Sunday, August 26, 2018

முரளிதரன் காசி விஸ்வநாதன்

வட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்?
---------------------------------------------------------------------------------
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த அறிக்கையை அளித்த பி.பி. மண்டலின் 100வது பிறந்த நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கடந்து சென்றது. அதையொட்டி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் Centre for the Study of Social Exclusion and Inclusive Policyயில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் அரவிந்த் குமார் பி.பி. மண்டலைப் பற்றி The Wire இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். அந்த நீண்ட கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது.

ஒரிஜினல் கட்டுரையின் லிங்க் முதல் கமெண்டில்.

பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்ற பி.பி. மண்டல் 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வாரணாசியில் பிறந்தார். அவருடைய சொந்த கிராமம் பிஹாரின் மாதேபராவுக்கு அருகில் உள்ள முரோ. இந்தியாவில் சமூக நீதி இயக்கத்தின் சின்னமாக பார்க்கப்படுபவர்களில் பி.பி. மண்டலும் ஒருவர். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் துல்லியமானவகையில் கிடைக்கவில்லை.

ஒரு சூத்திரக் குடும்பத்தில் பிறந்த மண்டல் தர்பங்காவில் உள்ள ராஜ் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போதே ஜாதிக் கொடுமையை அனுபவித்தவர். இவருக்கும் மற்ற சூத்திர மாணவர்களுக்கும் விடுதியில் மதிய உணவு என்பது மற்ற மூன்று வர்ணங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிட்ட பிறகே வழங்கப்படும். ஆனால், அந்த வயதிலேயே அதை எதிர்த்துக் கேள்விகேட்டு இந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் அவர்.

எல்லா இந்தியச் சிறுநகரங்களைப் போலேவும் இவரது சொந்த ஊரும் சமூக ரீதியாக, கல்வி, பொருளாதார ரீதியாக பல மனத்தடைகளைக் கொண்ட ஊர்தான். ஆனால், அறிவுமலர்ச்சியில் மலர்ந்திருந்த கல்கத்தாவுக்கு அருகில் இருந்ததால், சிறுவயதிலேயே சமூக மேம்பாடு குறித்து சிந்திக்க ஆரம்பித்தார் மண்டல்.

1941ல் தனது 23வது வயதிலேயே பாகல்பூர் மாவட்ட கவுன்சிலுக்கு எதிர்ப்பின்றி தேர்வுசெய்யப்பட்டார் அவர். இவருடைய தந்தையான ராஷ்பிஹாரி லால் மண்டலும் ஒரு சமூக சீர்திருத்தவாதிதான். இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால உறுப்பினர்களில் அவரும் ஒருவர். 1952ல் பிஹார் சட்டமன்றத்திற்கு முதன் முதலில் தேர்தல் நடந்தபோது மாதேபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர், சேஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேந்திர நாராயண் மண்டல். தன்னைவிட நாராயண் மண்டலே சமூகரீதியான பார்வையையும் கருத்துக்களையும் சிறப்பாக உருவாக்கக்கூடியவர் என பி.பி. மண்டல் நினைத்தார்.

ராம் மனோகர் லோஹியாவுக்கும் நாராயண் மீது பெரிய மதிப்பிருந்தது. நாராயண் முன்வைத்த சோஷலித்திற்கு ஆதரவளிக்கும்விதமாக அடிக்கடி மாதேபுராவுக்கு வருவார் ராம் மனோஹர் லோகியா. இவை எல்லாம் சேர்ந்தே பிபி மண்டலின் அரசியல் - சமூகப் பார்வையை வரையறுத்தன.

ஒரு முறை பிஹாரில் உள்ள பாபா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரஜபுதன நிலவுடமையாளர்கள் குர்மி கிராமத்தைத் தாக்கினர். இதையடுத்து பிற்படுத்தப்பட்டவர்கள் மீது காவல்துறை அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. அப்போது சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தது. காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென்றும் மண்டல் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கட்சி தந்த அழுத்தத்தால் அந்தக் கோரிக்கையை அவர் வாபஸ் வாங்க வேண்டியிருந்தது. அந்த கோரிக்கையை வாபஸ் வாங்கியவர், ஆளும்கட்சி வரிசையைவிட்டுவிட்டு, எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்தார். இது ஆளும்கட்சிக்கு இன்னும் அவமானமாகப் போனது. இதையடுத்து ராம் மனோகர் லோகியாவின் சம்யுக்த சோஷலிசக் கட்சியின் மாநில நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் மண்டல். 

பிறகு அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.
பிறகு லோகியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிய பி.பி. மண்டல், 1967 மார்ச்சில் ஷோஷித் தளம் என்ற கட்சியைத் துவங்கினார். 1968 பிப்ரவரி 1ஆம் தேதி பிஹாரின் முதல்வராகவும் பதவியேற்றார். வடஇந்திய அரசியலில் ஒரு சூத்திர வகுப்பைச் சேர்ந்தவர் முதல்வரானது அதுவே முதல் முறை.  இவரது ஆட்சிக் காலத்தில்தான் முதன் முறையாக அமைச்சரவையில் உயர் ஜாதியினரைவிட பிற்படுத்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றனர். 

47 நாட்களே நீடித்த இவரது ஆட்சி இந்திய அரசியலில் ஒரு புதிய வெளிச்சத்தையே பாய்ச்சியது. பிற்காலத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டுமெனச் சொன்ன கன்ஷி ராம்,  Jiski jitni sankhiya bhari, uski utni hissedari (எந்த எண்ணிக்கையில் ஆட்கள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம்) என்ற முழக்கத்தை முன்வைத்தார். எண்ணிக்கை ரீதியில் மிகக் குறைவாக இருக்கும் உயர் ஜாதியினர் அரசியல் அரங்கில் கோலோச்சுவதற்கு எதிராக இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டது.

பல காங்கிரஸ் தலைவர்களின் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட டி.எல். வெங்கடராம அய்யர் கமிஷன் கலைக்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மண்டல்,  மாதேபுரா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் சேர்ந்த மண்டல், தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு மீண்டும் 1977ல் ஜனதா கட்சியின் சார்பில் மாதேபுராவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரானார்.

1978 டிசம்பரில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு பி.பி. மண்டல் தலைமையில் மண்டல் கமிஷன் என அழைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் கமிஷனை அமைத்தது.  கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் ஜாதி ரீதியாக புறக்கணிக்கப்படுபவர்களைக் கண்டறிந்து, மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.  1980ல் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 52 சதவீதம் பேர் இருந்தனர். 

ஆகவே, மத்திய அரசுப் பணிகள், பொதுத் துறை நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க இந்த கமிஷன் பரிந்துரைத்தது. எஸ்சி., எஸ்டி ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்தமாக 49 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
1980 டிசம்பர் 31ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிடம் இந்த அறிக்கையை ஒப்படைத்தார் மண்டல்.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவில் அரசியல் என்பது மண்டலை வைத்தும் கமண்டலத்தை வைத்தும் திரட்டப்படும் அணிகளுக்கு இடையிலான மோதலாகத்தான் இருந்துவருகிறது. ஒரு பக்கம் சூத்திரர்கள், ஆதி சூத்திரரர்கள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒடுக்கப்பட்ட சமூகம். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இவர்கள்தான் பெரும்பான்மையினர். ஆட்சியில் தங்களுக்கு உரிய இடத்தை அடையப் போராடிவருபவர்கள். மற்றொரு பக்கம் இடஒதுக்கீட்டிற்கும் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்படும் வலதுசாரி - இந்துத்துவ ஒடுக்குமுறையாளர்கள்.

1990 ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய முன்னணி அரசின்  அப்போதைய பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக அறிவித்தார்.  ஆனால், உடனடியாக இது அமலுக்கு வரவில்லை. 1992 நவம்பரில் இந்திரா சாவ்னே தீர்ப்பு என்று அறியப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் மண்டல் பரிந்துரையை அமல்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 1993ல் மண்டல் பரிந்துரைகள் அமலுக்கு வந்தன.  

ஊடகங்கள் எல்லாம் பொதுவாகச் சொல்வதைப்போல மண்டல் கமிஷன் அறிக்கை என்பது வெறும் இடஒதுக்கீட்டிற்கு மட்டுமானதல்ல.  இதர பிற்படுத்தப்பட்டோரிடம் நிலவிய "தாங்கள் எதற்கும் ஆகாதவர்கள்" என்ற எண்ணத்தை இந்த அறிக்கை போக்கியது என்பதுதான் முக்கியமானது. 

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடஓதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டுமென அறிக்கை சொல்லவில்லை. ஆனால்,  இந்த அறிக்கையின் அமலாக்கத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் வெகுவாக அதிகரித்தது.

அதனால்தான் பிரான்சின் அரசியல் அறிஞர்களில் ஒருவரான கிறிஸ்டோஃப் ஜாஃப்ர்ல், மண்டல் அமலாக்கத்தை "மௌனப் புரட்சி" என வர்ணித்தார்.
மண்டல் கமிஷனின் மற்றொரு முக்கியமான சாதனை முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோராக வகைப்படுத்தியதுதான். முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோராக வகைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் மதச் சமன்பாடு குறித்த புரிதலில் பெரும் மாற்றத்தையே கொண்டுவந்தது.

1982ஆம் ஆண்டு 64வது மாரடைப்பால் காலமானார் மண்டல். "மண்டலின் செயல்பாடுகளே 1990களில் சூத்திரர்களின் ஒரு பகுதியினை அரசியல் உணர்வு கொண்டவர்களாக மாற்றியது. அவர்களுக்கு அதிகாரத்தில் இடமளித்தது. 1960களில் அமெரிக்கக் கருப்பினத்தவருக்கான சிவில் உரிமை இயக்கம் செய்ததைப்போல" என்கிறார் வில்லியன் டால்ரிம்பிள்.

மண்டல் கமிஷன் அறிக்கையில் எழுதப்பட்டிருந்த இந்த வரி மிகவும் முக்கியமானது: 
“சமமானவர்களுக்கு இடையில்தான் சமத்துவம் பேச முடியும். சமமற்ற நிலையில் உள்ளவர்களை சமப்படுத்திப்பேசுவது மேலும் சமமின்மையை உருவாக்கும்.”

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...