சமீபத்தில் ஒரு செய்தி பார்த்தேன். பிரமாண்டமான கோதண்ட ராமர் சிலையொன்று டயர் வெடித்த லாரியொன்றில் நடு வீதியில் படுத்துக் கிடக்கிறது. கறுங்கல்லால் ஆன அச்சிலையின் மீது மக்கள் உதிர்த்திருந்த சாமந்திப் பூக்களையும் பார்த்தேன். ஏதோ பிக்னிக் வருவதைப் போல அப் பகுதியில் கூட்டம். திடீர்க் கடலைக் கடை போட்டிருந்தார்கள் அங்கே. எரிச்சலாக இருந்தது. அச்சிலை கடந்து போக நிறைய வீடுகள் கடைகளை இடிக்க வேண்டுமாம். எதற்கு இந்தப் பிரம்மாண்டம்? நாங்கள் கேட்டோமா?
இன்னொன்று மதுரை அருகே பிரமாண்டமான லிங்கம் ஒன்றை நிறுவப் போவதாகவும் ஒரு செய்தி படித்தேன். இது சம்பந்தமாக பல வருடங்களாகவே யோசித்துக் கொண்டிருக்கிறேன். பிரமாண்டமான சிலைகள் சம்பந்தமான அவதானிப்பு.
எங்களூரில் இருக்கிற செண்பக வல்லியம்மன் என் நெஞ்சு உயரம்தான். கயத்தாறு பக்கத்தில் இருக்கிற யானை மேல் அய்யனார் கோவில் என் ஆச்சியின் பூர்வீகம். ஆச்சியின் குல சாமி வேடன் வேடத்தி என் முழங்கால் உயரமே. ஏன் ஐயப்பன் உருவமே கணுக்காலுக்கு சற்று மேலே. பழனி முருகனே என் நெஞ்சுக்குக் கீழேதான். எங்கு சுற்றினாலும் உயரம் குறைந்த குல சாமிகளே.
எங்களைப் பொறுத்தவரை பாண்டி முனிதான் பிரமாண்டம். அதை விட்டால் திருப்பதி. சொல்லிச் சொல்லி மாய்வோம். கன்னியாகுமரி பக்கத்தில் ஏதோ பெரிய சாமியொன்று மல்லாக்க படுத்துக் கிடப்பதாகச் சொல்வார்கள். போய்ப் பார்த்ததில்லை. வேறு எங்காவது இதுமாதிரி இருக்கலாம். எங்களுக்குத் தெரியாது.
சாமி என்று வந்தால், வயல் மேடுகளில் சாணி உருண்டையாகத் திரட்டப்படும் பிள்ளையார் துவங்கி, அய்யனார், கருப்புசாமி, சிவன் என ஒரு வரிசைக் கிரமமான ஒரு வழிபாட்டு முறை உண்டு. அதில் ராமர் இல்லை. ராமரை எங்களுக்குத் தெரியாது. ராமர் கோவில்கள் குறித்து ஒருதடவை ஆய்வு மேற்கொண்டு கட்டுரையொன்றை எழுதினேன். அது காலச்சுவட்டில் வந்தது.
சென்னை சிங்கப் பெருமாள் கோவில் பக்கமாக ஒரு ராமர் கோவில், வடபழனி பக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஒன்று, அப்புறம் ஏரி காத்த ராமர் என்று எங்கோ ஒன்று. தமிழகத்தில் ஆங்காங்கே ஒன்றிரண்டு என்பதாகத்தான் இருந்தது. இப்போது சிவகாசியில் காலண்டர்களில் ராமர் வந்து விட்டார்.
அப்புறம் திடீரென சாய் பாபா கோவில்கள் வந்தன. ரஜினி வழியாக ராகவேந்திரர் வந்தார். சபரிமலையைப் பொறுத்தவரை தீவிரமான வழிபாடு. இந்த திடீர்க் கோவில்களில் காணப்படும் அன்னியத்தன்மை காரணமாக அங்கே போவதற்கு பெரும்பாலும் தயங்குவேன். ஒருதடவை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கிற பிரத்தியங்கார தேவி கோவில் ஒன்றிற்குப் போனேன்.
அதன் கிளையொன்று கோவைக்குப் பக்கத்தில் இருக்கிறதாம். கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு சுமார் முப்பதடிச் சிலை. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. பிரம்மாண்டமென்றால் மிரட்ட வேண்டாமா? அதை விட ரெம்பக் குட்டையான பாண்டி முனியின் பார்வையைப் பார்த்தால் மிரண்டு போய் விடுவீர்கள்.
முலாம் பூசிக் கட்டப்படும் கோவில்கள் பல இப்படித்தான் பொம்மைக் கோபுரங்களாய் உயர்ந்து நிற்கின்றன. கோவில் என்பது முழுக்க முழுக்க பழமையின் கற்சுவரில் கறுப்பு மை ஒட்டிய புராதன உணர்வோடு சம்பந்தப் பட்டது. அவை கைவிடப்பட்ட ஒரு தனிமையின் பாவனையைக் கொண்டிருப்பவை.
என்னுடைய குலசாமி சிந்துபட்டி பெருமாள். உசிலம்பட்டிக்கு அருகில் அருள் பாலிக்கிறார். எனக்கெல்லாம் சுத்தமாக பயமே இல்லை. போகிற நேரமெல்லாம் எப்போதும் பூட்டியே கிடக்கும். பூசாரி பூட்டிப் போட்டு விட்டு வீட்டில் ஏதோ வேலையாய் இருப்பார். போய்க் கூப்பிட்டால் உடனடியாக வந்து விடுவார்.
சாவகாசமாய் பொங்கல் வைக்கிற வரை அக்கோவிலைத் தனியாகச் சுற்றிக் கொண்டிருப்போம். அச்சாமி சிலையும் என் இடுப்புக்குச் சற்று மேலேதான். அங்கே எனக்கு பக்தி இருந்தது. ஒரு ஸ்நேகம் இருந்தது. கெடா வெட்ட வேண்டும் என்று சொன்ன போது, பக்கத்து தோட்டத்தில் வெட்டிக் கொள்ளுங்கள் என நெகிழ்ந்து கொடுத்தார்கள்.
சமீபத்தில் ஒருதடவை போன போது, கோவிலைச் சுற்றி எடுத்துக் கட்டியிருந்தார்கள். எல்லாமும் புரிந்து விட்டது. நடை திறக்க நாலு மணியாகும் என்றார்கள். நச்சென தலையில் கொட்டிய மாதிரி இருந்தது. நாங்கள் நினைத்த போதெல்லாம் திறந்து பார்த்த சாமி அது.
நன்றாகப் புரிய ஆரம்பித்து விட்டது. ஸ்நேகமாய் இருந்த கோவில்களை வேறொரு கரம் கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டது. சம்பந்தமே இல்லாத பிரம்மாண்டம் என்கிற கரங்கள் கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டன. மதுரையின் மைந்தனாய் சொல்கிறேன். நூறு அடியில்கூட லிங்கம் வரலாம். ஆனால் அது பாண்டி முனிக்கு ஈடாகாது. அங்கேதான் பயமும் ஸ்நேகமும் இயல்பாகவே வருகிறது.
No comments:
Post a Comment