Monday, July 23, 2018

ஆரா

டிஃபென்ஸ் காரிடார்: முதல்வர் ஒப்புதல்!

சென்னை- சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு காட்டுபவர்களை மிரட்டுதல், கைது செய்தல் என்று நேற்று சீமான் கைது வரை கெடுபிடிகள் தொடர்கின்றன.

இவ்வாறு கெடுபிடிகள் காட்டப்படுவதற்குக் காரணம் இந்த சாலை, ‘டிஃபென்ஸ் காரிடார்’ அதாவது ராணுவத் தளவாட வழித் தடமாக பயன்படுத்தப்பட இருப்பதுதான் என்று தமிழக ஊடகங்களில் முதன் முறையாக மின்னம்பலம். காம் இதழில், கடந்த ஜூன் 21ஆம் தேதி, எட்டுவழிச் சாலை என்கிற ராணுவச் சாலை என்ற செய்திக் கட்டுரையை வெளியிட்டோம்.

இதற்கு சேலம் கலெக்டர் ரோகினி அப்போது மறுப்பு கூட தெரிவித்தார். இன்று (ஜூலை 19) மேட்டூர் அணையைத் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோது முதல்வர் எட்டு வழிச் சாலை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

“இப்போது நான் விசாரித்தவரை எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக 90% நில எடுப்புப் பணிகள் முடிந்துவிட்டன. பல நில உரிமையாளர்கள் நிலம் எடுக்க ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஒரு சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, சில இடங்களில் அளக்கப் போகும்போது அங்கே பல கட்சிக்காரர்களை வைத்து பிரச்சினை செய்து அதைப் பெரிதாகக் காண்பிக்கிறார்கள். இதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது.

வளர்ச்சிப் பணிகளை அவர்கள் ஆதரிப்பதே கிடையாது. இந்த அரசை எதிர்க்க வேண்டும், இந்த அரசு கொண்டுவருகிற வளர்ச்சிப் பணிகளை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் தொழில் வளம் பெருக மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு நிதியைப் பெற முடியுமோ அவ்வளவு நிதியைப் பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியுமோ அதைச் செய்கிறோம்” என்ற முதல்வரிடம்,

”எட்டு வழிச் சாலை திட்டத்தில் அரசு அவசரம் காட்டுவதாக புகார்கள் சொல்கிறார்களே?’’ என்று கேட்டனர் செய்தியாளர்கள். அதற்கு பதில் அளித்த முதல்வர்,

“அவசரம் என்பதே கிடையாது. மத்திய அரசு கொடுக்கும் நிதியைப் பெறுவதற்கு எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் கேட்டும் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக நமது மாநிலத்துக்கு எட்டு வழிச் சாலைத் திட்டத்தை நாம் கேட்டதும் கொடுத்திருக்கிறார்கள்.

திமுக ஆட்சியிலே டி.ஆர். பாலு தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் 17 சாலைகள் அமைப்பதற்காக மூவாயிரம் ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா? இவர்கள் காலத்தில் சாலை அமைத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அம்மாவுடைய அரசு வாதாடிப் போராடி தமிழகத்துக்கான நிதியைப் பெற்றுவந்தால் அதை எதிர்ப்பார்கள்.

இந்தச் சாலை சேலத்துக்கு மட்டுமே என்று சிலர் ஒரு தவறான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது சேலத்துக்கான சாலை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவே இந்த சாலை. நாமக்கல், கரூர், திண்டுக்கல், கோவை, கேரளா வரை இதன் பயன் இருக்கும். நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஏதோ சேலத்துக்கு மட்டும்தான் இந்த சாலை என்று தவறான தகவலைப் பரப்புகிறார்கள். இங்கே இருக்கிற ஊடகத்தினர் அனைவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள்தான், தயவு செய்து இதை சரியாகக் கொண்டு சேருங்கள்.

இந்தப் பகுதியில் டிஃபென்ஸ் காரிடார் வர இருக்கிறது. பல தொழிற்சாலைகள் வர இருக்கின்றன. அதற்கான உள்கட்டமைப்பு ஆதாரமாகத்தான் எட்டு வழிச் சாலை வருகிறது. இதனால் படித்த பல பேர்களுக்கு வேலை கிடைக்கும்” என்று விளக்கம் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதன் மூலம் மின்னம்பலத்தில் நாம் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் முதல்வர்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...