தம்பி பிறந்து நான்கைந்து மாதங்களில், சிவகங்கை அரண்மனைக்கு எதிரான அரங்கில் கலைஞர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார், அப்பாவும், அம்மாவும் தம்பிக்கு அவர் தான் பெயர் சூட்ட வேண்டுமென்று மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தார்கள், நானும் தங்கையும் கையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம், கூட்டம் முடிந்த பிறகு கீழே பார்த்தவர், என்ன என்றார்? குழந்தைக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று பொறுப்பாளர் ஒருவர் கூற, குனிந்து அப்படியே வாங்க முயன்றவரால் இயலவில்லை, மேடைக்கு அழைத்து வாருங்கள் என்றார், கூடவே நானும் தங்கையும், தம்பியைக் கையில் ஏந்திக்கொண்டவர், "மலர்ச்செல்வி" என்றார், அம்மா, "ஐயா, பையன், பையன்" என்று சொன்னவுடன், சரி, "மலர்ச்செல்வன்" என்றார் எந்தத் தயக்கமும் இல்லாமல்....தம்பி, பெரும்பேறு பெற்றவன், அவருடைய அணைப்பில் சில நிமிடங்களாவது இருந்திருக்கிறான்.
காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை என்று எங்கெல்லாம் அவருடைய கூட்டங்கள் நடந்தாலும் எப்படியாவது போய் நின்று விடுவேன், முன்வரிசையில் நிற்பேன், அவர் வருகிற வரை யாராவது பேசிக்கொண்டிருப்பார்கள், சலனமின்றிக் காத்திருந்து அவர் வருகிற அந்தக் கணங்களில் அது என்ன மாதிரியான உணர்வு என்று தெரியாது, உணர்ச்சிப் பிழம்பாய் "கலைஞர் வாழ்க" "கலைஞர் வாழ்க" என்று உயிர் உருக முழக்கமிடுவேன், இத்தனைக்கும் திராவிடர் கழக மாணவர் பயிற்சிப் பட்டறையில் எதற்காகத் தலைவர்களை வாழ்த்தி முழக்கமிட வேண்டும் என்று ஐயா கலி.பூங்குன்றனுடைய வகுப்பில் கேள்வி கேட்டவன், கண்மூடித்தனமாக யாரையும் பின்தொடர்வதில் நம்பிக்கையற்றவன், ஆனால், கலைஞரைப் பார்த்தவுடன் உயிருக்குள் இருந்து ஆர்ப்பரிக்கும் அந்த உணர்வை என்ன சொல்லி விளக்குவது என்று தெரியவில்லை.
கூனிக் குறுகித் திரிந்த ஒரு சமூகத்தில் வெளுத்துக் கட்டிய சுயமரியாதை வேட்டியைக் கட்டிக்கொண்டு காரல் மார்க்ஸையும், மக்சிம் கார்க்கியையும், லியோ டாலஸ்ட்டாய்யையும் படித்த ஐயா தான் பெரியார் கண்டெடுத்த முதல் அதிசயம், அப்பா அடுத்த தலைமுறையில் அண்ணாவையும், கலைஞரையும் பார்த்தும், கேட்டும் வளர்ந்தவர், ஆதிக்க சாதிகளின் நெருக்கடியான சமூகச் சூழல், நிமிர்ந்து நடக்கவும் அஞ்சித் திரிந்த மனிதர்களின் நடுவே நெஞ்சு நிமிர்த்தி நடக்கவும், அறிவை உரம் போட்டு வளர்க்கவும் ஐயா நீங்கள் தானே உரமிட்டீர்கள்.
மானுடனே, அஞ்சாதிரு, விழித்திரு, பசித்திரு, கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று அறிவுப்பால் ஊட்டிய அண்ணலுக்குப் பிறகு நீங்கள் தானே ஐயா, நம்பிக்கையாய் இருந்தீர்கள், அடிமைச் சமூக மனநிலையில் அறிவொளியை ஏற்றிய நுட்பமான பணி உங்கள் பணி, அறிவொளி ஏற்றுவது மட்டுமல்ல என் பணி என்று "இலவசமாய்ப் படி" என்றீர்கள், "இலவசமாய்ப் பயணம் செய்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் போ" என்றீர்கள், "காலணியும், பகலுணவும் நான் தருகிறேன்" என்றீர்கள், "கல்வி உதவித் தொகையும் தருகிறேன், அரசு வேலை கொடுக்கிறேன்", மேலே ஏறு, பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம், சோர்ந்து விடாதே, முன்னேறு, வீறு கொண்டு எழு என் தங்கமே என்று அரவணைத்து உங்கள் பிள்ளைகளாய் எத்தனை ஏழைகளையும், அடிமைகளையும் உங்கள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் படிக்க வைத்து, இன்று உங்களையே விமர்சிக்கும் அரசியலை சமூக இணையத்தளங்களில் எழுதும் நிலைக்குக் கொண்டு வந்தீர்கள்.
இவை எல்லாம் வெறும், பொருளாதார முன்னேற்றமும், சமூக முன்னேற்றமும் இல்லை எங்கள் குல விளக்கே, எத்தனை நுட்பமான மனநிலை மாற்றம், இந்தியா முழுவதும், இன்றைக்கும் பார்ப்பனர்களை "ஐயா சாமி" என்று வழிபடுகிற மூடர்கள் மண்டிக்கிடக்க, அவனை எதிர்க்கவும், அவனுடைய சித்தாந்தத்தைக் கேள்வி கேட்கவுமான நெஞ்சுரத்தையும், மோதிப்பாரடா எந்தத் துறையிலும் என்ற சவாலை விடுத்து எம்மை வெற்றி பெற்ற மாந்தர்களாய், அறிவு விளக்கும், சுயமரியாதைச் சுடரும் ஏந்தும் இளவல்களாய் மாற்றிய சாக்ரட்டீஸ் நீங்கள் எம் ஐயனே.
மிகப்பெரிய நகரத்தில் இன்று மகிழுந்தில் பயணிக்கிறேன், வெள்ளைக்காரன் ஒய்யாரமாய் உறங்கிய மாளிகைகளில் மிடுக்காய் நடக்கிறேன் எம் அறிவுச் சுடரே, Christ பல்கலைக்கழகத்தில் உயர் மேடை ஏற்றி வணிகம் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பெடு என்கிறான் ஒரு வட இந்தியப் பார்ப்பனன், ஏறி நின்று சொல்கிறேன், "உன் கல்வியும், அறிவும் மானுட சமூகத்தின் மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்கும் பயனுறட்டும்" என்று, நீ சொல்லிக் கொடுத்த, நீ கொடையாய் வழங்கிய நுட்பமான மானுட அரசியலை இறுகப் பற்றி நடந்த துணிவும், உரமும் அணுக்களெல்லாம் ஊடுருவி இருக்கிறது எம் ஐயனே......
துயரத்தில் இருந்து வெளியேற முடியவில்லை என் தந்தையே, கருணாநிதி என்று யாராவது, எங்காவது பெயர் சொன்னால் துயரம் பீறிட்டு வழிகிறது என் தந்தையே, 6.10 க்குப் புற வாழ்வை முடித்துக் கொண்டாய் என்று சொன்ன கணத்தில் இருந்து இந்தக் கணம் வரை கண்ணீர் என்னையும் அறியாமல் கசிந்து கொண்டே இருக்கிறது அப்பனே, எங்களை அநாதை ஆக்கி விட்டுப் போகவில்லை, இந்த அனாதைகளை மனிதர்களாக்கியவன் ஐயா நீ.
நீ ஊற்றி வளர்த்த திராவிடத்தை எம் குலவிளக்கே, ஒருபோதும் அணைய விட மாட்டோம், எம் ஆருயிர்த் தலைவனின் புதல்வனுக்குப் பின்னால் நிற்போம், செல்லும் இடமெல்லாம் உன் புகழைப் பரப்புவோம், நீ அழிய மாட்டாய் எங்கள் அற்புத விளக்கே....
ஐயா, இன்னொருமுறை கூட்டத்திற்கு வரமாட்டீர்களா? ஐயா, முன் வரிசையில் நின்று என்னை "டாக்டர் கலைஞர் வாழ்க, டாக்டர் கலைஞர் வாழ்க" என்று உயிர் அதிர முழக்கமிட அனுமதிக்க மாட்டீர்களா? நீங்கள் மறைந்து விட்டீர்களா ஐயா? நீங்கள் மறைந்து விட்டீர்களா?
No comments:
Post a Comment