Thursday, October 18, 2018

அய்யோ எப்பா சரணம்......கோவி லெனின்

சபரிமலைக்கு பெண்கள் செல்வது அய்யப்பனின் பிரம்மச்சரியத்துக்கு எதிரானதா?
-----------------------------------------------------------------------
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் சபரிமலைக்கு பெண் பக்தர்கள் செல்ல முடியாத சூழல் தொடர்கிறது. பக்தர்கள் மட்டுமா? பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாராக இருந்தாலும் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.

ஆன்மிக மரபுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்கிறார்கள் அய்யப்ப பக்தர்கள். அதுவும், சபரிமலையில் உள்ள அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பருவத்தில் உள்ள பெண்கள் அங்கே செல்வது அவரது பிரம்மச்சரியத்துக்கு எதிரானது என்கின்றனர்.
அது என்ன நைஷ்டிக பிரம்மச்சாரி?

பிரம்மச்சரியம் (திருமண உறவுக்கு முந்தைய வாழ்க்கை), கிரகஸ்தாஸ்ரமம் (குடும்ப வாழ்வு), வனப்ரஸ்தம் (வீட்டைத் துறந்து காட்டில் வாழ்தல்), சந்நியாசம் (இல்லறத்தை முழுமையாகத் துறத்தல்) என 4 படிநிலைகளை வலியுறுத்துகிறது ‘இந்து’ மதம். இதில் பிரம்மச்சர்யத்தை விட்டு நீங்காமல், குடும்ப வாழ்க்கைக்குச் செல்லாமல், தனது குருவுக்கே வாழ்க்கையை அர்ப்பணிப்பதுதான் நைஷ்டிக பிரம்மச்சரியம். மகாபாரதத்தில் பீஷ்மரும், இராமாயணத்தில் அனுமரும் நைஷ்டிக பிரம்மச்சாரிகள்.
“இயற்கை தர்மத்தை அநுசரித்து பிரம்மச்சாரியானவன் அதனை நீக்கும் சடங்கான சமாவர்த்தனம் பண்ணிக்கொண்டு அப்புறம் விவாஹம்(திருமணம்) செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதுதான் பொதுதர்மம். நைஷ்டிக பிரம்ம்ச்சாரியாக இருப்பேன், ஸந்நியாஸியாக இருப்பேன் என்று நல்ல வாலிபத்திலேயே நினைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் பிரகிருதி (இயற்கையான) வேகத்திலே இழுக்கப்பட்டு அந்த ஆசிரமத்துக்கு விரோதமாக நடந்து கொண்டுவிட்டால் மஹத்தான பாபமாகிறது ” என ‘தெய்வத்தின் குரல்’ கொண்டு ஒலிக்கிறார் காஞ்சி பெரிய சங்கராச்சாரியார்.
சபரிமலையில் மகத்தான பாபம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே பெண்களை அனுமதிக்க மறுக்கும் இந்துத்வா அமைப்புகளின்  நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டுக்கு மலைப்பாதையில் உள்ள வாபர் மசூதியை நிர்வகிக்கும் எரிமேலி ஜமாஅத்தும் ஆதரவு தெரிவித்து, வழிபாட்டு மரபுகளை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்கிறது.

மோகினி எனும் பெண் உருவில் இருந்த திருமால் மீது சிவன் கொண்ட மோகத்தின் விளைவுதான் அய்யப்பன் என்கிறது புராணம். அதனால்தான் அய்யப்பன், பெண் வாசம் இல்லாமல் நைஷ்டிக பிரம்மச்சாரியாக சபரிமலையில் இருக்கிறார் என புராணத்தின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் கூறுகிறார்கள் பக்தர்கள். அதே புராணத்தில், நைஷ்டிக பிரம்மச்சாரி குறித்த விளக்கமும் உண்டு.

பிரம்மாதான் நைஷ்டிக பிரம்மச்சாரி என நினைக்கும் நாரதர், அவரிடம் அது பற்றி கேட்கிறார். பிரம்மனோ, கிருஷ்ணர்தான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்கிறார். கோபியருடன் கொஞ்சும் கிருஷ்ணர் எப்படி நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருக்க முடியும் என நாரதர் குழப்பமடைய, இது பற்றி துர்வாச முனிவரிடம் கேள் என்கிறார் பிரம்மா. நாரதர் துர்வாசரிடம் போய் விளக்கம் கேட்கிறார்.
துர்வாசரோ, “கிருஷ்ணர்தான் நைஷ்டிக பிரம்மசாரி என்பதில் சந்தேகம் வேண்டாம். பெண்களே இல்லாத இடத்தில் வாழ்பவனும், பெண்கள் தன்னை அணுகாமல் தவிர்த்து வாழ்பவனும் பிரம்மச்சாரி அல்ல. பதினாயிரம் கோபியர்களுடன் ராசலீலை புரிந்து அவர்களின் பாசத்திற்கும் பிரேமைக்கும் ஆளாகிய போதிலும் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அவர்கள் மீது இச்சை கொள்ளாமல் வாழும் கிருஷ்ணரே நைஷ்டிகி பிரம்மச்சாரி’‘ என விளக்கம் அளித்தார். (தினமலர் இணையதளம்-ஆன்மிக வகுப்பறை 2014 ஜூலை 4)

அய்யப்ப பக்தர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தும் பா.ஜ.க.-பரிவார அமைப்புகளோ, சபரிமலைக்கு பெண்கள் வருவது அய்யப்பனின் நைஷ்டிக பிரம்மச்சரியத்துக்கு எதிரானது என்று பக்தர்கள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரையிலான அனைத்துப் பெண்களையும் தடுத்து தாக்கி விரட்டுகிறது.
ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பவர்கள் யாரெனப் புரிகிறதா?

திருவள்ளுவர் ஆண்டு 2049 அய்ப்பசி 1

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...