சிந்துவெளிப் புதிரும் சில விடைகளும்
-------------------------------------------------------
The Explosive truth கட்டுரையுடன் இந்தியா டுடே வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில் அந்த இதழுடன் சேர்த்துப் படிக்க வேண்டிய புத்தகம் இந்திய குடிமைப் பணி அதிகாரியும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' புத்தகம்.
சிந்துவெளிப் புதிர் என்ற இந்த நூலின் முதல் அத்தியாயத்தில் சில கேள்விகளை முன்வைக்கிறார் பாலகிருஷ்ணன். அதாவது, 4000க்கு முன் வாழ்ந்த இந்த மக்கள் பேசிய மொழி என்ன?, சிந்துவெளிக் குறியீடுகள் சொல்லும் சேதி என்ன?, இந்த நாகரீகம் எப்படி முடிவுக்கு வந்தது? ஆகியவைதான் அந்தக் கேள்விகள். இதுவே சிந்துவெளிப் புதிரும்கூட. இதில் ஒரு கேள்விக்கு இந்தியா டுடே கட்டுரை பதில் தருகிறது. அதாவது அந்த மக்கள் பேசியது ஆரம்பகால திராவிட மொழி என. இதே கருத்தை இந்தப் புத்தகத்தின் கருத்தை இரண்டாவது பகுதியில் பாலகிருஷ்ணனும் உறுதிப்படுத்துகிறார்.
கொற்கை, வாஞ்சி, தொண்டி போன்ற சங்க காலத் தமிழ்ப் பெயர்கள் சிந்துவெளியிலும் அதற்கு அப்பாலும்கூட இருக்கின்றன. அவை அங்கிருந்தே, அந்த மக்களோடு சேர்ந்தே தமிழகத்திற்கு வந்தன என்கிறார் இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ஐராவதம் மகாதேவன்.
இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான பண்பாட்டு ஒற்றுமையையும் குறிப்பிடுகிறது. அதாவது சிந்துவெளி நாகரீகத்திலும் மேற்கு திசையில் உயர்வான மேடையில் நகர்ப்புறமும் கிழக்குத் திசையில் தாழ்வான இடத்தில் புறநகரும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் 'மேலே' என்றால் உயரே என்ற அர்த்தமும் 'கீழே' என்றால் தாழ்வான என்ற அர்த்தமும் இந்த நகர அமைப்பிலிருந்தே வருகின்றன என்கிறார் பாலகிருஷ்ணன். வட இந்திய மொழிகளில் மேற்கு, கிழக்கு என்பதற்கு இவ்வித அர்த்தமில்லை.
இதைவிட பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
வெளியீடு - பாரதி புத்தகாலம். விலை: ரூ. 150. அமேஸானில் கிடைக்கிறது.
No comments:
Post a Comment