கேரளாவின் துயரமும் நியூட்ரினோ திட்டமும்:-
நியூட்ரினோ திட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் சமயங்களில், போராடும் மக்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவற்றுள் முக்கியமான ஒன்று, மேற்கு தொடர்ச்சி மலைகளின் கடினப்பாறைகளை லட்சக்கணக்கான டன் வெடிமருந்தை பயன்படுத்தி தகர்ப்பதால் அதன் பாதிப்புகள் மிகஅதிகமாக இருக்கும் என்றும் அது தொடர்பான ஆய்வுகளை கூட திட்டத்தை செயல்படுத்துபவர்கள் செய்யவில்லை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துவைத்தோம். அதற்கு பதிலளித்த விஞ்ஞானிகள், அறிவியல் ஆலோசகர்கள், தொலைக்காட்சி கருத்தாளர்கள் என எல்லோரும், "பாறைகளை வெடிவைத்து தகர்த்து நிறைய சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது, பல்வேறு அணைகள் உள்ளன எனவே எந்த பிரச்னையும் ஏற்படாது என்றார்கள்".
நம் கண்முன்னால் கேரளாவில் நடைபெற்றுள்ள கோரத்தை பார்த்தாலே தெரியும், மலைகளை குடைந்து சுரங்கங்கள், கேளிக்கை விடுதிகள், அணைகள், எஸ்டேட்டுகள் என அமைத்ததன் விளைவாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதையும், அதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும்.
பலமுறை பேசியும் சொல்லியும், எழுதியும் இருக்கிறோம், மீண்டும் சொல்கிறோம்; தென்னிந்தியாவில் உயிர்கள் தழைத்து வாழவேண்டுமென்றால் மேற்கு தொடர்ச்சி மலைகளை துளியளவு கூட பாதிப்படையாமல் பாதுகாக்கவேண்டும், இதைத்தான் மாதவ் காட்கில் அறிக்கையும் நமக்கு உணர்த்துகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னர் தோன்றியவை (precambarian era ), கடினப்பாறைகளாக இருப்பதால் பல பத்தாண்டுகளுக்கு முன்னர்வரை இங்கே பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக தரவுகள் கிடையாது. ஆனால், கடந்த பலஆண்டுகளாக அதிகஅளவில் நிலச்சரிவுகளை பார்க்கிறோம், அதற்கு முக்கிய காரணம் மனிதர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான்.
கேரளா நமக்கு கொடுத்துள்ள மிக மிக முக்கியமான பாடம், மேற்கு தொடர்ச்சி மலைகளில் எக்காரணம் கொண்டும் நியூட்ரினோ திட்டம் உட்பட, சிறுஅழிவைக்கூட கொண்டுவரக்கூடிய எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்பதைத்தான்.
மாதவ் காட்கில் அறிக்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
#savewesternghats
No comments:
Post a Comment