Friday, August 17, 2018

சே.த. இளங்கோவன்

"சமூகநீதி சுடர்- தோழர் திருமாவளவன்" !

எங்கள் சிறு பிராயத்தில் அரசியல் ஆர்வத்தோடு தலைவர்கள் மாநாடுகளுக்கு செல்வோம். அப்போது பெரும்பாலானவர்களின் ஆகர்சிப்பை பெற்றவராக ம.தி.மு.க தலைவர்  வை.கோ போன்றவர்கள் இருந்தார்கள். ஈழத்தமிழர் நலன் சார் கூட்டங்களைப் பொறுத்தவரை தோழர் புதுக்கோட்டை பாவாணன் ஆகர்சிப்புக்கு உரியவராக இருந்தார். எனக்கு அவர்களையும் கடந்து ஆகர்சிப்பையும், உள்ளுக்குள் ஓர் கிளர்ச்சியும், உரை கேட்டாலே இல்லாத எம் மீசையும் முறுக்கேறும் கலக உணர்வையும் கொடுத்தவர் "தோழர் தொல் திருமாவளவன்".

அவரின் மேடை உரைகளைத் தேடி சென்று கேட்டேன். அந்த கறுத்த நிறம், கருத்தான உரை, அமர்ந்திருக்கும் போது  ஊடுருவும் அந்த கண்களின் ஒளி...இப்படி அவர் மீதான அன்புக்கு அர்த்தங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். கலைஞர், பிரபாகரன் கடந்து தமிழ் மீதான ஆர்வத்துக்கு தோழரின் மேடை முழக்கமும் காரணம்.

அப்போது  சேலத்தில் அவர் நடத்திய மாநாடும், அங்கே தமது தந்தைக்கு தொல்காப்பியன் என்று பெயர் வைத்ததும், இன்றும் நினைவை விட்டு நீங்கவில்லை. தூரத்தில் நின்று அந்த எழுச்சியை உணர்ந்தவன்.
' தமிழ் தேசியமும் சாதி ஒழிப்பும்' அவரின் கொள்கை. அதுவே அவர் மீதான காதலுக்கு உச்சமான காரணம்.
சேலத்தில் கந்தம்பட்டி கோயில் விவகாரம் வெளிவந்தபோது,  அவ்வப்போது தோழரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். இறுதியில் அனைத்து பிரிவு மக்களும் வழிபாடு செய்யும் உரிமையை பெற்றது ஆலயம். அப்போது நக்கீரனில், "அதுவரை சாதி அம்மனாக காட்சி தந்த திரவுபதி, ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவால், சமூக நீதி காத்த அம்மனாக ஜொலிக்க தொடங்கினார் " என்று எழுதினேன். இதை அப்போது தொலைபேசி மூலம் வாழ்த்தி பேசினார்.

அதன் பிறகு மருத்துவர் சசிகுமார் கிளினிக்கில், தோழர் இமயவரம்பன் மூலம் தோழர் திருமாவளவனுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. ஒடிசலான தேகம், ஒட்டிய கன்னங்கள் இதுவே நானாக இருந்தேன். ஆனாலும் உருவம் ஒருவரின் அடையாளத்தை தீர்மானிக்காது. கொள்கையே தீர்மானிக்கும் என்பதை உணர்த்தும் வண்ணம் என்னை தோழர் என்று அழைத்தார். மறக்க முடியாத சிலிர்ப்பு.
அதன்பிறகு பல இடங்களில் தோழரை சந்தித்திருக்கிறேன். லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்டிருப்பதால், என் உருவம் அவருக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. சென்னைக்கு மாற்றலாகிய பின் சி.பி.ஐ கம்யூனிஸ்ட் கட்சி தலைமை  அலுவலகத்தில் அய்யா நல்லக்கண்ணு-வின் பிறந்தநாளின் போது  நானாக தேடி சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.  அவரின் கைகுலுக்கலில் வெப்பம் பொதிந்த அவரின் உள்ளங்கை சூடு, வாஞ்சையான வருடலாக இருந்தது.

"தமிழ் பாதுகாப்பு இயக்கமாக" ஒன்றிணைந்திருந்த காலம், பொற்காலம். அப்படியான காலம் திரும்புதல் வேண்டும். சமகாலத்தில் தோழர் போன்ற ஆளுமைகளின் ஜனநாயகப் பூர்வமான எழுச்சி உரைகளே , எம்மை போன்றவர்களை சாதிவெறிக்கு பலியாகாமல் சமூகநீதியின் பக்கம் திருப்பி நிறுத்துகிறது .
அவர் சமூகநீதியின் திசைகாட்டி. சமூகநீதி சுடரை சுமந்து செல்லும் திசைகாட்டி.!

பெரும்பான்மை சமூகங்கள், உழைக்கும் மக்க்களாய் ஒன்று திரண்டு விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள "சாதி" தகர்க்கப்பட வேண்டும். தோழமையான இந்த முன்நகர்த்தலை , தோழர் திருமாவளவன் பாய்ச்சலோடு தொடர்வார் என்ற நம்பிக்கையோடு, இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பத்திரிகையாளர் :சே.த இளங்கோவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...