
.
பக்கத்துக்குப் பக்கம் நம் நெஞ்சத்துக்கு நெருக்கமாக நின்று பேசும் இந்நூல் நம் கரங்களில் தவழ துணை நின்றிருப்பது பதிப்பாளர் ம.லோகேஷின் அசாத்திய உழைப்பு
.
( 7010837849 - என்கிற எண்ணுக்கு அழைத்தால் நூல் உங்கள் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கும்).
.
.
நன்றி : உயிர்மை ஜூலை 2018

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...