Friday, September 14, 2018

ரவிக்குமார்

சிலை கடத்தல் : ஒரு மர்ம நாவல்
- ரவிக்குமார்

கடத்தல்காரர்களால் அயல்நாடுகளுக்கு விற்கப்பட்ட தமிழ்நாட்டுக் கோயில் சிலைகள் சிலவற்றை மீட்டுக்கொண்டு வந்ததுபற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல் இது. இந்த மீட்புப் பணியில் தன்னார்வலராகக்  காவல்துறையோடு இணைந்து பணியாற்றிய விஜயகுமார் தனது அனுபவங்களை மர்ம நாவல் ஒன்றை எழுதுவதுபோல
சுவாரஸ்யமான மொழியில் எழுதியிருக்கிறார்.

விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர், ஶ்ரீபுரந்தன் நடராஜர், சுத்தமல்லி அம்மன் - முதலான சிலைகள் மீட்கப்பட்டதை விறுவிறுப்பு மாறாமல் கூறியிருக்கிறார்.

சுபாஷ் கபூர், தீனதயாளன் போன்ற சிலை கடத்தல்காரர்களின் நிழல் உலகப் பின்னணி விரிவாக இந்த நூலில் பேசப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 49 ல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, 
தொன்மை வாய்ந்த  சிலைகள் களவாடப்படாமல் தடுப்பதற்கு பல்வேறு நாடுகளில் உள்ளதுபோல சிறப்புச் சட்டம் ( law of patrimony )  இயற்றப்படவேண்டும் என்ற ஆசிரியரின் கருத்தை அரசாங்கத்தார் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆசிரியரின் முதல் நூல் இது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலின் அமைப்பில் அதன் தடயம் தெரிகிறது.
நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சிலைகளின் புகைப்படங்கள் அவ்வளவு துல்லியமாக இல்லை. பதிப்பாளர்கள் அதில் சற்று  கவனம் செலுத்தியிருக்கலாம்.

சமகாலப் பிரச்சனை ஒன்றைப்பற்றி உடனே ஒரு நூலை எழுதியதற்காக மட்டுமின்றி, கடந்த பத்தாண்டுகளாக சிலை திருட்டுக் கும்பலைப் பின் தொடர்ந்து அவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்த உதவிய துணிச்சலுக்காகவும் விஜயகுமாரைப் பாராட்டவேண்டும்.

சபாஷ் விஜயகுமார் !

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...