Monday, August 20, 2018

கொற்றவை

“கொற்றவை என்ன நீங்கள் இப்போதெல்லாம் நிறைய புகைப்படங்களைப் பகிர்கிறீர்கள். நீங்களும் அழகுணர்ச்சிக்கு பலியாகி விட்டீர்களா? பெண்களில் நீங்கள் ஓரளவுக்கு வேறுபட்டு எழுதுவீர்கள். நீங்களே இப்படி புகைப்படங்களை பகிரும்போது எங்களுக்கு கேள்விகள் எழுகிறது. உங்கள் புகைப்படத்திற்கு வரும் பின்னூட்டங்கள் உங்களுக்கு உற்சாகமளிக்கிறதா ” – என்று சில நண்பர்கள் கேள்விக் கணைகளை தொடுக்கின்றனர்.

உங்களுக்கு என் அன்பு!

ஆண்கள் புகைப்படங்களை பகிரும்போது வராத இந்த கேள்வி பெண்கள் பகிரும்போது மட்டும் வருகிறது என்பதிலேயே மூளையில் ஆணாதிக்க மாவு கலந்திருப்பதை இத்தகையோர் கவனத்துடன் நோக்க வேண்டியுள்ளது. பெண் என்றாலே அழகு என்பதன் பொருளாக காண்போருக்கும், பெண் தன் ‘பௌதிக’ அடையாளத்தை பதிவிடும் போது அது அழகை பறை சாற்றவே என்று நினைப்போருக்கும் பெரிய
வேறுபாடுகள் இல்லை.

மேலும் நான் அழகாக இருக்கிறேன் என்பது அவரவர் பார்வையே தவிர என்னுடையதல்ல. நான் நானாக இருக்கிறேன். நான் என்னை என் அறிவின் உருவாக மட்டுமே காண்கிறேன். ஒரு பெண்ணைக் கண்டு நீங்கள் அறிவான பெண் என்று சொல்லும் பழக்கம் நம் சமூகத்தில் ஏற்படாததன் சிக்கல் இது!

இது ஒருபுறமிருக்க இது போன்ற கேள்விகள் ஆண்களையும் மதிப்பு குறைவாக அளவிடுகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுவரை முகநூலில் நான் கண்டிருப்பது மிகவும் ஆரோக்கியமான, வெளிப்படையான ரசனையாளர்களையே. ஒரு குரங்கின் புகைப்படத்தை, ஒரு பன்றியின் புகைப்படத்தை, ஒரு குழந்தையின் புகைப்படத்தை (அழகை) ரசிப்பது போல் தானே நம் இணைய நண்பர்களும் பெண்களின் அழகையும் ரசிக்கிறார்கள். இதில் பெண் உடலுக்கு கிடைக்கும் வரவேற்பு மட்டும் ஏன் கேள்விக்குள்ளாகிறது? சிக்கல் யாரிடம்? (வக்கிர புத்தி உடையோர் விலக்கு! வக்கிரக்காரர்களை முடக்கி விடலாம்).

இன்னும் சொல்லப்போனால் முகநூல் நண்பர்கள் வட்டத்தின் பண்பார்ந்த ரசனை என்னை வியக்க வைத்துள்ளது. அக்கா என்று அன்புடன் அழைக்கும் பல தம்பிகளை பெற்றுள்ளேன். ”அக்கா நீங்கள் அழகா இருக்கீங்க” என்பதை படிக்கும் போது, ஆஹா ஒரு பெண்ணை எல்லா நேரமும் எல்லோரும் நுகர்வு பொருளாக மட்டுமே காண்பதில்லை. அவளின் அறிவையும், கொள்கையையும், செயல்பாடுகளயும் வைத்து முதிர்ச்சியுடன் அனுகும் பண்பும் பெருகி வருகிறது என்று மகிழ்கிறேன்.

அக்காவாக கருதாமல் பெண்ணாக (அழகியாக) மட்டுமே கண்டு ஒருவர் ரசிப்பதிலும் எனக்கெந்த நெறி மீறலும் இல்லை. நம்மை சுற்றி எல்லாமே அழகு தான் தோழர்களே. சிலது உடனே ஈர்க்கும், சிலது வேறொரு தருணத்தில் ஈர்க்கும், சிலது ஈர்க்காமல் போகும். இதுவே அழகு பற்றிய என்னுடைய மதிப்பீடு!

ஈர்க்கும் ஒன்றை ரசிப்பதிலும், கொண்டாடுவதிலும் எந்த ஒழுக்க மீறலும் இல்லை! அதேபோல் பொது தளத்தில் பெண்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்வதால் கொள்கையிலிருந்து சறுக்கி வீழ்வதுமில்லை. இதுபோன்ற சில்லறை விசயங்களுக்காக உங்களது மூளையை கசக்கிப் பிழியாதீர்கள்!

மேலும் ஆண்கள் மட்டுமே பெண்களைக் கண்டு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைவதில்லை. பெண்களுக்கும் அந்த உணர்வுகள் உண்டு! ஆண்கள் ‘அழகாக’ இருந்தால் அவர்களும் தங்கள் விருப்பங்களை பகிர்வதுண்டு! உண்மையில் இது ஆரோக்கியமான ஒன்று… அழகாக இருக்கும் ஒன்றை உடைமையாக்கிக் கொள்வதே ஆண்மை என்று கருதும் பொது புத்தியிலிருந்து விலகி அழகை எங்கும் நிறைந்திருக்கும் ஒரு பொருளாக கண்டு ஜனரஞ்சகமாக ரசிக்கும் அறிவு முதிர்ச்சி!

எல்லாவற்றையும் விட சிக்கலானது என்னவெனில், ஒருவரின் மீது ஏற்றி வைக்கப்படும் புனித பிம்பம். இது மதவாத-ஆணாதிக்க கோளாறு! மார்க்சியம் பேசுதல் என்பது சமத்துவத்தை, சமூக நீதியை நாடுதல், அதை பறை சாற்றுதல் மற்றும் அதனை நடைமுறைபடுத்த பணி செய்தல். துறவு வாழ்க்கை வாழ்வதென்பதல்ல!  நான் பேசும் இந்த சமத்துவ கொள்கைக்கெதிராக நடந்து கொண்டாலோ, தனியுடைமைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாலோ அல்லது உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டு வாழ்ந்தாலோ அதனை கேள்விக்குட்படுத்தலாம். என்னுடைய எழுத்துகளில் கருத்து முரண்பாடு இருந்தால் அதனை விவாதிக்கலாம். அதை விடுத்து நீ ஏன் புகைப்படம் பகிர்கிறாய், ஏன் குட்டைப் பாவாடை அணிகிறாய், ஏன் பல ஆண்களுடன் ஊர் சுற்றுகிறாய் என்பதாக கேள்விகள் எழுமெனில், “அடடா நீங்கள் ஏன் இதையெல்லாம் செய்வதில்லை? வேண்டுமென்றால் உங்களுக்கும் ஒரு குட்டைப் பாவாடை வாங்கித் தரவா” என்பதே என் பதில்!

பெண்கள் தங்கள் புகைப்படங்கள் மூலம் அழைப்பு விடுக்கிறார்கள் என்னும் ஆணாதிக்க மனுவாத சிந்தனையிலிருந்து உங்கள் மூளையை தயவு செய்து விடுவியுங்கள். நம் கலாச்சாரத்தில் ஆண் பெண் இணை தேடல்கள், வசந்த விழாக்கள், கொண்டாட்டங்கள் எப்படியெல்லாம் இருந்தது என்னும் வரலாற்றையும் படித்துப் பாருங்கள்!

ஒருவேளை அழைப்பு விடுப்பதாக எண்ணி யாரேனும் விருப்பம் தெரிவித்தால் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளவும், பிடிக்கவில்லையென்றால் மறுக்கவுமான அறிவுத் தெளிவு பெண்களுக்கு உண்டு! அதை புரிந்துகொள்ளும் நாகரீகம் ஆண்களில் பெரும்பாலருக்கு உண்டு. இல்லாதோருக்கு கற்றுக்கொடுக்கவோ, அல்லது விலகிச் செல்லவோ வழிகளும் உண்டு.

கூடுதலாக எச்சரிக்கை! நீ ஏன் இதை செய்கிறாய், அதை செய்கிறாய் என்று கேட்டு வேலியில் போகும் ஓணானை மடியில் எடுத்து விட்டுக்கொள்ளாதீர்கள், பிறகு நான் என் புகைப்படங்களாலேயே உங்களை சாத்துவேன்! இல்லையேல் இப்படி பத்தி பத்தியாக எழுதி தண்டிப்பேன் �

Pc: Varuna Shreethar

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...