நாட்டார் பாடல்
நாட்டுப்பாடலின் பொதுத்தன்மை அதன் படைப்புத் தன்மையில் இல்லை, பரவுதலில்தான் இருக்கிறது என்று Folk song in England நூல் கூறுகிறது. நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் அது நாட்டுப்பாடல். அது உயிருள்ளதோர் வடிவம். அது வளரும், மாறும், தேயும், சாகும் புதைந்த நிலத்தில் மீண்டும் மறு உருவம் கொள்ளும் என்பார் வானமாமலை. தாலாட்டுப் பாடல்களைதான் பின்னாளில் ஆழ்வார்கள் மெருகேற்றிப் பிள்ளைத் தமிழாக்கினார்கள். தேவர் தேவிய தாலாட்டாகவும் யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கி பாடல்கள் இயற்றினர் என எடுத்துக் காட்டுவார்.
பழைய உருவத்தைப் பார்த்து அய்யோ இது போய் விட்டதே என்று அழுகிற வேலை ஆராய்ச்சியாளனுக்கு வேண்டாம் என்கிறார் அவர். நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் எழுகின்ற உணர்வு பாடலாக உருமாறும். அது வாய்மொழி பரவுதலின் மூலம் நாட்டார் பாடலாகும். அது சிறிது தொலைவு மட்டும்தான் பரவும். அதை Localised Tradition என்பர். இதை அச்சில் வெளியிட்டால் அதன் பரப்புத் தமிழகம் முழுதும் இருக்கும். அதுவே திரைப்பாடல்கள் எனில் அது அமெரிக்கக் கண்டத்துத் தமிழர்களையும் தொடும். வாய்மொழி பரவுதல் என்கிற வடிவம் எழுத்து வரி பரவுதலாக மாறி இன்று காணொளி பரவுதலாக மாறியுள்ளன. திரைப்பாடல்களில் நாட்டார் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நாட்டார் கலைஞன் இளையராஜா.
இங்கே சில நாட்டார் பாடல்கள் தரப்பட்டுள்ளன. இவை எந்தத் திரைப்படப் பாடலாக உருமாறியுள்ளன என்பதை நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளலாம். மேலும் பாடல்கள் தெரிந்தவர்கள் அவற்றை பதிவேற்றலாம். முதலில் இளையராஜா தன் முதல் படத்திலேயே தொடக்கி வைத்த நாட்டார் பாடல்:
புள்ளிப்போட்ட ரவிக்கைக்காரி
புளியங்கொட்டை சீலைக்காரி
நெல்லறுக்கப் போகும்போது
நான் நெல்லிமரக் காவலடி
பாடம் படிப்பரியேன்
பாட்டின் வகை நானரியேன்
ஏடும் எழுத்தரியேன்
எழுத்துவகை நானறியேன்
காடெல்லாம் பிச்சி
கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணக்குதில்ல
நல்ல மகன் போற பாதை.
குச்சி குச்சி ராக்கம்மா
பெண்ணுண்டோ?
கூடசாலி ராக்கம்மா
பெண்ணுண்டோ?
ஓடுகிற நரியிலே ஒரு நரி சிறு நரி,
சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்.
அஞ்சு ரூபா தாரேன்
அரக்கு போட்ட சேலை தாரேன் – உன்
ஆத்தாள் அறியாம நீ
வாக்கப்பட்டு வந்திரடி
அஞ்சு ரூபா வேண்டாம்
அரக்குபட்டு சேலை வேண்டாம்
தட்டான் அறியாம நீ
தாலி பண்ணி வந்திரடா
இஞ்சி இடுப்பழகா
எலுமிச்சங்காய் மாரழகா
மஞ்சச் சிவப்பழகா
மறக்க மனம் கூடுதில்லை
வட்டு கருப்பட்டிய
வாசமுள்ள ரோசாவை
திணு செழுக்கு முன்னே
தேசமெங்கும் போராச்சு
ஏறாத மலைதனிலே
இலந்தை பழுத்திருக்கு
ஏறி உலுப்புங்களேன்
இளைய கொழுந்தன்மாரே
நன்றி: ஓவியம் – மாணிக்கவாசகம் மணி. இணையத்தளத்தில் எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment