Monday, September 10, 2018

மகுடேசுவரன்

குணகடல், குடகடல்
**

பண்டைய தமிழ்நாட்டுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் என முப்புறமும் கடல்கள் சூழ்ந்திருந்தன. இன்றுள்ள கேரள மாநிலம் பன்னூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. சேரநாடு என்று அழைக்கப்படுவதும் கேரளம்தான். எனவே தமிழகத்தின் மூவெல்லையாயும் கடல்களே இருந்தன.

இன்றைக்கு அக்கடல்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம் ? கிழக்கே இருக்கும் கடலினை ‘வங்காள விரிகுடா’ என்றும் மேற்கே இருக்கும் கடலினை ‘அரபிக்கடல்’ என்றும் தெற்குக் கடலினை “இந்தியப் பெருங்கடல்” என்றும் அழைக்கிறோம். கடல்களின் அப்பெயர்கள் எப்படித் தோன்றின ?

கிழக்கேயுள்ள கடல் எவ்விடத்தில் சென்று சேர்கிறதோ அவ்விடத்தின் பெயரால் அழைக்கிறோம். விரிகுடா என்பது Bay என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். கரையை நெருங்கும்போது குறுகியும் கடலுக்குள் செல்கையில் விரிந்தும் காணப்படும் கடற்பரப்பு விரிகுடா (Bay) எனப்படும். அதன்படியே வங்காளத்தை அடையும் அக்கடற்பகுதி ஓரத்தில் குறுகியும் கடலை நோக்கி உட்செல்கையில் அகன்றும் இருப்பதால் ‘வங்காள விரிகுடா’ என்று அழைக்கிறோம். சுருக்கமாக ‘வங்கக் கடல்’ என்றும் வழங்குவதுண்டு.

அவ்வாறே அரபு தேசத்தை அடையும் கடற்பரப்பை அரபிக் கடல் என்கிறோம். தெற்கிலுள்ள கடற்பரப்பானது இந்திய நாட்டை அடையும் கடற்பரப்பு என்பதால் இந்தியப் பெருங்கடல் என்று ஐரோப்பியர்கள் பெயரிட்டனர்.

வங்கக்கடல், அரபிக்கடல் என்று பழந்தமிழகத்திற்கு வெகு  தொலைவிலுள்ள பிறநாடுகளைக் குறிப்பிட்டு வழங்கும் வழக்கம் நம்மிடம் இருக்கவில்லை. தமிழர் தம் கடற்பரப்புக்குத் தமிழ்ப்பொருளிலேயே பெயரிட்டு அழைத்தனர். ஆங்கிலேயர் முன்வைத்த பெயர் முறைகளால் நம் தமிழ்ப்பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன.

தமிழில் வங்கக்கடலுக்குக் குணகடல் என்றும், அரபிக் கடலுக்குக் குடகடல் என்றும் பெயர்கள் இருந்தன. அப்பெயர்ப் பொருளும் இயற்கை சார்ந்தது.

குணக்கு என்றால் கிழக்கு. குடக்கு என்றால் மேற்கு. அதனால்தான் மேற்கிலுள்ள நாட்டினைக் குடநாடு என்றனர். கேரளத்திலுள்ள குடநாட்டினை நினைவிற்கொண்டு குடக்கு என்பது மேற்கு என்று மனத்தில் இருத்துங்கள்.

கிழக்கே இருக்கும் கடலினைக் குணகடல் என்றும் மேற்கே இருக்கும் கடலினைக் குடகடல் என்றும் நாம் அழைத்தோம். தெற்கிலுள்ள கடலையும் குமரிக்கடல் என்றே அழைத்தோம். குமரியிலிருந்து தெற்கே பரவியிருக்கும் கடல் என்பதனால் அப்பெயர்.

குணக்கு, குடக்கு என்னுமிரண்டு திசைப்பெயர்களும் புணர்ச்சியின்போது குண, குட என்று நிற்கும். வல்லொற்று மிகாது. வடக்கு என்பது வட என்று நிற்பதைப் போன்றது இது. (வடமொழி, வடவேங்கடம், வடதிசை).

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நம்மைச் சுற்றியிருந்த கடல்களை வங்கக் கடல், அரபிக் கடல் என்று அழைத்திருக்கவே மாட்டோம். அவை ஆங்கிலேயர் வைத்த பெயர்கள். பிறகு அப்பெயர்களே நம் பாடப்பகுதிகள் தொட்டு தலையில் கட்டப்பட்டன.

எண்ணிப் பாருங்கள், நம்மைச்சுற்றியுள்ள கடல்களுக்கு நாம் தமிழ்ப்பெயர் வைத்திருப்போமா, இல்லையா ? அப்பெயர்கள் என்னவாயின ? அப்பெயர்களே குணகடல், குடகடல், குமரிக்கடல் என்பவை. எங்கோ இருக்கும் வங்காளத்தை இழுத்து வைத்தா பெயர் வைப்போம் ?

குணகடல், குடகடல் ஆகிய இரண்டு தமிழ்ப்பெயர்களையும் நான் முன்பே அறிந்திருந்தேன் எனினும் வேர்ச்சொல் பிடிபடாதிருந்தது. “குணம், குடம் என்பதிலிருந்து அச்சொற்கள் வந்தனவா, குணக்கடல் குடக்கடல் என்று ஏன் வலிமிகவில்லை...?” ஆகிய பொருந்தாக் குழப்பங்கள் இருந்தன.

இலக்கணத்தில் திசைப்பெயர்ப் புணர்ச்சிகளைப் பற்றிய விளக்கங்களை ஆராய்ந்தபோது வடக்கு, குணக்கு, குடக்கு ஆகிய திசைப்பெயர்கள் எவ்வாறு புணரும் என்பனவற்றை எடுத்துக்காட்டுகளோடு விளக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். புதையல் கண்ட மகிழ்ச்சி.

வடக்கு + திசை = வடதிசை என்று வல்லொற்று மிகாது நிற்றல்போல, குணக்கு + கடல், குடக்கு + கடல் ஆகியனவும் அவ்வாறே குணகடல், குடகடல் என்று நிற்கும். 

கிழக்குக்கும் மேற்குக்கும் மாற்றுச் சொற்கள்  இல்லையா என்ற என் ஏக்கமும் தீர்ந்தது. குணக்கும் குடக்கும் கிழக்கும் மேற்குமாம். 

எங்கோ இருக்கும் வங்காளத்தையும் அரபினையும் துணைக்கழைக்காமல், நம் கடற்பரப்புக்குத் தமிழில் வழங்கப்பட்ட பெயர்களான குணகடல், குடகடல், குமரிக்கடல் ஆகியவற்றையே நாமும் பயன்படுத்துவோமாக.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...