Thursday, August 23, 2018

முரளிதரன் காசி விஸ்வநாதன்

பதிமூன்று வயதாக இருக்கும்போது மதுரை மாவட்ட மைய நூலகத்தில் ஜட்ஜ்மென்ட் புத்தகம் தமிழில் கிடைத்தது.  பொதுவாக படுமோசமான புத்தகங்களே நூலகத்தில் கிடைத்துவந்த நாட்கள் அவை. அதனால், இந்தப் புத்தகம் ரொம்பவுமே பரவசமூட்டியது. பல முறை திரும்பத் திரும்ப அந்தப் புத்தகத்தை இரவல் எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

பிரதமர் இந்திராவுக்கு எதிரான குல்தீப் நய்யாரின் பணிகள், ஒரு சாகசக் கதையை படிப்பது போன்ற உணர்வை எனக்கு ஊட்டின. சோவியத் ரஷ்யா உடைந்து நொறுங்கியபோது இந்தியா டுடே தமிழ் பதிப்பு "உடைந்து சிதறுகிறது" என்ற அட்டையுடன் வெளியிட்ட இதழும் இந்த ஜட்ஜ்மென்ட் நூலும்தான் பத்திரிகையாளர் பணி குறித்த பல கனவுகளை ஏற்படுத்தின.

பதிப்பகம் துவங்கலாம் என்ற எண்ணம் இருந்த காலத்தில் கண்ணன் குல்தீப் நய்யாரின் The Martyr நூலைப் பரிந்துரைத்தார். சில நாட்களிலேயே அவரது ஸ்கூப் புத்தகமும் வெளிவந்தது. ஆகவே முதலில் ஸ்கூப் புத்தகத்தை தமிழில் வெளியிட அனுமதி கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். தமிழுக்கென்று பிரத்யேகமாக ஒரு முன்னுரை எழுதித் தருவதாகவும் கடிதம் எழுதினார். சொன்னபடி எழுதியும் தந்தார். அப்போது அவர் டைப் ரைட்டரில் அடித்து அனுப்பிய கடிதம் இன்னும் என் வசம் இருக்கிறது.

அவர் சென்னை வந்தபோது நானும் கவிதாவும் சென்று சந்தித்தோம். மிகுந்த வாஞ்சையுடன் பேசினார். பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்று நூலை தமிழில் வெளியிடுவது குறித்துப் பேசியபோது, The Martyrன் மேம்பட்ட பதிப்பாக வெளிவந்திருக்கும் Without Fear: The life and trial of Bhagat Singh புத்தகத்தை மொழிபெயர்க்கச் சொன்னார். தி மார்ட்யர் புத்தகம் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். 7 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருந்தார்.

ஸ்கூப் புத்தகத்தை தமிழில் கொண்டுவந்தபோது பெரும் பரவசமாக இருந்தது. ஆனால், பகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்று நூலான Without Fear புத்தகத்தின் மொழிபெயர்ப்பு முடிவடைந்து ஆண்டுக்கணக்கில் ஆகியும் இன்னும் நாய் கவ்விய தேங்காயைப் போல வைத்துக்கொண்டிருக்கிறேன்.

பகத் சிங் புத்தகத்தைப் பற்றிப் பேசும்போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார் நய்யார். அதாவது பகத் சிங் பிறந்துவளர்ந்த வட இந்தியப் பகுதியில் பகத் சிங்கிற்கான சிலைகளும் அவரது பெயர் சூட்டப்பட்ட மனிதர்களும் அரிதாகவே காணப்படுவதாகவும் ஆனால் தென்கோடியான தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அவரது சிலையும் அவரது பெயர் சூட்டப்பட்ட மனிதர்களையும் பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.

இந்தப் புத்தகத்தின் மிகச் சிறப்பான பகுதி, பகத் சிங் வழக்கில் அப்ரூவராக மாறிய ஹன்ஸ் ராஜ் ஓராவின் கடிதங்கள் இடம்பெற்றிருப்பதுதான். தான் ஏன், பகத் சிங்கிற்கு எதிராக மாறினேன் என அந்தக் கடிதங்களில் விளக்கியிருப்பார் ஹன்ஸ் ராஜ் ஓரா.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒருவர், தீவிரவாதிக்கும் பயங்கரவாதிக்கும் இடையிலான வித்தியாசத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

முன்னாள் பிரதமரும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க அறிவுஜீவிகளில் ஒருவருமான இந்தர் குமார் குஜ்ரால் இந்தப் புத்தகத்திற்கு அவுட்லுக் இதழில் ஒரு மதிப்புரை எழதியிருந்தார். A Sutlej Funeral I Cant Forget என்று தலைப்பு. சிறுவனாக இருந்த ஐ.கே. குஜரால், தன் தாயுடன் பகத் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக அந்த மதிப்புரையில் குறிப்பிட்டார். இந்தப் புத்தகம் பகத் சிங்கைப் பற்றி அறிய விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடி நிலை காலத்தில் தன் சிறை அனுபவங்களை விவரிக்கும் In Jail, பிரிவினைக் காலத்தில் புலம்பெயர்ந்ததை நய்யாரும் ஆசிஃப் நூரனியும் விவரிக்கும் Tales of Two Cities ஆகியவையும் அவரது சுவாரஸ்யமான, முக்கியமான புத்தகங்கள்.

ஒரு பத்திரிகையாளராக குல்தீப் நய்யாரின் பயணம் மிகவும் நெடியது. மகாத்மா காந்தி கொல்லப்பட்டதிலிருந்து வாஜ்பாயி லாகூருக்கு பேருந்தில் சென்றதுவரை செய்தி சேகரித்திருக்கிறார். கடைசி ஆறு மாதங்களுக்கு முன்பாக வரை எழுதியிருக்கிறார். இவருக்கும் வயது 95 ஆகிவிட்டது. கலைஞர், குல்தீப் நய்யார் என இந்தக் கொடுமையான ஆகஸ்ட் மாதம் பலரைக் காவுவாங்கி வருகிறது.

விரைவிலேயே பகத் சிங் நூலை தமிழில் நான் வெளியிட்டுவிட வேண்டும்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...