18 ஆண்டுகளுக்கு முன்... தேசியப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுபவீ கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த நாள். பிணை மறுக்கப்பட்ட நிலையில் அவரை வேலூர் சிறைக்கு அழைத்துச்செல்ல காவல்துறை வாகனம் காத்திருக்கிறது. கைபேசி பிரபலமாகாத அந்தக்காலத்தில் என் நண்பன் வவுனியன் ஓடிவந்து , வழக்கறிஞரிடம் ஏதோ சொல்கிறார். வழக்கறிஞர் காவல்துறை அதிகாரியிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். "தலைவர் ஒருவர் சுபவீயை காண வந்துகொண்டு இருக்கிறார். சற்று நேரம் கழித்து நீங்கள் சுபவீயை சிறைக்கு அழைத்துச்செல்லுங்கள்" என்று கோரிக்கை வைத்தார். நான் , வவுனியன் மற்றும் தமிழன்பன் நீதிமன்ற வாயிலில் அந்தத்தலைவரை வரவேற்கக் காத்திருந்தோம். சிறைத்துறை வாகனத்தின் ஜன்னல் வழியே சுபவீயின் கண்களும் ஏக்கத்தோடு பார்த்தது.
பத்து மகிழுந்துகள் புழுதி கிளப்பி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க .....நீதிமன்றத்தின் வாயிலில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது 23c பேருந்து!
அதிலிருந்து இறங்கி வந்தது அந்து கருப்பு ஒல்லி உருவம். கிட்டத்தட்ட அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் ஓவியர் தம்பிராஜூடன் அவரை பில்ராத் மருத்துவமனை பொது வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது பார்த்ததை சட்டென நினைவுக்கொண்டு ..." நலமா செங்குட்டுவன் " ? என்றது அந்த உருவம்.
அன்று தன்னந்தனியாக பேருந்தில் வந்திறங்கியபோது பற்றிய கரம் , சிந்திய புன்னகை, எளிமை ......இன்றும் அப்படியே !!
அவர் .....திருமாவளவன் !!
- தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment