Monday, August 13, 2018

முப்பிடாதி

‛எனக்கும் கருணாநிதியை  பிடிக்காது..!’’ (முப்பிடாதி - தினமலர் Reporter)

எனக்கு சிறுவயதில் இருந்தே கருணாநிதியை பிடிக்காது..என் தந்தை, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்..ஆதரவாளர்..கட்சிக்காரர்..
எங்கள் ஊரில் அ.தி.மு.க.,ஆரம்பித்த நாளில் இருந்து 2008ல் என் தந்தை இறக்கும் வரையிலும் அவர் தான் நிரந்தர அவைத்தலைவர்.

எனக்கு ஐந்தாறு வயது இருக்கும்போது 1977 களில் எம்.ஜி.ஆர்.,கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கெல்லாம் என்னை சைக்கிளின் முன்  பேபி சீட்டில் அமரவைத்து  கூட்டிச்செல்வார். நன்றாக நினைவிருக்கிறது. மேலப்பாளையத்தில் நடந்த ஒரு இரவு பொதுக்கூட்டத்திற்கு என் தந்தையுடன் சென்றிருக்கிறேன். கடையில் கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்தார்.
இரவு 9 மணிக்கு வருவதாக இருந்த எம்.ஜி.ஆர்., மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வந்தார்.
கட்சி துண்டை தலையில் தலைப்பாகை போல கட்டிவிட்டு, சட்டையில் அதிமுக பேட்ஜ் அணியச்செய்து அடேங்கப்பா...என் தந்தையார் செய்த எம்.ஜி.ஆர்.,பித்துவேலைகள் ஒன்றிரண்டு மேகமூட்டங்களை கடப்பது போல  நினைவில் நிற்கிறது. இதே லெவலில் வளர்ந்ததால் நான் என்னவாகியிருப்பேன்...அதிமுகவின் குழந்தைகள் பிரிவு...அப்புறம் மாணவர் அணி..இப்படிதான் கதை ஓடியிருக்கிறது..எம்.ஜி.ஆர்.,மறைவின் போது எங்கள் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்ததுபோல வீடே குடிமுழுகி போயிருந்தது. எங்கள் வீட்டில் எம்ஜிஆர் ஊர்வலத்தை டிவியில் பார்க்க வந்துபோனவருக்கெல்லாம் எங்கம்மா கடுங்காபி போட்டு கொடுத்துக்கொண்டேயிருந்தாள்..வீட்டின் மீது பெரிய கம்பத்தில் கட்சி கொடி பறந்துகொண்டேயிருக்கும்..எம்.ஜி.ஆர்.,சொன்னார் என்பதற்காக என் தந்தை இடுப்பில் கத்தி மட்டும்தான் வைக்கவில்லை..

நான் 1990களில் பத்திரிகை  பணியில் சேர்ந்து மதுரைக்கு பிறகு சிவகாசியில் பணியாற்றியபோது என் தந்தை என்னிடம் கேட்ட ஒரே கோரிக்கை..மல்டி கலரில் லெட்டர்பேடு..அடிச்சி தருவியா என்பதுதான்..
சிவகாசி நண்பர் கார்த்திகேயனின் மாமாவின், ஆப்செட் அச்சகத்தில் எம்.ஜி.ஆர்.,ஜெ.,ஸ்டாண்டிங் படம் போட்டு ரெட்டியார்பட்டி அதிமுக அவைத்தலைவர் என என் தந்தையின் பெயரோடு மல்டி கலரில்  லெட்டர் பேடு பிரிண்ட் செய்து கொடுத்தேன்..அந்த லெட்டர் பேடை வைத்து ஒரு யூஸ்சும் கிடையாது..ஆனால் என் தந்தை ஊரெல்லாம் அதை துாக்கிக்கொண்டு போய் காண்பித்தார்..
என் மகன் அடிச்சு கொடுத்தது என பெருமைப்பட்டுக்கொண்டார்... போன மாதம் என் மகன் எனக்கு வாங்கித்தந்த ‛‛ரெட்மி நோட்ஸ் ப்ரோ டூயல் கேமரா மொபைல் போனை’’ என் நண்பர்களிடம் காண்பிக்கிறேனே  அதைப் போல...

1980களில் எங்கள் ஊர் ரெட்டியார்பட்டியில் ஆவின்பால்பண்ணையை எம்.ஜி.ஆர்.,திறந்துவைத்தார்..அப்போது அவரை சிறுவனாக நெருக்கத்தில்  பார்த்தோம்..இரவில்..
அடேங்கப்பா..என்னா கலருப்பா..சுண்டுனா ரத்தம் வரும்போலயே..என எல்லோரும் பேசிக்கொண்டார்கள்..
இதெல்லாம் கருணாநிதியை நேரில் பார்க்கும் வரைதான்..

நான் செய்தியாளராக அடிக்கடி கருணாநிதி மீட்டிங்களுக்கு செய்தி சேகரிக்க செல்ல நேர்ந்தது..
ச்சே..மனுஷன்..என்னா பேச்சு..ஒவ்வொரு இடத்திலும் வேறுவிதமான தகவல்கள்...உதாரணங்கள்..ஸ்பாட் நகைச்சுவைகள்..ஜெயலலிதா அப்படியில்லை...சவத்த சென்னையில் ஆரம்பிக்கிற பேச்சு குறிப்பேடு அட்டையை கன்னியாகுமரி வரை மாற்றுவதே இல்லை..செய்வீர்களா..செய்வீர்களா என ஒரே மாவு அரைப்புதான்..

நெல்லை மாவட்டத்தில் கருணாநிதியோ, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனோ வந்தால் பத்திரிகையாளர்களும் எல்லா அணைக்கட்டுகளுக்கும் உடன் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் முதன்முதலாக அணைகளை பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பு ..அதுவும் துரைமுருகன், ஒரு அணையின் ஆயக்கட்டு, பாசன பரப்பு,,எத்தனை மடைகள்..என அணைகள் குறித்து அக்குவேறா..ஆணிவேறாக சொல்லும் தகவல்கள்.. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களையே பிரமிக்கச்செய்யும்..

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு தவிர கடனாநதி, ராமநதி, குண்டாறு. கருப்பாநதி, அடவிநயினார், நம்பியார், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு என அனைத்து அணைகளையும் கட்டி திறந்ததோ, அல்லது கட்டுவதற்கு முயற்சித்ததோ கருணாநிதி என்னும்போது திருநெல்வேலி மாவட்டத்து காரனாக அவர் மீது ஈர்ப்பு ஏற்படுவது சகஜம்தான்...
அதுமட்டுமல்ல..1990ல்  மாணவ பத்திரிகையாளராக  இருந்தபோதுதான் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அடிக்கல் நாட்டியவர் கருணாநிதி..
நெல்லையில் திருவள்ளுவர் பெயரில் ஈரடுக்கு மேம்பாலம், கங்கைகொண்டான் தொழில்பேட்டை..அதில் எண்ணற்ற தொழிற்சாலைகள்,  ஐ.டி.பார்க்,, நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டல மையம், நெல்லையில் அண்ணா பல்கலைக்கழகம், சுரண்டையில் காமராஜ் கலைக்கல்லுாரி, ஊர் தோறும் மனோ கல்லுாரிகள், பல்கலைக்கழக  உறுப்புகல்லுாரிகள், உழவர் சந்தைகள்,
2009ல் துவக்கப்பட்டு ஆட்சிமுடியும் வரை பணியினை முடித்துவைத்து தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள  தாமிரபரணி நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டம், தச்சநல்லுார் ரயில்வே மேம்பாலம், வண்ணார்பேட்டை மேம்பாலம் என எண்ணற்ற திட்டங்களை  நெல்லைக்கு கொண்டுவந்தவர் கருணாநிதி..
இதில் பத்திரிகையாளர்களுக்கு பஸ் பாஸ், வீட்டுமனை போன்ற தனிப்பட்டவை சேர்த்தியில்லை...சுதந்திரபோராட்ட தியாகிகள் என்ற பெயரில் ஜாதி ஓட்டுகளுக்காக  கட்டித்தந்த மணிமண்டபங்களையும் விட்டுவிடுகிறேன்..  இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு அணைக்கட்டுகள் என்று பார்த்தால் கருணாநிதியை எல்லோருக்குமே பிடிக்கும். இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியில் இருந்திருந்தால் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் பயன்பாட்டிற்கு வந்திருக்குமோ..வறண்ட திசையன்விளை செழித்திருக்குமோ..நாங்குநேரியில் தொழில்கள் வந்திருக்குமோ..என்றெல்லாம் கூட எண்ணத் தோன்றுகிறது..யாராக இருந்தால் என்ன..நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது செய்தால் ஒரு பத்திரிகையாளனாக வரவேற்கவேண்டியதுதானே..

எனக்கு கருணாநிதியின் செயல்பாடுகள் பிடிக்கும்..சரி அ்ப்ப எம்.ஜி.ஆரை பிடிக்காதா..அதெப்படி..சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் செய்யாவிட்டாலும் என் அப்பாவிற்காகவாவது எம்ஜிஆரும் என் மனசுக்குள் ஓரிடத்தில் நிற்கிறார்..ஆனால் கருணாநிதி என் மாவட்ட மக்களின் வளர்ச்சியோடு சம்பந்தபட்டவராகயிருக்கிறார்..

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...