கடைமடைக்கு வருவாளா காவிரி?
ஊருக்குச் சென்றிருந்தேன்.
மேட்டூர் அணை திறந்து ஊருக்குச் செல்லும்
வாய்ப்பு அமையவில்லை. விவசாய வேலைகள் களைகட்டியிருக்கும், ஆற்றிலும் நீர் பெருக்கெடுக்கும் என்ற ஆசையில் திருவாரூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றேன்.
வழியெங்கும் தென்பட்ட வயல்வெளிகள், வாய்க்கால்களில் சொட்டு நீரில்லை. கோடைபோல வறண்டுக் கிடந்தன. ஒட்டநாச்சார்குடி அருகே ஆற்றில் ஏதோ மழைநீர் போல தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளம், கொள்ளிடத்தில் வெள்ளம் என்ற செய்திகளுக்கும் கடைமடைப் பகுதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இங்கு வெள்ளமும் இல்லை. புளியும் இல்லை.
மேட்டூர் அணை திறந்த பிறகு நீர்ப்பாசனத்தைக் கவனிக்க தனி அதிகாரிகள் வேறு நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் வராமல் பார்த்துக் கொள்கிறார்களோ என்று கவலையாக இருக்கிறது.
குளங்களும் குட்டைகளும் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டமாவது உயரும். பல ஏக்கர் நிலங்களில் விதை விடாமல் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். அரசியல் தலைவர்களின் அறிக்கைகளுக்குப் பிறகு தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
கடைமடைக்கு வரட்டும் காவிரி.
No comments:
Post a Comment