ஹிட்லராக மாறுகிறார் மோடி ?
------------------------------------------------------
அண்மைக்காலமாக மோடி சந்திக்கும் தேர்தல் படுதோல்விகள் அவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளது. போதாக்குறைக்கு எதிர்கட்சிகள் அமைக்கும் பலமான கூட்டணி அவரைத் தூங்க விடாமல் செய்து வருகிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், கலைஞர் சிலைத்திறப்பு விழாவில், சோனியா முன்னிலையில் ராகுலை பிரதமராக பிரகடனம் செய்தது முதல், பா.ஜ.கவின் பார்வை தீவிரமாக தமிழகம் மீது பதிந்துள்ளது.
அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி என்பது இயல்பான கூட்டணியாக முடிவாகிவிட்ட நிலையில், தற்போது 'ஊழல் எதிர்ப்புப் போராளி' அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க கூட்டணி நோக்கி நகர்வதாக செய்தி வருகிறது.
திராவிட இயக்கங்களோடு கூட்டணியே இல்லை என்று முழங்கி வரும் அன்புமணி ராமதாஸ், இதுவரை பா.ம.க அ.தி.மு.க கூட்டணிக்கான செய்தியை மறுக்கவே இல்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
இன்னும் ஆறே மாதத்தில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுவது உறுதி. கடந்த தேர்தலில் பா.ஜ.க தே.மு.தி.க ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், அவர் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப்பெறுவது இயலாத காரியம்.
பா.ம.கவின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால் , அன்புமணியின் தேர்தல் வெற்றிக்காக அக்கட்சி எவ்வித சமரசத்துக்கும் உடன்படும்.
கடந்தமுறை அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசிவரை மோடி அதற்கு உடன்படவே இல்லை. அதையெல்லாம் மிக எளிதாக கடந்து , மீண்டும் அன்புமணி நாடாளுமன்றம் சென்றால் போதும் என்ற ஒரே காரணத்துக்காக கூட்டணியில் இணைகிறது பா.ம.க.
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பட்டமாக சமூக வலைத்தளங்களை , தனி நபர் சுதந்திரத்தை ஒடுக்கும் அறிவிப்பாகவே அது பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய் செய்திகளை சம்மந்தப்பட்ட வலைத்தளங்கள் 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என்பதே மத்திய அரசு அந்தந்த சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இட்டிருக்கும் கட்டளை.
அண்மையில் 5 மாநில தேர்தலில் பா.ஜ.க கண்ட படுதோல்விக்கு சமூக வலைத்தளங்கள் மிக முக்கிய காரணம். எந்த சமூக வலைத்தளங்களால் மோடி அலை கடந்த 2014 ஆண்டு பெரும்பான்மை இந்தியவை சுருட்டியதோ , அதே சமூக வளைத்தளங்களில் மோடிக்கு எதிராக பகிரப்படும் கருத்துகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.
ஊடகங்களை ஆசைக்காட்டி மோடி தன் கைப்பாவையாக வைத்திருக்கலாம். ஆனால், சமூக வலைத்தளத்தில் செயலாற்றும் கோடிக்கணக்கான செயற்பாட்டாளர்களை ஒடுக்குவது கடினம். ஏற்கனவே வாட்சேப்பில் ஒரு நேரத்தில் 5 பேருக்கு மேல் செய்தி அனுப்ப தடைவிதிக்கப்பட்டாகி விட்டது. அடுத்த இலக்கு முகநூல் மற்றும் ட்விட்டர்.
பொய் செய்தியை, வதந்தியை 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவால், இனி யாரும் மோடிக்கு எதிராக ஒரு மீம்ஸ் கூட வெளியிட முடியாது. நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்தே இந்த அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையை மோடி அரசு செய்துள்ளது.
சமூக வலைத்தள நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்தியா மிப்பெரிய சந்தை. மத்திய அரசின் சட்ட திட்டங்களை அவை எளிதாக ஏற்றுக்கொள்ளும். தேவைப்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிக்கு அவை ஒத்துழைக்கவும் செய்யும்.
அச்சு ஊடகங்கள் முற்றிலும் முடங்கிவிட்ட காலமிது. காட்சி ஊடகங்கள் பெரும் முதலாளிகளின் கையில். பெரும் முதலாளிகள் மோடியின் பையில். ஜனநாயகத்தின் கடைக்கோடி இந்தியனின் கடைசி நம்பிக்கை சமூக வலைத்தளம். அதையும் அரச பயங்கரவாதம் தன் ரத்தம் தோய்ந்த பூட்ஸ் கால்களால் நசுக்கத்தொடங்கி விட்டது.
என்ன செய்யப்போகிறோம் சமூக விரோதிகளே ? தேச விரோதிகளே ?
- தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment