எண்பதாண்டுப் பொதுவாழ்வில் இலட்சக்கணக்கான புகைப்படங்களுக்குத் தோற்றமளித்தவர் கருணாநிதி.
எவ்வொரு நிகழ்விலும் அவரசைவுகளை நூற்றுக்கணக்கான படங்களாகப் பதிந்துகொண்டே இருந்தனர் புகைப்படக்கலைஞர்கள்.
ஆனால், இங்கே சுமார் பத்திருபது படங்களே அவரைப் பற்றிய பதிவுகளில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆண்டுக்குப் பத்துப் பதினைந்து படங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட இங்கே இணையத்தில் ஆயிரம் படங்களேனும் இறைந்து கிடக்க வேண்டும்.
ஒரு விழா என்றால் அவரை நூறு படங்களேனும் எடுத்திருக்க மாட்டார்களா ?
ஒவ்வோர் செய்தித்தாளும் அவ்வாறு எடுக்கப்பட்ட படங்களைக் காத்து வைத்திருப்பதில்லையா ?
அவற்றை அவர்கள் வரலாற்றுப் படங்களாக அள்ளித் தெளிக்க வேண்டாவா ? அதிலுமா சுணக்கம் ?
நகரத்திற்குள் ஓர் எட்டு போய்விட்டு வந்ததில் இணையத் தேடலில் கிடைத்த அந்தப் பத்துப் பதினைந்து படங்களைக்கொண்டே பல்வேற்றிடங்களில் அஞ்சலிப் பதாகைகள் வைத்திருக்கின்றனர்.
இணையப் பத்திகளிலும் குறிப்பிட்ட பத்திருபது படங்களே தொடர்ந்து காணப்படுகின்றன.
பெரும்பாலானவை அண்மைக்காலப் படங்கள். மஞ்சள் துண்டுக்கு முந்திய படங்களே இல்லை என்னுமளவுக்கு நிலைமை.
அவர் மஞ்சள் துண்டு போட்ட காலத்திற்குப் பிந்தைய படங்களைத்தான் வைத்திருக்கிறோமா ?
மஞ்சள் துண்டு கடைசிப் பத்தாண்டின் அடையாளமாக இருக்கலாம். அவ்வளவுதான். அதற்கு முன்பு அவர் வெவ்வேறு துண்டுகளை அணிந்தவராயிற்றே. அப்படங்கள் எங்கே ?
இன்னொன்று, அவருடைய குறியீடாகவே ‘சக்கர நாற்காலியைக்’ காட்டுவது. அது எத்துணை அறியாமை !
சக்கர நாற்காலியில் அமர்ந்தது அவருடைய கடைசிச் சில்லாண்டுகளில்தாம். அதை எப்படி அவருடைய குறியீடாகக் காட்ட முடியும் ?
கடந்த பத்தாண்டுகளுக்குள் பண்ணாட்டுக்கு (அதிகாரம்) வந்தவர்களால்தான் இத்தனை அறியாப் பிழைகள். நம்மால் இவ்வளவுதான் முடியுமா ?
கண்முன்னே வாழ்ந்தவர்க்கே இப்படிப்பட்ட அடையாளப் பதிவுகள் என்றால் கண்காணாத வரலாறு எப்படியெல்லாம் இட்டுக்கட்டப்படும் ? 😔😔
No comments:
Post a Comment