தீராத மர்மச் சுழலில் அம்புலிமாமா
------------------------------------------------
பல மொழிகளில் வெளிவந்த அம்புலிமாமாவின் பழைய இதழ்கள் அனைத்தும் சாக்குப் பைகளில் கட்டப்பட்டு, மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஒரு 10,000 சதுர அடி கட்டடத்தில் தூசிபடியக் கிடக்கின்றன என்றால், குழந்தைகள் இலக்கியத்தில் ஆர்வமுள்ள யாருக்கும் ரத்தக் கண்ணீர் நிச்சயம் வரும். ஆனால் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு பெரிய சிக்கல்.
கடந்த எழுபது ஆண்டுகளாக எத்தனை குழந்தைகளின் கனவுகளை இந்த இதழ்கள் வடித்துத் தந்திருக்கும்? எத்தனை முறை வேதாளம் விக்ரமாதித்யனின் தோளில் இருந்து பறந்துசென்றிருக்கும்? அம்புலிமாவுக்கு ஏன் இந்த கதி?
அதற்கு முன்பாக ஒரு ஃப்ளாஷ் பேக்.
2008ல் நான் சிங்கப்பூர் துணைத் தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஜியோதேசிக் என்ற நிறுவனம் அம்புலிமாமாவை புதுப்பிக்க முயன்றுகொண்டிருந்தது.
அந்த புகழ்பெற்ற குழந்தைகள் இதழைத் துவங்கிய நாகி ரெட்டியின் மகன் பி விஸ்வநாத ரெட்டி 2007 மார்ச் வாக்கில் அம்புலிமாமாவின் 97 சதவீதப் பங்குகளை சுமார் 10.2 கோடி ரூபாய்க்கு ஜியோதேசிக் என்ற நிறுவனத்திற்கு விற்றிருந்தார். அப்போது அந்த இதழ் சிந்தி, சிங்களம் உட்பட 13 மொழிகளில் வெளியாகிக்கொண்டிருந்தது.
கார்னகி மெலன் பல்கலையில் பணியாற்றிவந்த ராஜ் ரெட்டி பழைய இதழ்களை டிஜிட்டல் வடிவாக்கும் பணியைத் துவங்கியிருந்தார். ஐஐடி பாம்பேவில் படித்த ஜி.வி. ஸ்ரீகுமார் சந்தமாமாவுக்குப் புதிய வடிவைக் கொடுத்தார்.
இதையடுத்து ஜியோதேசிக் எல்லா மொழிகளுக்கும் புதிய ஆசிரியரைத் தேடிக்கொண்டிருந்தது. தமிழுக்கு என்னிடமும் வேறு சிலரிடமும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நான் அப்போது வாங்கிக்கொண்டிருந்த ஊதியத்தைச் சொன்னதும் அதோடு அந்தப் பேச்சுவார்த்தை முடிந்து போனது.
அதே ஆண்டில், சந்தமாமாவின் ரசிகரான அமிதாப் பச்சன், இதழின் அறுபதாவது ஆண்டு மலரை வெளியிட்டார். ஒரு வெளிநாட்டு நிறுவனம் அதிலிருக்கும் கதைகளை அனிமேஷன் படங்களாக உருவாக்க முடிவுசெய்தது. ஆனால், புதிய நிறுவனம் பெரிதாக எதிலும் ஆர்வம் காட்டவில்லை. 2013 எல்லா இதழ்களுக்கும் சுபம் போடப்பட்டது.
ஜியோதேசிக் நிறுவனம் பெரும் பிரச்சனைக்குள்ளாகியிருந்தது. உண்மையில் அந்த நிறுவனம், மென்பொருள் ஏற்றுமதி செய்வதாகக் கூறி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கித் தரும் ஒரு நிறுவனமாக செயல்பட்டுவந்தது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
பராகுவே, ஹோண்டுராஸ், குவாதமாலா, சிலி, உருகுவே ஆகிய நாடுகளுக்கு மென்பொருட்களை ஏற்றுமதி செய்ததாகக் கூறி 812 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளுப்பாக்கியதற்காக வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஆகியவை இந்த நிறுவன உரிமையாளர்களின் மீது தற்போது குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளன. கிரண் பிரகாஷ் குல்கர்னி உள்ளிட்ட மூன்று இயக்குனர்களும் தற்போது சிறையில் உள்ளனர்.
இப்போது நிகழ்காலத்திற்கு வந்தால், இந்த வழக்கை விசாரித்துவரும் பிரிவுகள் எதற்கும் இதன் மதிப்பு தெரியவில்லை. இவற்றை என்ன செய்வதென்றும் தெரியவில்லை. இன்னமும் இந்த பிராண்டின் மீதும் அவற்றின் அறிவுரிமை சார் சொத்துக்கள் மீதும் பலரும் ஆர்வம்காட்டிவருவதாக அதன் முன்னாள் சிஇஓ கூறியிருக்கிறார். ஆனால், அதனை யாரும் வாங்குவது உடனடியாக நடக்கக்கூடிய காரியமில்லை.
ஆனால், புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் இம்மாதிரி ஒரு கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் ஒரு நிறுவனம் எதற்காக அம்புலிமாமாவின் மீது ஆர்வம்காட்டியது என்பதுதான்.
No comments:
Post a Comment