"நான் சீக்கிரம் கிளம்பிவிடுவேன், நீங்கள் இருந்து கவனியுங்கள்" என்று சொல்வார் எழுத்தோட்டி கண்ணன் ஆனால் அவருக்கு முன்னால் நான் கிளம்பிவிட்டேன். அவர் இன்று விடைபெறுகிறார். 27 ஆண்டுகள் இருந்த கூட்டைவிட்டு. அதுவும் கால்நூற்றாண்டு காலம் தானே கட்டிய கூட்டைவிட்டு. அவரே சொன்னார், "இது தொடர் ஓட்டம். என் கையில் உள்ள ஒளியை அடுத்தவர் கையில் ஒப்படைக்கும் நேரம் " என்றார். "எனக்கு முன்னால் 90 ஆண்டுகள் இருந்தது. எனக்குப் பின்னாலும் 90 ஆண்டுகள் கடக்கும்" என்றேன் நான்.
"கண்ணன், திருமா இருவரும் இல்லா இடத்தில் இருப்பவர் அனைவரும் கண்ணன், திருமாவாகத் தெரிகிறார்கள்" என்று எழுதி இருக்கிறார் கவிதாபாரதி. எல்லோருமோ பிரிதொன்றின் நின்றாடும் நிழல்கள் தான் . ஆனாலும் கண்ணனை காப்பி அடிக்க முடியாத நிழல் என்பேன்.
எல்லார் எழுத்துக்குள்ளும் எழுத்து அவர். எல்லார் எண்ணத்துக்குள்ளும் எண்ணம் அவர். எல்லார் வளர்ச்சிக்குள்ளும் வளர்ச்சி அவர். எல்லார் நட்புக்குள்ளும் நட்பு அவர். எல்லார் உழைப்புக்குள்ளும் உழைப்பு அவர். எல்லார் பாராட்டுக்குள்ளும் பாராட்டு அவர். எல்லார் வாழ்க்கைக்குள்ளும் வாழ்க்கை அவர்.
எல்லா மாணவர்க்கும் நல்லாசிரியர் கிடைப்பதில்லை. எல்லா ஆசிரியர்க்கும் சிறப்பு மாணவர் கிடைப்பதில்லை. கண்ணன் நல்லாசிரியராகவும் இருந்தார். மாணவர்கள் சிறப்பானவர்களாகவும் இருந்தார்கள். அதனால் தான் குருகுலம் என்றேன். ஆசிரியர் இல்லாத நேரத்திலும் மாணவன் அவர் இருப்பதாய் நினைப்பான். மாணவன் தூர தேசத்துக்குப் போன பின்னாலும் அவருக்கு அவன் மாணவன் தான். இதுதான் பெறும்பேறு. அதைப் பெற்றவர் கண்ணன்.
யாராவது கையெழுத்து கேட்கும் போது, " அன்பே ஆயுதம் அறிவே கேடயம்" என்று எழுதுவேன். அதையே மாற்றி, " அறிவே ஆயுதம் அன்பே கேடயம்" என்றும் எழுதுவேன். அன்பும் அறிவும் ஒன்று சேர்ந்து நிற்கும் இடமெல்லாம் வெல்லும். வெல்லும் என்பதற்கு உதாரணம் கண்ணன். இந்த சூத்திரத்தைக் கடைப்பிடித்துப் பாருங்கள் நீங்களும் வெல்லலாம். பணம்/ அதிகாரம்/ சட்டங்கள்/ விதி/ எல்லா வெங்காயத்தையும் ஒரு பக்கமாக வைத்து அன்பையும் அறிவையும் ஒரு பக்கமாக வைத்தால் இந்தப் பக்கம் தான் அமுங்கும். இவை இரண்டுக்கும் உருவம் இல்லை.
மன்னிக்கவும். உருவம் இருக்கிறது. அது கண்ணன்.
அவர் அடிக்கடி சொல்வார்: " நல்லாயிரு, நல்லாயிருப்போம்" . நன்றாய் இருங்கள். நன்றாய் இருப்போம்.
அருகில் இருந்து தனித்திருப்பதைவிட தூரத்திலிருந்து சேர்ந்திருப்பதே சுகமான வாழ்க்கை. சேர்ந்திருப்போம்!!!
No comments:
Post a Comment