Saturday, September 8, 2018

கே.எஸ்.சுரேஷ்குமார்

முரளியும் நானும் பின்னே கோல்டு ஃப்ளேக் கிங்ஸும்.

காலை வயிற்றுக்கு உணவு கொடுக்குமுன் நுரையீரலுக்கு புகையை உண்ணக் கொடுப்பதை வழக்கமாக் வைத்திருந்தேன். நான் மட்டுமல்ல புகைப்பவர் எவரும் காலை எழுந்ததும் கண்ணாடியை துழாவுவதுபோல சிகரெட்டை துழாவி எடுத்து பற்றவைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம். பின் கொல்லைப் பக்கம் ஒதுங்கும்போது ஒன்று, உணவுக்கு பின் ஒன்று என நிரல்படி எல்லாம் நடக்கும். கலவி முயக்கத்திற்கு முன்பும் பின்புமாக ஒன்று தீவிரமாக ஆழ இழுத்தால்... அது கலவி சுகத்தைக் காட்டிலும் சொர்க்கம். மதுவுடன் என்றால் ஐந்தாறு சேர்த்து காலியாகும். வேலைப் பழுவில், சிந்தனை மட்டுப்படும்போது, புதிதாக எதையும் யோசிக்கும் போது,மொட்டை மாடி  தனிமையில், மழை நாளில், குளிர் இரவில் என அதற்கு பெற்ற பிள்ளையை விட உரிமை அதிகம் கொடுத்திருப்போம்.

சென்னையில் இருக்கும்போது அதிகாலை தேனீருடன் தேனீருக்கு முன்னும் பின்னும், புது நண்பர் அறிமுகத்தில் என அதற்கு சிறப்பு சலுகைகள் உண்டு. இதற்கு மட்டும் வாராந்திர மாதாந்திர விடுமுறை எதும் கிடையவே கிடையாது. முக்கியமாக தனிமையில் ஒரு உற்ற நண்பன் போல் விரலிடுக்கில் தன்னை கரைத்துக் கொண்டு உடனிருக்கும். நிஜத்தில் அது நண்பனைப் போலத்தான். தனிமை போக்கும், உடன் உரையாடும், கோபத்தை தணிக்கும், சில சமயம் அறிவுரை சொல்லும் அந்த சிகரெட். எத்தனையோ முறை இதை விட்டொழிக்க எவரெவரோ அறிவுறை சொல்லியும் விட முனைந்ததில்லை. முத்தங்கள் பரிமாற்றத்தில் கூட முன்னமாக ஒரு சுபாரியோ அல்லது ஒரு ஹால்ஸோ வாசனையை கொஞ்சம் மட்டுப் படுத்தும். எல்லா தருணங்களிலும் எல்லா வகையிலும் புகைவிட்டுப் பார்த்தாயிற்று.

எட்டு வருடங்கள் முன் இதே நாளில் மீனாட்சி தியேட்டரில் பானா காத்தாடி பார்க்கும்போது இடைவேளையில் இழுக்க என்று இரண்டு கிங்ஸ் வாங்கி வைத்திருந்தேன். வெளியே வந்து பற்றவைக்கும் போது ஒரு நண்பர் ஒரு துயரச்செய்தியை பற்றவைத்தார். “சார் முரளி இறந்துட்டாராமே, செயின் ஸ்மோக்கர் போல, அட்டாக்காம்” என்றார். நாற்பது ப்ளஸ் வயது. பையன் இப்போதுதான் அறிமுகம், மகளுக்கு திருமணம் பேசி பத்திரிக்கை அடித்தாகிவிட்டது. ஆனால் இனி அவர் இல்லை பிள்ளைகள் அனாதை என்கிற நினைப்பு எனக்கு உடனடியாக கிலியைக் கொடுத்தது. அந்த ஒரு செய்தியோடு சிகரெட்டை செய்தி சொன்ன நண்பருக்கே கொடுத்துவிட்டு சலனிமின்றி மிச்சப் படத்தைப் பார்த்தேன். ஒன்றும் ஒட்டவே இல்லை.

இன்றைக்கு முரளிக்கு எட்டாவது வருட  நினைவுநாள். என் சிகெரெட்டுக்கும்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...