Monday, September 3, 2018

பேராசிரியர் மதுதண்டவதே ! - 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

குளிர்சாதன பெட்டியும், ரயில்வேயின் இரண்டாம் வகுப்பு குஷனும்" :-

மரணத்திலும், மக்கள் சேவைக்காக தன்னுடலை தானம் செய்துள்ளவர் நண்பர்களை மட்டுமே விட்டுச்சென்றுள்ளார், அவருக்கு எதிரிகள் கிடையாது என்றார் சமூக நீதி காவலர் வி.பி.சிங். முன்னாள் பிரதமரால் பாராட்டுப்பெற்ற "மது தண்டவதே" யார்? அவரைப்பற்றி இன்றைய தலைமுறை அறியுமா?

1924 ஆம் ஆண்டு அஹ்மத் நகரில் பிறந்து "வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்" பங்குபெற்று சிறை சென்ற "மது தண்டவதே" "ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்" நிறுவனத்தில் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். இயற்பியலாளராக பணியாற்றிய அவர், புகழ்பெற்ற சித்தார்த் கல்லூரியின் துணைமுதல்வராகவும் பணியாற்றினார்.

1960 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலம் உருவாவதற்கு பெரும் பங்காற்றிய "சம்யுக்தா மஹாராஷ்ட்ரா இயக்கத்தின்" முக்கிய பொறுப்பாளர், பிறகு பிரஜா சோசியலிச கட்சியின் முக்கிய உறுப்பினர் ஆனார். 1970 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேலவை உறுப்பினராக பணியாற்றியவர், 1971 ஆம் ஆண்டு முதல்1990 வரை 5 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியவர்கள் கொங்கன் பகுதியை சேர்ந்த "ரஜபூர்" தொகுதி மக்கள். இந்திரா மற்றும் ராஜீவ் பிரதமராக பணியாற்றிய காலகட்டங்களில் மிகச்சிறப்பாக பணியாற்றிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவர் மது தண்டவதே.

நெருக்கடி (எமெர்ஜென்சி) காலகட்டத்தில் 18 மாதங்கள் பெங்களூரு மற்றும் புனே சிறைகளில் சிறைவைக்கப்பட்டார்.

இன்று நாம் ரயில் பயணம் மேற்கொள்ளும்போது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியிலுள்ள "குஷன் இருக்கையை" யார் கொண்டுவந்தது தெரியுமா?. 1977-79 காலகட்டத்தில் மொராஜி தேசாய் பிரதமராக இருந்த சமயத்தில், அவருடைய அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த மது தண்டவதேதான். அதுவரை மரக்கட்டைகளான இருக்கைகள்தான் இரண்டாம் வகுப்பில் இருந்தன. இரண்டாம் வகுப்பு பயணத்திற்கு "இரண்டு இன்ச்சிலான" குஷன் படுக்கை வசதியை அறிமுகப்படுத்தி பேசியபோது தண்டவதே சொன்னவார்த்தைகள் என்ன தெரியுமா? "நான் முதல் வகுப்பின் தரத்தை குறைக்கவில்லை, ஆனால் இரண்டாம் வகுப்பின் தரத்தை உயர்த்திருக்கிறேன்" என்று உண்மையான சோசியலிசவாதியாக பேசினார். அதுமட்டுமல்ல, இவர் ரயில்வே துறை அமைச்சராக இருந்த சமயத்தில்தான் "கணினியை பயன்படுத்தி" முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் மற்றவர்களின் காலத்தில் விரிவாக்கப்பட்டது, இதன் மூலம் "ரயில்வே பயணசீட்டு" தொடர்பாக நடைபெற்ற ஊழல் ஒழிக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் சமூகவரலாறு எழுதப்பட்டால் அது, "தண்டாவதேக்கு முன், தண்டாவதேக்கு பின்" என்றுதான் எழுதமுடியும் என்கிறார் ராமச்சந்திர குஹா.

மேலும், நேர்மையாகவும் எளிமையாகவும் சோசியலிசவாதிகளும் அவர்களின் குடும்பங்களும் வாழ்ந்தன என்றும் அதற்கு தானே சாட்சியம் என்கிறார் குஹா. 1979 ஆம் ஆண்டு அஹமதாபாத் சென்று டெல்லி திரும்புவதற்கான டிக்கெட் வாங்குவதற்கு ரயில்நிலையத்தில் "டிக்கெட் கவுண்டரில்" வரிசையில் காத்துக்கொண்டிருந்தபோது தனக்கு பின்னால் காத்துக்கொண்டிருந்தவர் "உதய் தண்டவதே". அவர் வேறுயாருமல்ல, அப்போது ரயில்வே துறையின் அமைச்சராக இருந்த மது தண்டவதேயின் மகன்,  .          

1990 ஆம் ஆண்டு வி.பி. சிங் பிரதமரானபோது அவருடைய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார் மது தண்டவதே. அவர் நிதி அமைச்சராக பணியாற்றிய போது, அவருடைய மனைவி (பிரமிளா தண்டவதே, இவரும் சோசியலிச கட்சியில் பணியாற்றி எட்டாவது நாடாளுமன்ற அவையில் உறுப்பினராக இருந்தவர்) இவரிடம் "வீட்டிற்கு குளிர் சாதனபெட்டி (பிரிட்ஜ்)" வாங்கவேண்டுமென்றும், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் ஏதாவது வரி குறைப்பு இருக்குமா (அதன்மூலம் விலை குறையுமா) என்றும் கேட்டுள்ளார். நிதிநிலை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த மது தண்டவதே அதற்கு பதிலேதும் தரவில்லை, சரியான பதில் இல்லையென்பதால் அவருடைய மனைவியும் கடைக்குச்சென்று குளிர்சாதன பெட்டியை வாங்கிவந்துவிடுகிறார். பிரிட்ஜ் வந்த சிலநாட்களில் நிதிநிலை அறிக்கையில் குளிர்சாதன பெட்டிக்கான வரியை குறைத்து தாக்கல் செய்கிறார் மது தண்டவதே.

திட்டக்குழுவின் துணைத்தலைவராக 1996 முதல் 1998 வரை பணியாற்றினார். “ஆயுள்காப்பீட்டு பணியாளர்கள் சங்கத்தின்” தலைவராக 24 ஆண்டுகள், அவர் இறக்கும் வரை செயலாற்றினார்.

நாள்பட்ட நோயினால் தன்னுடைய 81வது அகவையில் 2005 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார், அவருடைய உடல் அவருடைய விருப்பப்படி மும்பையிலுள்ள ஜெ.ஜெ.மருத்துவமனைக்கு கொடையாக கொடுக்கப்பட்டது.

நேர்மையை தன்னுடைய கொள்கையாகவும், எளிமையை கோட்பாடாகவும் கொண்டவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

யோசித்துப்பார்த்தால் இப்படி ஒருவர் ரத்தமும் சதையுமாக இந்த நாட்டில் வாழ்ந்துள்ளார் என்பதே ஆச்சரியம்தான். இன்று இப்படிப்பட்ட தலைவர்களெல்லாம் கிடைப்பது சாத்தியமா?

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...