அண்டார்டிக்காவில் உருகும் பனிப்பாறைகளும் காஞ்சிபுரத்தின் கடற்கரை ரிசார்ட்டும்:- கோ. சுந்தர்ராஜன்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் பேசிய நிபுணர் ஒருவர், இந்த அரங்கில் இருக்கும் எல்லோருக்கும் கடற்கரை ஓரம் இருக்கும் வீடுகளில்/விடுதிகளில் வசிக்க ஆசை இருக்கும், அதனால் காஞ்சிபுரத்தில் இடம் வாங்கிவைத்துக்கொள்ளுங்கள் இன்னும் சில ஆண்டுகளில் கடற்கரை அங்கே வந்துவிடும் என்றார். அவர் பேசியதை கேட்டவுடன் "காலநிலை மாற்றம்" மிகப்பெரிய பிரச்சனைகளை உண்டாக்கப்போகிறது என்பதை அவர் அப்படி கூறுகிறார் என்று நினைத்தேன். ஆனால், தற்போது வரக்கூடிய செய்திகளையும் ஆய்வறிக்கைகளையும் படித்தால் அந்த நிபுணர் கூறியது உண்மையாகிவிடும் என்று தோன்றுகிறது, கவலையாகவும் உள்ளது.
அண்டார்டிக்காவின் பனிப்பாறைகள் வரலாறு காணாத வேகத்தில் உருகிவருவதாகவும், அதனால் கடல்மட்டம் அதிகரித்து மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போவதாகவும் சொல்கின்றன இரண்டு ஆய்வறிக்கைகள்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளிலுள்ள விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அண்டார்டிக் பனிப்பாறைகள் மூன்று மடங்கு அதிகமாக உருகிவருவதாகவும், இதுவரை பதிவு செய்யப்பட்ட வேகத்தைவிட மிக வேகமாக மறைந்து வருகின்றன பனிப்பாறைகள் என்கிறது அந்த ஆய்வு.
மற்றுமொரு ஆய்வு, அடுத்த பத்தாண்டுகளுக்குள் "பசுமைக்குடில் இல்ல வாயுக்கள்" வெளியேறுவதை கட்டுப்படுத்தாமல் விட்டால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு இருக்கும் என்கிறது. இப்போது உருகிக்கொண்டிருக்கும் பனிப்பாறைகள் மட்டும் கடல் மட்டம் 25 செ.மீ. உயர்விற்கு காரணமாக இருக்கும் என்றும் அடுத்த சில பத்தாண்டுகளில் ஒரு மீட்டர் அளவிற்கு கடல்மட்டம் உயருமென்றும் தெரிவிக்கிறது. மேலும், இப்படியே தொடர்ந்தால், அண்டார்டிக் பனிப்பாறைகள் முழுவதும் உருகி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 3.5 மீட்டர் (12 அடி) அளவிற்கு உயரும் என்பதையும் அந்த ஆய்விலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது.
இந்த ஆய்வில் பங்கெடுத்துக்கொண்ட லீட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த "ஆண்ட்ரு ஷெப்பர்ட்" தெரிவிக்கையில், "புவியின் வெப்பத்தில் ஏற்படும் மாற்றம், துருவங்களிலுள்ள பனிப்பாறைகளை பாதிக்கும் என்று நீண்டகாலமாக எங்களுக்கு தெரியும். இப்போது நாம் ஏவியுள்ள செயற்கைகோள்கள்களின் வாயிலாக
பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் நம் கடல்மட்டம் எவ்வளவு உயருகிறது என்பதை கணிக்கமுடிகிறது என்கிறார், அதன் முடிவுகள் மிகுந்த ஆச்சரியத்தக்க வகையிலுள்ளன என்றும் சொல்கிறார். பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் கடல்மட்டம் உயர்வு பல்வேறு நாடுகளையும் அரசுகளையும் கவலைகொள்ளச்செய்திருக்கிறது.
உலகப்புகழ் பெற்ற "நேச்சர்" இதழில் சமீபத்தில் வெளியான இந்த ஆய்வுக் கட்டுரை "அண்டார்டிக்காவிலுள்ள" பனிப்பாறைகள் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் பலவற்றை வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்த ஆய்வுகளை 44 சர்வதேச அமைப்புகளை சேர்ந்த 88விஞ்ஞானிகள் மேற்கொண்டனர், இதுவரை அண்டார்டிகா பற்றி வெளிவந்துள்ள மிகவிரிவான ஆய்வரிக்கை இதுவே ஆகும். 2012 வருடத்திற்கு முந்திய காலங்களில் ஒருவருடத்திற்கு 76 பில்லியன் டன்கள் பனிப்பாறைகள் உருகி, கடல்மட்டம் 0.2 மி.மீ அளவிற்கு உயர்வதற்கு காரணமாக இருந்தன. அதன் பிறகான ஆண்டுகளில், பனிப்பாறைகள் உருகுவது மேலும அதிகமாகி, வருடத்திற்கு 219 பில்லியன் டன்கள் உருகுவதால் கடல்மட்டம் 0.6 மி.மீ அளவிற்கு வருடாவருடம் உயர்ந்து வருகிறது.
நேச்சர் இதழிலில் வந்துள்ள மற்றொரு அறிக்கையும், அண்டார்டிகா மற்றும் அதன் சூழல் அமைப்புகளை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான காலஅளவுகள் குறைந்து வருவதாகவும் அதன் விளைவுகள் உலகத்திற்கு மிகமோசமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன. 2070 ஆம் ஆண்டு அண்டார்டிக்காவின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை இரண்டு "சூழ்நிலைகளில்" (scenarios) கணக்கிட்டுள்ளன. முதலாவது சூழல்நிலை, அடுத்த சில ஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அதன் தாக்கம் அண்டார்டிகாவில் எப்படி இருக்கும் என்பது. இரண்டாவது சூழ்நிலை, புவிவெப்பமயமாவதை தடுக்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், அண்டார்டிகாவில் உள்ள வளங்களை எடுப்பதை நோக்கி சென்றால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது அறிக்கை.
இந்த ஆய்வுகளின் இணை ஆசிரியரான "க்ராந்தம்" நிறுவனத்தை சேர்ந்த "மார்ட்டின் ஸ்க்ரெட்" மேலும் தெரிவிக்கையில், அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் சிலவற்றை மீட்டெடுக்கமுடியாது என்றும், ஆனால் நாம் பலவற்றை தடுக்கவும், மீட்டெடுக்கவும் முடியும் என்கிறார். மிகமோசமாக நிகழ இருக்கின்ற விளைவுகளை மட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஒத்துழைப்பு தேவை என்றும், பயனுள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. அப்படி நடப்பதற்கு முதலில் உலகநாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அண்டார்டிக்காவின் தனித்துவத்தையும், பூமியின் அமைப்புடன் அது இரண்டற கலந்திருப்பதையும், அங்கே ஏற்படும் தாக்கங்கள் உலகத்தின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அண்டார்டிகாவில் ஏற்படும் மாற்றங்கள் கடல் மட்டம் உயர்வில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, அண்டார்டிகாவை சுற்றியுள்ள பகுதிகள் பெரிய "கார்பன் சிங்க்" (carbon sink) ஆக செயல்படுகின்றன. அவை "கார்பன் சிங்க்" ஆக செயல்படுவதால் நாம் வெளியிடக்கூடிய கார்பனை உள்வாங்கிக்கொண்டு காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கு பங்களிக்கிறது.
உலக சூழல் சமன்பாட்டை பாதுகாக்கும் முக்கியமான விஷயங்களில் அண்டார்டிகாவும் ஒன்று என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டால்தான் சர்தேச ஒத்துழைப்புகள் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு அண்டார்டிக்காவின் மேற்கு பனிப்படிமங்களை காப்பாற்ற முடியும். சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் அண்டார்டிகாவை "கடல் சரணாலயமாக" அறிவிக்கக்கோரி பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறது.
பிரிட்டன் நாட்டின் கிரீன்பீஸ் அமைப்பின் "லூயிசா கேஸோன்" தெரிவிக்கையில், அரசுகள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டால் 1.8மில்லியன் சதுர கிலோமீட்டர் பகுதி "பாதுகாக்கப்பட்ட கடல் சரணாலயமாக" மாறி உலகத்தில் "பாதுகாக்கப்பட்ட" (protected area) மிகப்பெரிய பகுதியாக மாறும்.
கடல்சார் சரணாலயங்கள் கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாகும், காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தாங்கும் திறன் கொண்டதாக மாறும். அதனால் கடல்வாழ் உயிரினங்களின் நல்வாழ்வு மட்டுமல்ல, மனிதர்கள் வெளியிடக்கூடிய கார்பனை உள்வாங்கும் மிகப்பெரிய அமைப்பாக மாறும்.
நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், காலநிலை நிபுணர் சொன்னதைப்போல காஞ்சிபுரம் கடற்கரையாகும். காலநிலை மாற்றம் ஒரு மீட்டர் உயர்ந்தால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா பகுதி முழுவதும் கடலுக்குள் சென்றுவிடும் என்பது கூடுதல் தகவல்.
என்ன செய்யப்போகிறோம்?
(பூவுலகு ஏப்ரல்-மே இதழில் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை )
No comments:
Post a Comment