Tuesday, January 1, 2019

ஜெயலலிதா மரணம்....குற்றவாளிகளே நீதி கேட்கும் மர்மம்!!

ஜெயலலிதா மரணம்....குற்றவாளிகளே நீதி கேட்கும் மர்மம் !!
---------------------------------------------------------------------

"திருவாரூர் தேர்தல் தேரின் உற்சவர் யார்? " என்றத் தலைப்பில் நேற்று காலை வெளியான நமது "தாகம்" கட்டுரையில் இடம்பெற்ற கருத்துகள், நேற்று மாலையும் இன்று காலையும் தொலைக்காட்சி விவாதங்களில் பரபரத்துக்கொண்டிருக்கிறது.

அ.ம.மு.க அ.தி.மு.கவுடன் இணையாதப்பட்சத்தில் ,  ஜெயலலிதாவின் மர்ம மரணப் பழியை சசிகலா தினகரன் தலையில் போட அ.தி.மு.க களமிறங்கிவிட்டது . தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமியின் ஆணையத்தை தமிழக அமைச்சர்களே கேலிக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களாக அமைச்சர்கள், ஜெயலலிதா மரணம் குறித்து வெளியிடும் கருத்துகளுக்கு ஏன் இதுவரை நீதியரசர் ஆறுமுகசாமி கண்டனம் தெரிவிக்கவில்லை ?

ஒரு பேச்சுக்கு விவாதிப்போம். ஒருவேளை சசிகலாதான் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என்றால் , மக்கள் கேட்கும் கேள்விகள் இவைதான்....

1. ஜெயலலிதா இறக்கும்வரை சசிகலா அவரை போயஸ் தோட்டத்தில் வைத்தே தன்னிஷ்டம் போல் சிகிச்சை அளித்தாரா ?

2 . உலகத்தரம்வாய்ந்த மருத்துவமனை என்று பீற்றிக்கொள்ளும் அப்பல்லோ மருத்துவமனை, ரிச்சர்ட் பீலே தலைமையில் சசிகலா சொல்படிதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததா?

3. ஜெயலலிதா அறையில் சி.சி.டி.வி கேமராவே இல்லை. ஜெயலலிதாவின் டி.என்.ஏ ரத்த மாதிரியும் தம்மிடம் இல்லை என்று பகிரங்கமாக நீதிமன்றத்திலும் , விசாரணை ஆணையத்திலும் அறிக்கை சமர்பிக்கும் அப்பல்லோ பிரதாப் ரெட்டியை ஏன் இதுவரை நீதிமன்றம் கண்டிக்கவில்லை. தமிழக அரசு ஏன் இதுவரை அவரை கைது செய்து விசாரிக்கவில்லை ?

4 . சசிகலாவை மட்டும் குற்றம் சுமத்தும் அமைச்சர்கள், ஏன் பிரதாப் ரெட்டி மீது பாய மறுக்கிறார்கள்?

5 . " தங்களை சசிகலா, ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறைக்குள் அனுமதிக்கவே இல்லை " என்று இன்று வீரவசனம் பேசும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அன்றைக்கு , " ஜெயலலிதா நலமுடன் " இருக்கிறார் என்று மீண்டும் மீண்டும் மக்களை நம்பவைத்தது ஏன் ?

6. அன்றைய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவுக்கு கட்டுப்பட்டவர்கள் , அதனால் அவர்களால்  ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறைக்கு செல்ல முடியவில்லை. ஆனால், அன்றைய ஆளுநர் மற்றும் மோடியின் அமைச்சர்கள், " ஜெயலலிதாவை பார்த்தோம். நலமாக உள்ளார் " என்று சொன்னார்களே , அவர்களும் சசிகலா கட்டுப்பாட்டில்தான் இருந்தார்களா ?

7 . யாருமே செல்ல முடியாத ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்குள் மருத்துவர்கள் சென்றுதானே இருக்க முடியும்.  "ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும் , சிகிச்சை குறித்தும் " மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சொன்னார்களே...அதுவும் பொய்தானா?

8 . ஜெயலலிதாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் ஒருவேளை கொலை செய்யப்பட்டு இருந்தால் , சசிகலா மட்டும் குற்றவாளியா ? அப்பல்லோ பிரதாப் ரெட்டியும் குற்றவாளிதானே ? ' ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் ' என்று தினம்தோறும் ஊடகங்களில் பொய்  சொன்ன அத்தனை அ.தி.மு.வினரும் குற்றவாளிகள்தானே ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரின் சகிச்சையைத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்த மோடியும் அவரது உளவுத்துறையும் குற்றவாளிகள்தானே ?

# தாகம் இதழுக்காக ...கரிகாலன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...