கோடையின் சூடு தெரியாத வகையில் தென்றலைக் குளிப்பாட்டி அனுப்பியது அந்த நீரோடை. அதன் கரையெங்கும் நிழல் விரிக்கும் மரங்கள். நீரோடை நீளமா, நீண்டு தொடரும் மரங்களின் வரிசை நீளமா என்று தெரியாத வகையில் நீரும் நிழலும் அடர்ந்து நீண்டிருந்தது. அந்த இடம் அத்தனை குளிர்ச்சியாக இருந்து என்ன பயன்? அவனும் அவளும் அவ்வளவு சூடாக இருந்தார்கள்.
“வெப்பம் தணிக்கும் இடம் இது” என்றான் அவன். “தணிக்குமா இன்னும் அதிகமாக தகிக்குமா” எனப் போகப் போகத்தான் தெரியும் என்றாள் அவள்.
“எத்தனை அழகாக இருக்கிறது இந்த ஊர்!” என்று அவள் சொன்னபோது, “உனைவிடவா அழகு?” எனக் கேட்டான் அவன்.
சொல்வதெல்லாம் பொய் என்று தெரிந்தாலும், அவனுடைய வார்த்தைகள் வண்ண நிழலாக அவள் மனதுக்கு இதம் தந்தன. அந்த இடமும் அப்படித்தான்.
குளிர்ந்த நிழலில் இன்னமும் அவர்கள் சூடாகவே இருந்தார்கள். சூட்டைக் குளிர்ச்சி வெல்லுமா, குளிர்ச்சியை சூடு வெல்லுமா என்கிற போட்டிக் களமாக மாறியிருந்தது, மலையாளக் கரையேராரமாக அமைந்திருந்த அந்த ஊர்.
நீரோட்டத்தில் மிதந்த படகு வீட்டில் பயணித்தபடி அவனும் அவளும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டிருந்தனர்.
“இது சேரன் ஆண்ட நிலம்” என்றவனிடம், “ஆமா….ஆமா…நீதான் சேரன்……..” என்றவள், “என்னுடன் சேர்ந்தாய்.. என் உடல் சேர்ந்தாய்.. அப்ப நீதானே சேரன்” என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளுக்கு அடக்கமாக இடையைத் தந்திருந்தாள்.
“சேரன் என்றால் யானைப் படை வேண்டுமே.. ஒரு பூனைக்குட்டிதானே பயத்தில் என் மேல் படர்ந்திருக்கிறது..” என்றபடி கண்சிமிட்டினான்.
“பூனையை சமாளிக்கவே இந்தப் பாடு படுறியே.. யானையா மாறினா உன் நிலைமை என்ன? சேரனோட யானை இருக்கே அது போர் எப்ப வரும்? எப்ப வரும்? என்று எப்பவுமே எதிர்பார்த்து காத்துக் கெடக்கும். யுத்தக் களத்திற்கு போகும்போது, அந்த யானைக்கு வெறியேத்துற மாதிரி, மொந்தை மொந்தையா கள் கொடுப்பாங்க. போதை தலைக்கேறியதும், போர்க்களத்தில் புகுந்து அதகளம் செய்கிற அந்த யானயோட கண்ணில் பட்டதெல்லாம் துவம்சம்தான் தெரியுமா!” என்றவளின் வார்த்தைகள் மட்டுமல்ல, உடலும் சூடேறிக் கொண்டிருந்தது, அவனது விரல் உரசல்களால்.
நெருங்கியிருந்தவளின் மூச்சுக் காற்றின் சூடு, அவன் மூச்சிலும் மெல்ல மெல்ல பரவியது.
நீரோடையும் நிழல் விரித்த மரங்களும் எப்போதும் போலவே குளிர்ச்சி தந்தாலும் இருவரின் உணர்ச்சியும் உலைபோல கொதித்தன அப்போது. அதனை அணைக்க நினைத்து அடைமழை பெய்ய, அதில் நனைந்த சூரியன் இனி தனக்கு வெளியில் வேலை இல்லை என்று மேற்கு வீடு நோக்கி அவசரமாக ஓடிவிட்டான்.
அடர்ந்த இருளில், தள்ளாடிய படகு வீட்டில், அந்தப் பூனைக்குட்டிக்குள் ஒளிந்திருந்த பலம் வாய்ந்த யானை வெளியேவந்து தன் அதகளத்தை ஆரம்பித்தது. அவளின் சேரன் அப்படியொரு போர்க்களத்தை அதுநாள் வரை கண்டதில்லை. ஓயாத இன்ப யுத்தத்தால் சிவந்து விடிந்தது வானம்.
நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
ஊரிரே என்னை உயக்கொண்மின்-போரிற்
புகலும் களியானைப் புழியர் கோக் கோதைக்கு
அழலுமென் நெஞ்சங் கிடந்து.
முத்தொள்ளாயிரம் (பாடல்-13)
No comments:
Post a Comment