தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மு.வரதராசனார், கவிஞர் கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார், கவிஞர் திருலோக சீத்தாராம் போன்ற பெருமக்களோடு பழகிக்களித்தவர் அப்பா.
மாணவப் பருவத்திலேயே இலங்கைக்குச் சென்று "வீரகேசரி" இதழில் பணியாற்றினார். அவர் ஆசிரியராக இருந்து நடத்திய "வாரச் செய்தி" , " "தமிழகம்" பத்திரிகைகளில் எழுதிய தலையங்கங்களை அண்ணா அவரது "திராவிட நாடு" இதழில் மறுபிரசுரம் செய்திருக்கிறார்.
கையில் காசிருந்தால் நண்பர்களுக்கு காபி வாங்கிக் கொடுப்பார். இல்லையென்றால் வீட்டிலேயே இருப்பார்.சாய்வு நாற்காலியில் அவர் அமைதியாகப் படுத்திருந்தார் என்றால் மனச் சுமையில் அல்லது பணச் சுமையில் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும். அவரது சங்கடங்களை அதிகம் அறிந்தது சாய்வு நாற்காலிதான். அதுவும்கூட அவருக்காக அவர் வாங்கியதில்லை. என் தாத்தா செய்துகொடுத்தது. அம்மாவின் வாட்டமான முகத்தைப் பார்க்க கஷ்டப்பட்டால்...ஏதாவது ஒரு பதிப்பகத்தில் அல்லது பூங்காவில் போய் உட்கார்ந்துகொள்வார்.
அவரது தனிப்பட்ட சோகத்தை யார் மீதும் படரவிட்டதில்லை. அவர் டிசைன் போட்ட சட்டை போட்டு நான் பார்த்ததில்லை. கட்சிக்கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள் தவிர்த்து அவருக்குப் பொழுதுபோக்காக புத்தகங்களே இருந்தன.
அப்பா எனக்கு ஒரு கலைக்களஞ்சியம் போல. என் கேள்விகள் எல்லாவற்றுக்கும் அவரிடம் விடை உண்டு.
கால ஓட்டத்தில் அப்பா உடல்நலம் சரியில்லாமல் ஏழு ஆண்டுகள் சிரமப்பட்டார். தன் பெயரையே மறந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நிலையிலும் அவர் மறக்காமல் இருந்தது திருக்குறளை மட்டும் தான். என் மகள் ஒரு குறளின் முதல் வார்தையைத் தொடங்கினால்.. அதை மெல்லிய குரலில் முழுவதுமாக ஒப்பித்து முடிப்பார்.
எனக்குப் பாரதி என்று பெயர் வைத்ததோடு இல்லாமல், அவர் எனக்குள் மூட்டிய நெருப்பின் ஒளிதான் எனக்கு நேர்மையாக வாழ்வதற்கான வழியைக் காட்டியது. திரும்பிப் பார்க்கிறேன்... அப்பாவை இழந்து ஐந்து வருடங்கள்...
No comments:
Post a Comment