நட்டநடு நிசியில்
தமிழர்கடற்கரையில்
ஓயாத விவாதச் சத்தம்
கனவென்றே நினைத்தேன்
கண் விழித்தேன்
கடற்கரைக்கு ஓடினேன்
அண்ணா நினைவிடமருகே
அப்பட்டமாய் கேட்டது
அந்த விவாதம்
கும்மிருட்டில்
குரல் மட்டுமே ஒலித்தது
ஆளேயில்லை
கடற்கரை மண்ணில்
காது வைத்தேன்
கனீர் குரல் கேட்டது
" என்ன ராமச்சந்திரா இது அநியாயம் ? கருணாநிதிக்கு நம்மருகே இடமில்லை என்பது அராஜகம் ! "
எரிமலையாய் வெடித்தது
அமைதியின் திருவுருவான
அண்ணாவின் குரல்
" என்ன அண்ணா
நானென்ன தவறு செய்தேன் ?
நானிங்கு வந்து நெடுங்காலமானதே !
அம்முவை அழைக்கிறேன் விசாரியுங்கள் !! "
பணிவாக பேசியது
எம்.ஜி.ஆர்
குரலேதான் .
ஓடோடி வந்தார்
மூச்சிறைக்க
ஜெயலலிதா
" நடப்பது என்னாட்சியல்ல
அண்ணா ....
நடுவனாட்சி !
நயவஞ்சகத்தால்
வீழ்ந்தேன் அண்ணா
அதற்கு நாடே சாட்சி ! "
தலைகுனிந்து
நின்றார்
ஜெயலலிதா.
அமைதியாய்
பேசத்தொடங்கினார்
அண்ணா....
" சட்டமோர் இருட்டறை
என்று
முழங்கியவன் நான்
உயிரற்ற
என் தம்பியின்
உடல்
உக்கிரமாய் இருட்டறையில்
சட்டப்போராட்டம்
நடத்துவதை பார்த்தீர்களா ?
என் மறைவுக்கு
பிறகு
இரண்டாய் பிளந்தீர்கள்
இருந்தும் ஆட்சியை
எதிரியிடம் தராமல்
தக்கவைத்தீர்கள் .
ஆட்சி இருந்தென்ன லாபம்
எல்லாம்
நடுவனரசின் ஜாலம் !
ஆட்சி
என் தோளில் போடும்
துண்டென்றேன்
நீங்களோ
உங்கள் மானம் மறைக்கும்
உடையென்றாக்கினீர்கள்
எப்படியும்
சட்டப்போராட்டத்தில் வென்று
இங்கு வந்து சேர்வான் கருணாநிதி
நாளை முதல்
உங்கள் மூவருக்கும்
பாடம் எடுக்கவிருக்கிறேன்
என் வகுப்பு
என் தம்பி தங்கைகளின்
காதுகளில் மட்டும் ஒலிக்கும்
என் தமிழ்நாடு என்றென்றும்
சுயமரியாதை சுடரில்
ஜொலிக்கும் ! "
கடற்கரையில்
கவிழ்ந்துகிடந்த என்னை
கனிவாய் எழுப்பியது ஓர் கரம்
துடித்தெழுந்துப்பார்த்தேன்
என்னருகில்
கலைஞர் !
உதயசூரியன் உதிக்க
கடற்கரையின் அத்தனை சிலைகளும் உயிர் பெற்றன
அண்ணாவை சந்திக்க
செல்கிறார்
கலைஞர்
அங்கிருந்து
பெரியார் திடலுக்கு செல்வதாய்
திட்டம் !
ராஜாஜி கட்டிடம்
நோக்கி
நடக்கிறேன் நான் !!
- தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment