அம்மா அப்பா
இவர்களே எங்களின் அடிப்படை ஆதாரம்!!
எல்லோருக்கும் அம்மா அப்பா அவர்களின் பிள்ளைகளுக்கானவர்கள். ஆனால் இவர்களோ குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், இயக்க குடும்பத்தினர் அனைவருக்கும் தாய் தந்தை போன்றவர்கள். படிப்பதற்காக, மருத்துவத்திற்காக சென்னைக்கு வருபவர்கள் தங்கி இளைப்பாரும் ஆலமரம் அந்த வீடு. அம்மா, அப்பா, அருள் மற்றும் நான் என்று நால்வரும் தனியாக ஒரு நாள் கூட அந்த வீட்டில் இருந்தில்லை. மாமாக்கள் சித்தார்த்தன், பெரியார்செல்வன், காமராஜ், வளர்மதி சித்தி, செல்வி அத்தை, அண்ணன்கள் தளபதி, ராகுலன், குணா, சாந்தி அக்கா, புதி, இனி, ஜீவா மற்றும் பல நண்பர்களோடு பல கட்டங்களில் அந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறோம்.
அப்பா: அப்பா அரசு வேலையை விட்டுவிட்டு முழு நேரம் இயக்கத்திற்காக வேலை செய்ய வேண்டும் என்று விரும்பிய போது அம்மா எந்த சலனமும் இன்றி ஏற்றுக் கொண்டார்கள். அந்த காலகட்டத்தில் குடும்ப சூழலும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. நான் 8 ஆம் வகுப்பும் அருள் 7ஆம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம். அப்பா அரசு வேலையை விட்டு வந்த கடைசி நாள் நாகூர் தாத்தா மருமகனை சால்வை போட்டு வரவேற்று இயக்கத்திற்காக வேலையை விட்டு வந்ததற்காக தனது எல்லையற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்பா அன்று முதல் (அதற்கு முன்பேயும் ) ஒரு இராணுவ வீரனின் கட்டுப்பாட்டின்படி இன்று வரை ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். இயக்கம், குடும்பம் என்று அனைவரின் உடல்நிலையிலும் அதிகம் அக்கறை உள்ளவர். தனது வேலைப்பளுவிற்கு இடையிலும் எங்களோடு உரையாடுவதிலும் பேரக்குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடுவதிலும் நேரம் செலவிடுவார். சோம்பல் அப்பாவிற்கு பிடிக்காத வார்த்தை. 79 வயதிலும் இரவு விழித்திருந்து மறுநாள் பத்திரிக்கைக்கான பணியை முடிக்காமல் தூங்க மாட்டார். Dedication and Determination are his strengths.
அம்மா : ஒய்வறியா உழைப்பாளி. யாருக்கு உடல் நிலை சரியில்லை யென்றாலும் நேரில் சென்றோ தொலைபேசி வழியாகவோ பேசி விடுவார்கள். தன்னுடைய மருத்துவ விடுப்பு அனைத்தையும் உறவினர், நண்பரின் மனைவிக்கு குழந்தை பேறு என்றே செலவழித்த வர். அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட போது ஊதிய இழப்பில் விடுமுறை எடுத்துக் கொண்டவர். அம்மாவுக்கு பந்தா, பகட்டு இவை அறவே கிடையாது. அம்மாவுக்கு தைரியமும் தன்னிச்சையாக (அடுத்தவரை சார்ந்து இருக்காமல்) செயல்படும் சுபாவம். ஆர்டிகா அண்டார்டிகாவுக்கு கூட உங்க அம்மா தனியா போயிடுவாங்க என்று அப்பா சில சமயம் கிண்டல் செய்வார்கள். அம்மாவுக்கு கோப சுபாவம். ஆனால் சிறிது நேரத்திலே அதை தூக்கி போட்டுவிட்டு வேறு வேலை பார்க்க போய் விடுவார்கள். அம்மாவின் குணம் எனக்கு இருப்பதாக வீடே சொல்லும்,
அம்மா அப்பா: பெரியாரின் நெறியை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்பவர்கள்.
அப்பா அம்மாவை 'ஏங்க' என்று தான் அழைப்பார். 50 வருடங்களாக இதை பின்பற்றிக் கொண்டிருக்கிறார். அம்மாவின் தனித்துவத்தையும் அவர்களின் விருப்பத்தையும் மிக இயல்பாக ஏற்றுக்கொண்டவர். அம்மாவிற்கான சுதந்திரம் unlimited.
பொன்விழா திருமண ஆண்டில் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி.
மற்றவர்களுக்கு கிடைத்திடாத பெற்றோர் எங்களுக்கு அமைந்தது பெருமை!
No comments:
Post a Comment