மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோழர் ரோகிணியை நேற்று புத்தக கண்காட்சி கருத்தரங்கில் சந்தித்தேன்’.சுற்றுச் சூழல் இன்று’ கருத்தரங்க நிகழ்வை நானும், அவரும் பார்வையாளர்களாக சுமார் இரண்டரை மணி நேரம் ரசித்துக் கேட்டோம்.
ரோகிணியை, ஒரு சிறந்த நடிகை, பன்முகத் திறன் பெற்ற கலைஞர் என்பதையெல்லாம் கடந்து, கமிட்மெண்ட்டான ஒரு சோஷியல் வொர்க்கராகத் தான் நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.
திருவான்மியூரில்,சுமார் பத்தாண்டுகள் கட்டணமில்லாத ஒரு மாலை நேர பாடசாலையை நானும்,என் மனைவியும் பாரதியார் பெயரில்
இணைந்து நடத்தி வந்த கால கட்டத்தில்,அதில் அவர் அளப்பரிய பங்காற்றினார்.
மற்ற சில நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் போல, வருடத்திற்கு ஒரு முறை தன் பிறந்த நாளின் போது நலத்திட்ட உதவிகள் சிலவற்றை வழங்கிவிட்டு,போட்டோவிற்கு போஸ் கொடுத்துச் செல்லும் ரகமானவரல்ல, ரோகிணி அவர்கள்!
எப்போது, எங்கு அழைத்தாலும் ஒரு களப் பணியாளராக வந்து தன் பங்களிப்பை முழுமையாக செய்துவிட்டே செல்வார்.துர் நாற்றம் எடுக்கும் சேரி பகுதியில்,கால் வைக்க முடியாத சேற்றில் நடந்தெல்லாம் என்னுடன் அவர் பணியாற்றியுள்ளார்.ஏழைஎளிய கூலித் தொழிலாளப் பெண்களுடன் மிக இயல்பாகப் பழகி, அவர்களின் பிரச்சினைகளை தன் பிரச்சினையாக உணர்வார்.
சிறப்பு அழைப்பாளராக அவர் செல்லும் இடங்களில் அவருக்கு தரப்படும் சன்மானத்தை தனக்கு நெருக்கமான தொண்டு நிறுவனங்களின் பெயரில் செக்காகவே போட்டு வாங்கித் தந்து விடுவார்.
இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் எல்லாம் நிவாரணப் பணிகளுக்கு தன்னால் முடிந்தததை மட்டுமல்ல,தான் சம்மந்தப்பட்ட நண்பர்களின் பங்களிப்பையும் பெற்றுத் தருவார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்கம் அவரை தங்கள் அமைப்பிற்கு தலைவராக ஏற்றுள்ளது எனில் வேறென்ன நான் சொல்வதற்கு இருக்கிறது.
No comments:
Post a Comment