எங்கும் இருப்பார் பெரியார்
=====================
மிகச் சரியாகச் சொன்னால்...
1988 ஜூன் 12க்குப் பிற்பாடு என்னைப் பார்த்த சிலரது பார்வையே கேலியும் கிண்டலும் நிரம்பி வழிந்ததாக இருந்தது என்பதுதான் உண்மை.
.
“தோழருக்கு இன்னும் பழைய பாசம் போகல...” என்று சிலரும்...
.
“கொஞ்சநாளா ‘செகப்புப் புத்தகம்’ படிக்கிறாரில்ல...
அதுதான் இப்படி...” என்று சிலரும்...
.
தங்களுக்குள்ளாகவே சிலாகித்துக் கொண்டனர்.
.
இப்படி இருவேறு தரப்புகள் என் மீதான தங்கள் ஏளனங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தன.
.
இத்தனை பேர்களது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருந்த நான் அந்தப் பொழுதில் செய்திருந்த ‘மாபெரும் குற்றம்’ ஒன்றே ஒன்றுதான்.
.
அது:
.
எனது முதல் நூலான ‘அன்புத்தோழிக்கு’ எனும் தொகுப்பில் நான் முதல் பக்கத்தில் எழுதியிருந்த பத்தே பத்து வார்த்தைகளைக் கொண்ட ஐந்தே ஐந்து வரிகள்தான்.
.
சுற்றி வளைப்பானேன்...?
நன்றி சமர்ப்பணம் படையல்
என என்ன
வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்.
.
ஆனால் அதில் நான் எழுதியிருந்தது இவ்விதம்தான்;
என்னை மனிதனாக்கிய
பெரியார் ஈ.வெ.ரா.விற்கும்!
மனிதர்களை எனக்கு
அடையாளம் காட்டிய
காரல் மார்க்ஸுக்கும்!
.
இது தான் அது,
.
மார்க்சியத்தைப் ‘புரிந்தவர்களில்’ சிலர் பெரியாரைப் புரிந்து கொள்ளவில்லை
.
பெரியாரைப் ‘புரிந்தவர்களில்’ சிலர் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளவில்லை.
.
வெறும் கொச்சைப் பொருள் முதல்வாதியாகவும்’....
‘வறட்டு நாத்திகராகவும்’ மட்டுமே ‘இடதுசாரி’ சிந்தனையாளர்களால் சித்திரிக்கப்பட்டு வந்த நேரமது.
.
அவரை உண்மையாய் உள்வாங்கியவர்கள் விம்மிக் கொண்டிருந்த வேளையில் இன்குலாப் போன்றோரது வரிகள் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த வேளையும் அதுதான்.
.
“மார்க்சியமா”? “பெரியாரியமா”? நூல்கள்
வேண்டுமா?
.
கிடைக்கும்.
.
“வெள்ளையருக்கு வால் பிடித்தவர்” விளக்கங்கள் வேண்டுமா?
.
கிடைக்கும்.
.
“வர்க்க விடுதலை வந்துட்டா போதும் தோழர்... எல்லாம், சரியாயிடும்” வியாக்கியானங்கள் வேண்டுமா?
.
கிடைக்கும்.
.
ஆனால்... எனக்குக் கிடைத்த ஒரு புத்தகத்தைப் புற்றுநோயால் தொலைந்து போன எனது தோழி சுகமதிக்குக் கொடுத்தேன்.
.
அதிர்ந்து போனாள் அவள்.
.
“இதுல உள்ளது எல்லாம் உண்மைதான் ராஜா. (என்னை அப்படித்தான் விளிப்பாள் அந்தக் குடும்பத் தலைவி)
ஒரு வார்த்தைக் கூடப் பொய்யில்லை.
.
ஆனா... இது இன்னும் நூறு வருசம் கழிச்சு வந்தாக் கூட ஏத்துக்குற பக்குவம் இந்த ஒலகத்துக்குக் கிடையாது”என்றாள் அந்த மனுசி.
.
அந்த மனுசிக்கு நான் கொடுத்த புத்தகம்:
“பெண் ஏன் அடிமையானாள்?”
.
எழுதியவர் : திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தனது பெயரை எழுதிப் பழகிய ஈ.வே.ராமசாமி.
.
‘வறட்டு நாத்திகவாதி’ என்றவர்கள்...
ஒரு ஏழைப் பார்ப்பனனுக்கு இணையாக ஒரு வசதி படைத்த தலித் நின்றாலும் கூட சமூக ”இழிவு” தலித்துக்குத்தான்... என்கிற உண்மையைப் பிற்பாடு உணர்ந்து கொண்டார்கள்.
.
அல்லது ஒப்புக்காகவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
.
பிற்காலங்களில் அவர்கள் ‘ஒதுக்கீடு’ அடிப்படையில் பெரியாருக்கும் ஒரு பேனர் வைத்துத் தொலைத்தார்கள்.
.
இதே போன்ற பிழைகள்தான் மனிதகுல விடுதலைக்கான மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் மத்தியிலும்.
.
இந்த வேளையில் எனக்கு எழுத்தாளர் ‘ஜான் ரீட்’(John Reed) அவர்களுடைய புத்தகத்தின் நினைவு தவிர்க்க முடியாததாகிறது.
.
“உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்கிற நூலினது சொந்தக்காரர் அவர்.
.
அக்டோபர் புரட்சியின் போது குட்டி முதலாளிகளின் தலைவர் கேரன்ஸ்கி ஆட்சியை அகற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஒரு போல்ஷ்விக் வீரனை நோக்கி நெருங்குகிறது ஒரு மெத்தப் படித்த மேதாவிகளின்
கும்பல்...
.
அதில் ஒரு “அறிவாளி” கேட்கிறான்...:
.
“உனது தோழர் லெனின் இத்துணை காலமும் எங்கு ஒளிந்து கொண்டிருந்தார் என்பது தெரியுமா உனக்கு...?”
.
போல்ஷ்விக் வீரன் : “அதுவெல்லாம் தெரியாது எனக்கு.
உலகில் இரண்டே இரண்டு வர்க்கங்கள்.
ஒன்று ஒடுக்குகின்ற வர்க்கம்.
இன்னொன்று ஒடுக்கப்படுகின்ற வர்க்கம்.
.
எம்மைப் போன்ற ஒடுக்கப்படுகின்ற வர்க்கத்தின் சார்பாக லெனின் நிற்கிறார்.
அதனால் நான் இங்கு காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்.”
.
எரிச்சல் மேலிட... அந்தக் குட்டி முதலாளித்துவவாதி இன்னுமொரு கேள்வியை எடுத்து வீசுகிறான்.
.
“உனது தோழர் லெனின் ஒரு ஜெர்மானிய ஒற்றன் என்பது உனக்குத் தெரியாதா?”
.
அந்த போல்ஷ்விக் வீரன்:
.
“அதுவெல்லாம் தெரியாது எனக்கு.
.
உலகில் இரண்டே இரண்டு வர்க்கங்கள்.
ஒன்று ஒடுக்குகின்ற வர்க்கம்.
.
இன்னொன்று ஒடுக்கப்படுகின்ற வர்க்கம்.
.
எம்மைப் போன்ற ஒடுக்கப்படுகின்ற வர்க்கத்தின் சார்பாக லெனின் நிற்கிறார். அதனால் நான் இங்கு காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்.”
.
கோபத்தின் உச்சிக்கே போன அந்த அசட்டு வர்க்கத்தின் இன்னொரு பிரதிநிதி உறுமுகிறான்:...
.
“அந்த ஹிட்லரால் ஊடுருவ வைக்கப்பட்டவர்தான் உனது லெனின் என்பது உனக்குப் புரியாதா”? என்று.
.
அப்போதும் அந்த போல்ஷ்விக் வீரன் :
.
“அதுவெல்லாம் தெரியாது எனக்கு.
.
உலகில் இரண்டே வர்க்கங்கள்.
.
ஒன்று ஒடுக்குகின்ற வர்க்கம்.
.
இன்னொன்று ஒடுக்கப்படுகின்ற வர்க்கம்.
.
எம்மைப் போன்ற ஒடுக்கப்படுகின்ற வர்க்கத்தின் சார்பாக லெனின் நிற்கிறார். அதனால் நான் இங்கு காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்”.
.
.
இன்றைக்கு நாங்கள் அந்த போல்ஷ்விக் வீரனைப் போலவே நின்று கொண்டிருக்கிறோம்...
.
இன்று கம்யூனிசக் கண்ணாடி போட்ட தோழர் குமுறுகிறார் :
.
“சாதிக்கும் வர்க்கத்துக்குமான நுண்ணிய முடிச்சை நாம் கூர்ந்து நோக்க வேண்டும்.
.
அங்கு பெரியார் இருக்கிறார்”.
.
.
இன்று அமைப்பியல்வாதக் கண்ணாடி போட்டுக் கொண்ட தோழர் கூவுகிறார் :
.
பெரியார் இங்கு இருக்கிறார்.
.
.
அப்படியே... பின் அமைப்பியல்வாதக் கண்ணாடி போட்டவர் அலறுகிறார்:
.
“பெரியார் இங்கு இருக்கிறார்”.
.
.
பிற்பாடு... பின் நவீனத்துவக் கண்ணாடியை இறக்குமதி செய்தவர் பறைசாற்றுகிறார்:
.
“பெரியார் இங்கும் இருக்கிறார்”.
.
.
அந்த அப்பாவி போல்ஷ்விக் வீரனைப் போலவே நாங்களும் சொல்கிறோம்.
.
ஆம் தோழர்களே...
.
ஒடுக்குதல் என்பது
எதன் எதன் பேரால்
எங்கெங்கெல்லாம் நிகழ்கிறதோ அங்கங்கெல்லாம்
அதற்கெதிராகப் பெரியார் நின்றார்.
.
நிற்கிறார்.
.
நிற்பார்.
.
செவ்வணக்கம் தோழர்களே!
No comments:
Post a Comment