வில்லன் அல்ல ஹீரோ!
மாவலி-ராவணன்-மகிஷன்-நரகாசுரன்
-------------------------------------------------------------------------
மலையாளிகளுக்கு ஓணம் சிறப்பான திருவிழா என்றாலும் அதன் அடிநாதமாக ஒரு பண்பாட்டுப் போர்க்குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். என்னதான் கடவுள் என்றாலும், அவர் வாமன அவதாரம் எடுத்துவந்து தங்கள் மன்னன் மாவலியை (மகாபலி) வஞ்சகமாகக் கொன்றதை அவர்கள் முழுமையாக ஏற்பதில்லை. கடவுளுக்கும் மேலானவன் எங்கள் நலன் காத்த மன்னன் என்கிற பண்பாட்டுப் போர்க்குரல்தான் மாவலியை வரவேற்று ஓணம் கொண்டாடச் செய்கிறது.
இந்த எண்ணம் ஆதிக்குடிகள் பலவற்றிடமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ‘ராமலீலா’ என்ற பெயரில் டெல்லியில் பல கட்சித் தலைவர்களும் கையில் அம்பு எடுத்து ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கும்போது மத்தியபிரதேசத்தின் சில கிராமத்தினர், கோண்டுவானா வனப்பகுதியின் பழங்குடியினர் மேலும் சில ஆதிக்குடியினர் ராவணனை தங்கள் மன்னன் என்றும், மகன் என்றும் மருமகன் என்றும் போற்றிக் கொண்டாடும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
அதுபோலவே, மகிஷாசூரனை துர்கை வதம் செய்ததை கொல்கத்தாவைத் தலைநகராகக் கொண்ட மேற்கு வங்கம் பெரும்விழாவாகக் கொண்டாடும் சூழலில், மகிஷன் என்று எருமைத் தலையுடன் சித்தரிக்கப்படும் மன்னன் நம்மவர் என்றும் அவரை முப்பெருந்தெய்வங்களான பிரம்மா-விஷ்ணு-சிவன் ஆகியோரோல் வீழ்த்த முடியாததால், துர்கை மூலம் வஞ்சகமாகக் கொன்றுவிட்டனர் என்றும் நாட்டுப்புறக் கதை வாயிலான வரலாற்றை எடுத்துச் சொல்லி, மகிஷனைக் கொண்டாடும் விழாவை ஆதிக்குடியினர் கொண்டாடுகின்றனர். மைசூரு என்றபதே மகிஷனின் பெயரில் உள்ள ஊர் என்பதால், அங்கே கோலாகலமாகக் கொண்டாடப்படும் தசரா விழாவை இனி மகிஷா தசரா என கர்நாடக அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக இந்து மதத்தின் ஆகப்பெரும் கோலாகலமாக்கப்பட்ட தீபாவளி குறித்த புதிய பார்வைகளும் வெளிப்படுகின்றன. நரகாசுரனைக் கிருஷ்ணனும் அவரது மனைவி சத்யபாமாவும் நரகாசுரனை கொன்றதை மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டாடுவதற்குப் பதில், மன்னன் நரகாசுரனின் நினைவு போற்றும் கொண்டாட்டமாக தீபாவளியை முன்னெடுத்துள்ளனர் உஸ்மானியா மற்றும் காகதியா பல்கலைக்கழக மாணவர்கள் திராவிட மன்னன் நரகாசுரன் என்ற அடையாளத்துடன் அவனைப் போற்றும் விதமாக பட்டாசு வெடித்து மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் தீபாவளிக்கு மாற்றாக, ‘நரகாசுரன் திருவிழா’ என்ற பெயரில் கொண்டாட்டங்கள் தலை தூக்கியுள்ளன.
அசுரர்கள்-அரக்கர்கள் என சித்தரிக்கப்பட்டு, வஞ்சகமாக வீழ்த்தப்பட்டவர்களின் வரலாறு பல உண்மைகளைப் பேசத் தொடங்கியிருக்கிறது. அது அதிகார-ஆதிக்க சக்திகளை நடுங்க வைக்கிறது.
No comments:
Post a Comment