அழகிரி மட்டுமல்ல கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் உணரவேண்டிய அடிப்படை உண்மை ஒன்றுண்டு. அவர் உங்கள் குடும்பத்தலைவர் என்கிற முதன்மையான இரத்த உறவு அவரது உடலோடு மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுவிட்டது. அது இப்போது இல்லை.
இப்போது இருப்பது இனியும் இருக்கப்போவது உங்கள் குடும்பத்தையும் திமுக என்கிற கட்சி எல்லைகளையும் என்றோ கடந்துவிட்ட கலைஞர் என்கிற ஏழுகோடி தமிழர்களுக்கும் பொதுவான, ஏதோ ஒருவிதத்தில் சொந்தமுமான பொது மனிதர் கலைஞர். தமிழ்நாட்டின் கட்டக்கடைசி காவலன். திராவிடர் இயக்கத்தின் ஒப்பற்ற பேராளுமை.
அதை சிறுமைப்படுத்துவதாகவோ, அதற்கு சவால்விடுவதாகவோ, அதை உரசிப்பார்ப்பதாகவோ அவரது குடும்பத்தவர் யார் நடந்தாலும் செயற்பட்டாலும் அவர்கள் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படுவது உறுதி.
உங்களின் கடந்தகால பெருந்தவறுகளை, குற்றங்களை தன்னுடைய பாசத்தாலும் பொறுமையாலும் ஆளுமையாலும் வலுவான கேடயமாக நின்று உங்களை காப்பாற்றிய கலைஞர் இப்போது இல்லை என்பதை முதலில் உணருங்கள்.
அத்தோடு கலைஞருக்காக இத்தனை காலமும் உங்களை சகித்துக்கொண்டவர்கள் (கட்சிக்கு உள்ளும் வெளியிலும்) இனியும் அப்படியே சகித்துக்கொள்வார்கள் என்று மட்டும் இறுமாப்போடு இருக்காதீர்கள். அது ஒருநாளும் நடக்காது.
கலைஞரின் இறுதிநாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட சுமார் இருபது லட்சம் பேரும் கலைஞருக்காக கூடியவர்கள். உங்கள் யாருக்காகவும் அல்ல. அல்லவே அல்ல. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சுயமாக சிந்திக்கவல்லவர்கள். அவர்களை நீங்கள் வெல்லவேண்டுமானால் அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.
அதற்கு மாறாக திமுக என்கிற பொது அமைப்பை உங்களின் குடும்ப கம்பெனியாக சுருங்கினால் அவர்கள் ஒன்று திமுகவை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பார்கள். அல்லது அதிதீவிர திமுக கட்சிக்காரர்கள் கலைஞரின் வெற்றிப்படமான நீதிக்கு தண்டனை திரைப்படத்தின் இறுதிக்காட்சியை உங்களுக்கு நிகழ்த்திக்காட்டவும் கூடும். அத்தகைய செயல்களை திமுகவின் எதிர்தரப்பினர் தூண்டிவிடவும் கூடும். எனவே நெருப்போடு விளையாடாதீர்கள்.
பொறுப்புணர்ந்து நடந்துகொள்ளுங்கள். கலைஞர் என்கிற உங்கள் அனைவருக்குமான மிகப்பெரிய பாதுகாப்பு கேடயத்தை இழந்து போர்க்களத்தின் நடுவில் நிற்கிறீர்கள் என்கிற பயம் இருக்கட்டும்.
- LR Jagadheesan
No comments:
Post a Comment