தன்னாட்சித் தமிழகம்
பத்திரிகைச் செய்தி
பொறியியல் கல்விக்கான நீட் தேர்வை தமிழ்நாடு ஏற்கக்கூடாது.
தமிழ்நாட்டு முதல்வருக்கு தன்னாட்சித் தமிழகம் வேண்டுகோள்.
ஜூலை 23, 2018. சென்னை: மருத்துவப் படிப்பில் “நீட்”டை நுழைத்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பையே சிதைத்தது போல் பொறியியல் படிப்பிலும் நீட்டைப் புகுத்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது. அனைத்திந்திய தொழில்நுட்பக் குழுவின் (AICTE) துணைத்தலைவர் எம்.பி. பூனியா, நேற்று சென்னையில் நடைபெற்ற சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, பொறியியல் படிப்பில் நீட் 2019ஆம் ஆண்டில் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.
மருத்துவப் படிப்பில் நீட் என ஒன்றிய அரசு அறிவித்ததுமே, அதைக் கடுமையாக எதிர்த்தது தமிழ்நாடு. அனிதாவைப் பறிகொடுத்து ஓராண்டு ஆகவில்லை. நீட் என்னும் சமூக அநீதித் தேர்வு முறைக்கு எதிராக அனைத்துத் தமிழர்களுமே போர்க்கொடி ஏந்தியிருக்கும் நிலையில், இப்போது பொறியியல் துறைக்கும் அதை நீட்டிக்க மோடி அரசு முயற்சி செய்வது அது எந்த அளவுக்கு தமிழ்நாட்டின் உணர்வுகளையும் மாநிலங்களின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
ஏற்கனவே சட்டமன்றத்தில் இரண்டு நீட்-விலக்கு மசோதாக்கள் (ஒன்று மருத்துவ மாணவர் சேர்க்கைக்கானது; மற்றது பயிற்சி மருத்துவர்களின் மேற்படிப்புக்கானது) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் அரசியல்சாசன நெறிமுறைகளை மீறிவருகிறது மோடி அரசு.
2017 மற்றும் 2018 நீட் தேர்வுகளில் நடைபெற்ற தில்லுமுல்லுகள், குளறுபடிகள் மூலம் நீட்டின் கையாலாகாத்தனம் தெளிவாகத் தெரிகிறது. நீட்-விலக்கு மற்றும் நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு பிரச்சனைகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமூக நீதிக்கு எதிராகவே இருக்கிறது என்கிற கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது. தகுதி, தர நிர்ணயம் என்று கூறி மருத்துவத் துறையில் ஒன்றிய அரசு கொண்டுவந்த நீட் இப்போது சந்தி சிரிக்கிறது. கோச்சிங் மாபியாக்களும் தனியார் கல்லூரிகளும் பலன் பெறுவதற்கே நீட் என்பது வெளிச்சமாகிவிட்டது. எந்த தகுதியும் இல்லாமல், எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெறாமல், ப்ளஸ் 1, ப்ளஸ் 2வில் போதுமான அடிப்படை அறிவே பெறாமல், கோச்சிங் மூலம் நீட் தேர்வில் மட்டும் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தாலே மருத்துவக் கல்லூரி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறதென்றால், இது இந்தியாவின் மருத்துவ எதிர்காலத்துக்கே விடப்பட்ட சவால் ஆகும். இதே நிலை இனி பொறியியல் படிப்புக்கும் வரலாம். படிக்கும் மாணவர்களைவிட பணமுள்ள மாணவர்களே புகழ்பெற்ற அரசுக் கல்லூரிகளில் சேரும் நிலை ஏற்படும் என்பது உறுதி. பணவசதி அற்ற மாணவர்களுக்கு நல்ல கல்லூரிகள் கிடைக்க வாய்ப்பின்றி போகும்.
பொறியியல் கல்வியில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துவருகிறது. அண்ணா பல்கலைக்கழகமும் பிற அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளும் சுமார் முப்பதாண்டுகளாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறியியல்சார் துறைகளில் மிகப்பெரிய அளவிலான மனித வளத்தை உருவாக்கிக் தந்திருக்கின்றன.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளில் உருவான பொறியாளர்கள் இந்திய தகவல்நுட்பப் புரட்சிக்கு அச்சாணியாக இருந்தார்கள். இந்த மகத்தான சாதனைகளை பொருளாதாரவாதிகளும் கல்வியாளர்களும் தகவல்நுட்பத்துறை நிபுணர்களும் பதிவுசெய்திருக்கிறார்கள்.
இந்தியாவின் சேவைத் துறையைத் தூக்கிநிறுத்திய தமிழ்நாட்டு உயர்கல்வித் துறையை ஒழித்துக்கட்டும் நிலையை நோக்கி தமிழ்நாட்டைத் துரத்துகிறது மோடி அரசு. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியப் பல்கலைக்கழகங்களை டெல்லிப் பேரரசு தன்வசம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யும் நிலையில், பொறியியல் துறையில் நீட் என்பது தமிழ்நாட்டின் ஒரு நூற்றாண்டு கால கல்வித் துறை வளர்ச்சியின் மீது விழும் மரண அடியாகும்.
தமிழ்நாட்டு மக்களும் அவர்களுக்காக போராடிவரும் அமைப்புகளும் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி, பொறியியல் கல்விக்கான நீட்டைத் தடுத்துநிறுத்த உடனே முன்வரவேண்டும். மருத்துவ நீட்டுக்கு எதிராகத் தொடங்கிய சட்டபூர்வப் போராட்டத்தைத் தொடரவும் வேண்டும்.
கடந்த முறை கள்ளத்தனமாக நீட்டுக்கு இசைவளித்ததுபோல, இந்த முறையும் தமிழ்நாட்டு அரசு ஒன்றிய அரசு நீட்டிய தாளில் கையெழுத்திடாமலிருக்க வேண்டும் என தன்னாட்சித் தமிழகம் தமிழ்நாட்டு அரசைக் கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டு அரசு தொடர்ந்து துரோகம் செய்யுமானால் அது தமிழ்நாட்டு மக்களின் கடுங்கோபத்துக்கு இலக்காகும் என்பது உறுதி.
சமூக நீதி என்னும் அடித்தளத்தில், தன்னாட்சி அதிகாரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மீட்க அனைவரும் களம்காண வேண்டும் என்றும் தன்னாட்சித் தமிழகம் அழைக்கிறது.
ஆழி செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர்
தன்னாட்சித் தமிழகம்
9884155289
ஜூலை 23, 2018
சென்னை
No comments:
Post a Comment