Saturday, August 18, 2018

Ramamurthi Ram

பெரும் பூனைகள் 1

உலகலாவிய புலிகள் தினம்...
(ஜூலை 29)
(Global Tiger Day)

பூனைகளின் குடும்பத்தில் பெரிய உருவமான இந்தப் புலிகளை நவீன மனிதர்களிடமிருந்து காப்பாற்றும் விதமாக அனைவரின்  கவனத்தையும் ஈர்த்து, மிச்சமாக இருக்கிற புலிகளையாவது காத்து எண்ணிக்கையை பெருக்க வேண்டும் என்று, உலகம் முழுவதும் உள்ள நல்ல நோக்கமுடைய  சில  ஆர்வலர்களின் கூட்டுமுயற்சி மற்றும் அக்கறையால் உதித்து உருவானதுதான் இந்த சர்வதேச புலிகள் தினம்....

"ஓர் உயிரினம் அற்றுப்போனால் உணவுச்சங்கிலியில் பல இணைப்புகள் துண்டிக்கப்படும்.இரைக்கும் - இரைக்கொல்லி விலங்கிற்கும்,
மலருக்கும் - மகரந்தத்தைப் பரப்பும் பூச்சிகளுக்கும்,
பழங்களுக்கும் - அவைகளை உண்டு கொட்டைகளைப் பரப்பும் பறவைளுக்கும் உள்ள இணைப்புகள் துண்டிக்கப்படும்.
விலங்குக் காட்சிசாலையிலோ(Zoo) அல்லது தாவரக் காப்பகங்களிலோ(Botanical garden) வைத்து உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியவே முடியாது. காட்டுயிர்கள் எங்கு வாழ்கின்றனவோ அந்த இடத்தில் மட்டும்தான்,அந்தச்சூழலில்தான் அவை செழித்து வாழ முடியும். இத்தகைய நுண்ணிய சூழலமைப்பின் ஒரு பரிமாணமே புலிகள் "...

  -கே.உல்லாஸ் கரந்த்.

சரி சர்வதேச புலிகள் தினம் என்றாலும் கூட உலகளவில் எல்லா இடங்களிலும் புலிகள் இருக்கிறதா எனக் கேட்டால், அது உண்மையில்லை. புலிகள் உலகம் முழுவதும் பரவி இருக்கவில்லை என்பதே உண்மை.அதுபற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்...

இந்த நாளின் நோக்கமும், வலியுறுத்தலும் என்னவென்றால், புலிகளின் இயற்கையான வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்புகளை ஏற்படுத்தி, புலிகளை இந்த பூமியில் காப்பது அல்லது உயிரோடு இருக்கச் செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து உலக மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கி  உலக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெறுவதுதான்...

இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது அனைவரும் அறிவோம். உலகளவில் முன்பு எட்டு வகையான புலிகள் இருந்திருக்கிறது. இவற்றில் இப்போது எஞ்சி இருப்பவை வெறும் ஐந்து இனங்கள் மட்டுமே. இவற்றில் மொத்தமாக இப்போதைக்கு  நான்காயிரத்து அறுநூறு - முதல் ஏழாயிரத்து இருநூறு புலிகள் மட்டுமே உலகம் முழுவதும் உள்ள காடுகளில் இருக்கிறது. இப்போதைக்கு நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடிக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்...

உலகளவில் அதிகளவில் புலிகள், அதிலும் குறிப்பாக தன்னிச்சையாக  வனப்பகுதிகளில் வாழும் புலிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்தியாவில் மட்டும் தான் என்பது நமது பெருமை. ஆனால், 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான புலிகள் இருந்ததாக ஆங்கிலேயர்களின் ஆவணக் குறிப்புகளில் இருக்கிறது. அவர்களால் புலிகளும் கொல்லப்பட்டன, அவற்றின் இரை விலங்குகளும் கொல்லப்பட்டன. அந்தக் கால கட்டத்தில்தான் அவைகளின் வாழிடமும் மனிதர்களால் வேகமாக அழித்து சுருக்கப்பட்டது....

அதிலும் மருத்துவ மூடநம்பிக்கை,பழிவாங்க கொல்லப்பட்டது,சாதனைக்கான வேட்டை என பல்வேறு காரணங்களால் புலிகள் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. இப்போதைக்கு கள்ளவேட்டை மட்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது...

புலிகள் அதிகளவில் இருப்பது ஒரு ஆரோக்கியமான காட்டின் அடையாளம் என்பதை விட ஒரு ஆரோக்கியமான நாட்டின் அடையாளம் கூட என்பதையும் நாம் உணர வேண்டும். அதை புரிந்து கொள்ள வேண்டும். பெய்கின்ற மழைக்கும் புலிகளுக்கும் கூட தொடர்புண்டு என்றுகூட பேசப்படுகிறது. ஆழமாக பார்த்தால் அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான்...

இன்றைக்கு இத்தோடு முடித்துக்கொண்டு புலிகளைக் கொண்டாடுவோம். புலிகளை உள்ளடக்கிய பூனைக் குடும்பத்தில் உள்ள பல விலங்குகளை பற்றி பேச வேண்டிய காரணமும் அவசியமும் உள்ளதால் அடுத்தடுத்த பதிவுகளில் அதுபற்றியும் பார்ப்போம். இந்த தொடரை நீட்டிப் பேசுவதும் சுருக்கமாக முடித்துக் கொள்வதும் உங்களது கருத்துகளிலும் கேள்விகளிலுமே உள்ளது...

எனவே உங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை எதிர்பார்த்து,

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...