Monday, August 6, 2018

ரவிக்குமார்

பதவி என்பது பொறுப்பு ; பணிசெய்வதே நிர்வாகம்!
- ரவிக்குமார்

சட்டமன்ற ஜனநாயகத்தை நன்கு அறிந்தவரும், அதை விரிவுபடுத்தியவருமான கலைஞர் முதல்வராக இருக்கும்போது, அந்த அவையில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதென்பது ஒரு நற்பேறு. பேச்சுவார்த்தையும் ஒரு போராட்ட வடிவம்தான் என்பதை அம்பேத்கரின் அணுகுமுறையிலிருந்து கற்ற எனக்கு, 2006-2011 காலத்தில் கலைஞரின் அவையில், அதை சோதித்துப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

2006-ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது விசிக, அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது, சட்டமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில் நான் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். அரசு நூலகங்களுக்கு ஒரு நூலில் 600 படிகள்தான் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதை 1500 பிரதிகளாக உயர்த்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். எதிர்கட்சி கூட்டணியில் இருந்தாலும், எனது கோரிக்கையை ஏற்று, ‘இனி 1000 பிரதிகள் வாங்கப்படும்’ என்று முதல்வராக இருந்த கலைஞர், தனது பதிலுரையில் அறிவித்தார். யாரும் கவனம் செலுத்தாத பிரச்சினை ஒன்றின்பால் கலைஞரின் கவனத்தை ஈர்த்தால் அவர் அதை உடனே நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை அது எனக்கு ஏற்படுத்தியது.

சட்டமன்ற உறுப்பினராகி ஒரு மாத காலம்தான் ஆகியிருந்தது. 2006 - ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி அதிகாலையில் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்தால், ‘நான் கருணாநிதி பேசுகிறேன்’ என்று மறுமுனையில் குரல் கேட்டது. பேசுவது முதல்வர் கலைஞர்தான் என்பதை ஒருசில நொடிகளிலேயே நான் புரிந்துகொண்டுவிட்டேன். அன்று வெளியாகியிருந்த வார இதழ் ஒன்றில் ஈழ அகதிகள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன்.

‘தமிழக அரசியல் கட்சிகள் ஈழ அகதிகளைக் கண்டுகொள்வதில்லை. ஒருவேளை, அவர்களுக்கு ஓட்டுரிமை இருந்தால், அவர்களின் பிரச்சினைகளைப் பேசுவார்களோ’ என்று கட்டுரையின் முடிவில் குறிப்பிட்டிருந்தேன். தான் ஈழப் பிரச்சினைக்காக செய்தவற்றை என்னிடம் கோபத்தோடு வரிசைப்படுத்தினார். ‘உங்களைக் குற்றம்சாட்டுவதல்ல எனது நோக்கம். அகதிகள் பிரச்சினை தொடர்பாக உங்களது கவனத்தை ஈர்க்க வேண்டுமென்பதே எனது எண்ணம்’ என நான் விளக்கம் அளித்ததும், ‘நீங்களே ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு அறிக்கை கொடுங்கள். அவர்களுக்கு என்ன தேவையென்று சொல்லுங்கள் செய்கிறேன்’ என்றார்.

அதன்பிறகு அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு 33 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால், அந்த அறிக்கையை வாங்கிக்கொண்டு போட்டோ எடுத்து அனுப்பியிருப்பார்கள். ஆனால், அவர் சில நிமிடங்களிலேயே அதை முழுவதுமாகப் படித்துவிட்டு, அதிகாரிகளை அழைத்து விவாதித்தது எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை தருவது போன்ற மத்திய அரசு மட்டுமே செய்யவேண்டிய விஷயங்களைத் தவிர்த்து, மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற உத்தரவிட்டார்.

அக்காலத்தில், தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சினை ஒன்றைக் கையிலெடுத்து ஐந்து ஆண்டுகளுக்குள் அதைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என எனக்கு நானே இலக்கு நிர்ணயித்துக்கொண்டேன். இந்தியாவில் அதிக குடிசைகள் இருக்கும் மாநிலம் தமிழகம்தான். அதனால், குடிசை இல்லா தமிழகம் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வந்தேன். இதனைக் கவனித்த கலைஞர் 2009 பாராளுமன்றத் தேர்தலின்போது, எனது கோரிக்கையையே திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக்கினார். அந்தத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.

வாக்குறுதி கொடுத்தபடியே 2010-ஆம் ஆண்டு ஆளுநர் உரையில், தமிழ்நாட்டிலிருக்கும் குடிசைகளையெல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றிமைக்கும் மாபெரும் திட்டத்தை அறிவிக்கச் செய்தார். ‘வருடத்திற்கு மூன்று லட்சம் வீடுகள் கட்டப்படும், ஏழு ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டப்படும்’ என அறிவித்தார். அதுவும், எனது தொகுதியிலேயே வல்லம் படுகை என்ற கிராமத்தில், இத்திட்டத்தின் முதல் வீட்டினை அன்றைய துணை முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அந்த வீடு கட்டிமுடிக்கப்பட்டபோது கலைஞரே வந்து திறந்து வைத்து ஆச்சர்யமூட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில், எஸ்.டி., எஸ்.சி. பிரிவினரின் மக்கள்தொகைக்கேற்ப ஒவ்வொரு தொகுதியிலும் நிதி ஒதுக்கவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு அப்படி விதி எதுவும் இல்லை. அப்படியொரு விதியை உருவாக்கி ஒவ்வொரு தொகுதியிலும் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் வாழும் பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்தவேண்டும் எனக் கேட்டேன். அதையும் மறுக்காமல் நிறைவேற்றினார். அதன்மூலம், ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி ரூபாய்க்குமேல் நலத்திட்ட உதவிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு நடைமுறை இதுவரை இல்லை.

எனது கோரிக்கைகளை ஏற்றே நரிக்குறவர் நலவாரியம், திருநங்கைகள் நலவாரியம், புதிரை வண்ணார் நலவாரியம், வீட்டுப் பணியாளர்கள் நலவாரியம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம், இந்திய மருத்துவர்கள் நலவாரியம் ஆகிய ஆறு நலவாரியங்களை கலைஞர் அமைத்தார். தலைவர் கலைஞருக்கு  பதவி என்பது பொறுப்பு ; பணிசெய்வதே நிர்வாகம்!

நன்றி : புதியதலைமுறை

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...