Sunday, July 15, 2018

நலங்கிள்ளி

வைரமுத்துவின் நாத்திக வரிகளை மாற்றுவதற்கு நீங்கள் யார் செந்தில்?

சூப்பர் சிங்கர் போட்டியில் செந்தில் கணேஷ்-ராஜ லட்சுமி இணையரின் தமிழ் இசைத் தேனை  உலகத் தமிழர்கள் கடந்த சில மாதங்களாகச் சுவைத்து வருகிறார்கள். நேற்றைய இறுதிப் போட்டியிலும் செந்திலுக்குப் பேராதரவு நல்கினர் தமிழர்கள். சுண்டி இழுக்கும் அவர் குரலை நானும் தொடர்ந்து சுவைத்து வருகிறேன்.

செந்தில் நேற்றைய இறுதிப் போட்டியில் தென்றல் படத்தில் வரும் அந்தப் பறை பாடலை அவருக்கே உரிய துள்ளலுடன் பாடினார், ஐயமில்லை. ஆனால் பாடல் தொடக்கத்தில் வரும் வைரமுத்துவின் வரிகளை மாற்றுவதற்கு இவர் யார்? ஏதோ பெரும் கருத்தியலர் போல தனது சொந்தச் சரக்கைத் திணிக்கிறார் செந்தில்.

அந்த அருமையான பறை பாடலின் தொடக்கத்தில் வைரமுத்துவின் வரிகள் இவை -

"இருக்கோ இல்லையோ தெரியாது
ஒருவேளை இருந்தா சாமிக்கும் வணக்கம்."

கடவுள் மறுப்பை வெளிப்படுத்தும் இந்த வரிகளை இப்படி மாற்றிப் பாடுகிறார் செந்தில் -

"இருக்கும் சாமிக்கு நிகரேது
இங்கே இருக்கும் சாமிக்கெல்லாம் வணக்கம்"

செந்தில் அவர்களே, உங்களுக்கு நாத்திகம் பிடிக்காவிடில் இந்தப் பாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கவே கூடாது. அதை விடுத்து உங்களின் ஆத்திகக் கருத்துக்கு ஒரு கவிஞனின் படைப்பை உடைப்பது நேர்மைக்கேடு, நாணயக் கேடு.

மேலுமை, வைரமுத்து பக்திப் பாடல்களையே எழுதுவதில்லை என்ற கொள்கை உடையவர். எனக்கு பக்தியே இல்லாத போது, எப்படி கடவுளைத் துதித்துப் பாட முடியும் எனக் கூறியவர். அவரை ஆத்திகத்தில் மூழ்கடித்துப் பார்ப்பது என்ன நியாயம்?

"ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ"

என்ற வரியை

"ஜனனி ஜனனி உலகின் பீடை நீ"

என மாற்றினால் உங்களின் இந்து உலகம் ஏற்குமா செந்தில்?

ஆத்திகர்கள் மனத்தை மட்டுமல்ல, நாத்திகர் மனத்தையும் புண்படுத்தக் கூடாது என்பதை உணருங்கள் கடவுள் நம்பிக்கையாளர்களே!

-நலங்கிள்ளி

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...