Sunday, September 9, 2018

பி.எஸ்.என்.எல் இறந்தக்கதை ! - சரவணன் சவடாமுத்து

BSNL-Updates

அன்பார்ந்த பி.எஸ்.என்.எல். எபிசோட் ரசிகர்களே..!

மன்னிக்கவும்.

இனிமேல் அந்தத் தொடர் இங்கே பதிவு செய்யப்பட மாட்டாது. இதுதான் கடைசி.

ஏனெனில், என்னுடைய பி.எஸ்.என்.எல். கனெக்சனை நேற்றைக்கு திருப்பிக் கொடுத்துவிட்டேன்..!

கொடுக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. பிரச்சினை மேல் பிரச்சினை.. பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பதை போல என்னை ரொம்பவே சோதனைப்படுத்திவிட்டது பி.எஸ்.என்.எல். இணையத் தொடர்பு.

10 நிமிடம் செயல்படும். அடுத்த 15 நிமிடங்கள் படுத்துவிடும். யாரிடம் புகார் செய்தாலும் “பார்க்குறோம் ஸார்..”, “பார்க்குறேன் ஸார்..”, “பார்த்துக்கிட்டேயிருக்கோம் ஸார்” என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் பிரச்சினை முடிந்தபாடில்லை..!

பல நேரங்களில் பைல்கள் டவுன்லோடி ஆகிக் கொண்டிருக்கும்போதே லைன் கட் ஆகிறது. திரும்பவும் டவுன்லோடிட வேண்டியுள்ளது. சில சமயங்களில் இணையத்தளத்தின் உள்ளே டைப் செய்து கொண்டிருக்கும்போதே லைன் கட்டாக.. திரும்பும் அனைத்தையும் டைப் செய்ய வேண்டி வந்தது..!

என்னதான் திருடன், கொள்ளைக்காரன் என்று மானாவாரியாகத் திட்டினாலும் ரிலையன்ஸ்காரன் மாதிரியான நமக்கான நெருங்கிய சொந்தம் இந்தியாவேலேயே யாருமே இல்லை என்பது பட்டவர்த்தனமான உண்மை.

அனைவரும் உபயோகிப்பதை போலவே ஜியோ இணையக் கருவியை வாங்கியுள்ளேன். பி.எஸ்.என்.எல். படுக்கும்போதெல்லாம் கை கொடுத்தது ரிலையன்ஸ்தான்.

பி.எஸ்.என்.எல்.-க்கு மாதந்தோறும் 1100 ரூபாய் வேறு தண்டத்திற்கு கட்டி வந்துள்ளேன். ஆனால் லேண்ட்லைனில் ஒரு கால்கூட நான் செய்ததில்லை. எல்லாமே செல்போன் மூலம்தான்.

இனிமேல், அனாவசிய செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று சென்ற மாதம் முடிவெடுத்தபோது முதலில் கண்ணில் பட்டது இந்த பி.எஸ்.என்.எல். கனெக்சன்தான்.

ஆகவே, வேறு வழியில்லாமல் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, ஈர மனதுடன்.. கலங்கிய கண்களுடன் நேற்று அசோக் நகர் அலுவலகத்தில் எனது கனெக்சனை சரண்டர் செய்கிறேன் என்பதாக எழுதிக் கொடுத்தேன்.

இதிலும் ஒரு கதை நடந்தது.

நேற்று முன்தினம் அசோக் நகர் அலுவலகம் சென்று சரண்டர் செய்வதற்கான பார்மாலிட்டிஸ் பற்றிக் கேட்டபோது சீட்டில் இருந்த ஒரு அம்மணி சிரித்தபடியே விருட்டென்று இரண்டு விண்ணப்பங்களை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

கணிணியில் எனது ஜாதககத்தை அலசி, ஆராய்ந்துவிட்டு “நீங்க மோடத்தை வாடகைக்கு எடுத்திருக்கீங்க... அதை வளசரவாக்கம் எக்சேன்ஜில் கொடுத்துவிட்டு அவர்களிடம் இதில் கையெழுத்து வாங்கிட்டு வாங்க..” என்றார்.

அந்தம்மா சொன்ன பிறகுதான் காலாவதியாகி நான் தலையைச் சுத்தித் தூக்கிப் போட்ட அந்த பி.எஸ்.என்.எல். மோடம் ரென்ட்டல் என்பதே எனக்குத் தெரிந்தது. “எனக்கு இதுவரைக்கும் தெரியாதே..?” என்றேன் ஆச்சரியமாய். “என்ன ஸார் சொல்றீங்க.. மாசாமாசம் அதுக்கும் சேர்த்துதானே பணம் கட்டியிருக்கீங்க.. பில்லை பார்க்கலியா..?” என்றார்.

எனக்குத் தலையே சுற்றியது. 2 வருடங்களுக்கு முன்பாக அவர்கள் கொடுத்த மோடம் வேலை செய்யாமல் போனதால் நான் என்னுடைய சொந்தக் காசில் ஒரு மோடத்தை வாங்கி அதனை இன்ஸ்டால் செய்து கொடுங்கள் என்று 5 நாட்களாக நாயாய் அலைந்து சரி செய்தேன். இந்தக் கதையையும் முன்பேயே இங்கு பதிவிட்டிருந்தேன்.

அப்போதே அந்த அலுவலர்கள் “அது வாடகை மோடம். திருப்பிக் கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால் பில்லில் சேர்ப்பார்கள்” என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் செய்திருப்பேன். யாருமே சொல்லலியே சாமிகளா..!? ஊழியர்கள் பழி வாங்கிவிட்டார்கள் போலும்..!

மோடத்திற்கான வாடகை மாதத்திற்கு 70 ரூபாய். 4 வருடங்கள் பயன்படுத்தியிருக்கிறேன். மொத்தமாக 3360 ரூபாயை தண்டத்திற்கு பி.எஸ்.என்.எல்லுக்கு தாரை வார்த்திருக்கிறேன். என்ன செய்ய..? நமக்கு விதிக்கப்பட்டது இதுதான்..!

சரி.. ஓகே.. எத்தனையோ பணத்தை தண்டமா செலவழிச்சிருக்கோம். இதையும் அதுல ஒண்ணா சேர்த்துக்கலாம்ன்னு நினைச்சு விட்டுட்டேன்.

நேற்று வளசரவாக்கம் அலுவலகம் சென்றேன். ராமகிருஷ்ணன் என்ற புதிய JTO இருந்தார். விஷயத்தைச் சொன்னவுடன் பட்டென்று கையைப் பிடித்துவிட்டார். ராஜ்கிரணை போல பாசத்தைப் பொழிந்தார்.

“ஏன் ஸார்..?”

“எதுக்கு ஸார்..?”

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஸார். நான் இப்போதான் இங்க டிரான்ஸ்பராகி வந்திருக்கேன். இனிமேல் குறையில்லாமல் பார்த்துக்குறேன்..!”

“சரண்டரெல்லாம் வேண்டாமே..?” என்று கெஞ்சினார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்னுடைய கடந்த 8 வருட கால பி.எஸ்.என்.எல். வாழ்க்கையில் நேற்றுதான் முதல் முறையாக இப்படியொரு மரியாதையை அந்த அலுவலகத்தில் சந்தித்தேன். எனக்கே சங்கடமாகத்தான் இருந்தது.

இருந்தாலும், என்னுடைய பழைய கதையையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன். லோகநாதன் ஹிஸ்டரியையும் சொல்லி.. “இனிமேல் முடியாது ஸார்.. விட்ருங்க. அனாவசியமாக செலவு செய்ய விரும்பவில்லை. என்னிடம் பணமும் இல்லை. எனக்கு இப்போதைக்கு ரிலையன்ஸே போதும்…” என்று சொல்லி வற்புறுத்தி கையெழுத்து வாங்கினேன். தயக்கத்துடனேயே கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

கூடவே, தனிப்பட்ட அட்வைஸாக “உடனடியாக வங்கிக்குச் சென்று இ.சி.எஸ். ஆப்ஷனை நீக்கிவிடுங்கள். தப்பித் தவறி அடுத்த மாதமும் பில் கவுண்ட்டாகிவிட்டால் பணம் டிரான்ஸ்பராகிவிடும்..” என்று எச்சரித்தார். 

பின்பு விடைபெற்றபோது கையை விடாமல் பிடித்தபடியே வந்து மாடிப்படியருகே வந்து விடை கொடுத்தார் ராமகிருஷ்ணன் ஸார். நெஞ்சார்ந்த நன்றிகள் ஸார்..! உங்களை மாதிரியும் ஒரு சிலர் இருப்பதால்தான் பி.எஸ்.என்.எல். வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

மீண்டும் அசோக் நகர் வந்து விண்ணப்பங்களை கொடுத்து மோடம் கதையைச் சொன்னபோது “அதுக்கு 1500 ரூபா பிடிப்பார்கள் ஸார்.. மீதமிருக்கும் தொகை கண்டிப்பாக வங்கியில் போட்டுவிடுவார்கள்.. அவ்வளவுதான்..” என்று சிரித்தபடியே சொல்லி சரண்டருக்கான ஒப்புகைச் சீட்டை கொடுத்தார்கள்.

எனக்கு பின்பு மூன்று பேர் சரண்டர் கதைக்காக காத்திருந்தார்கள். பக்கத்து இருக்கையிலும் 2 பேர் சரண்டருக்காக வந்திருந்தார்கள்.

இதில் அந்த அலுவலர்களுக்கு எந்தவொரு குற்றவுணர்வோ, வருத்தமோ இல்லை. அவர்களுக்கு இதுவொரு வேலை அவ்வளவுதான்..!

இத்தனை நாட்களாக நம்முடன் இணைந்திருந்த தோழன் என்கிற உறவில் இருந்த அந்த நிறுவனம் இன்றைக்கு தேவையில்லாத ஆணியாகிவிட்டதே என்பதைவிடவும், முகநூல் ரசிகர்களுக்கு இனிமேல் இந்த அப்டேட்ஸ் கிடைக்காது என்பதுதான் எனக்கு மிகப் பெரிய வருத்தமாக இருக்கிறது..!

கலங்காதீர்கள் மக்களே..!

நம்ம கோவணாண்டி இது இல்லைன்னா இன்னொண்ணுன்னு வேறொரு ஆப்பை இந்நேரம் தீட்டிக்கிட்டிருப்பான். கண்டிப்பாக நமது புலம்பல் கதை வேறொரு வடிவத்தில் இங்கே வெகு விரைவில் வெளியாகும்..!

இதுவரையிலான பி.எஸ்.என்.எல். அப்டேட்ஸ்களுக்கு ஊக்கமும், ஆக்கமும், ஆதரவும் நல்கிய அனைத்து நல்ல இதயங்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் எனது கோடி நன்றிகள்..!

வணக்கம்..!
#BSNLUpdates #ValasaravakkamExchange

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...