Tuesday, September 4, 2018

சாவித்திரி கண்ணன்

நமது சமூகம் இவ்வளவு நிதானமிழந்து நான் பார்த்ததில்லை. தமிழிசையம்மா விஷயத்தில் ஏராளமானவர்கள் சோபியாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல.

பிடிக்காத கட்சி தலைவர்களை பொதுதளத்தில் எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாம் என்பதை ஊக்குவிக்கும் போக்கு எதிர்காலத்தில்  சமூக நல்லிணக்கத்திற்கு கேடாகிவிடும்.

இந்த நிகழ்வில் அந்த பக்குவமில்லாத சிறு பெண்ணின் வயது கருதி, இதை பொருட்படுத்தாமல் கடந்திருந்தால் அது அவருக்கு பெருமை சேர்ந்திருக்கும். அதை பொருட்படுத்தியதன் விளைவாக, அந்த எதிர்ப்புப் லட்சம் மடங்காக பெருக காரணமாகிவிட்டது.

இந்த நிகழ்ச்சி எனக்கு வேறொரு அனுபவத்தை நினைவு படுத்திவிட்டது .

நல்ல வேளையாக சோபியா தாக்கப்படவில்லை என்பது ஆறுதலளிக்கிறது.

காமராஜர் அரங்கில் ஓர் நிகழ்ச்சியில் குமரி அனந்தன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.அவர் பேச்சு நாடகபாணியில் உணர்ச்சி ததும்ப மிக செயற்கையாக இருந்தது. இதனால் அரங்கில் இருந்த இளைஞர்கள் சிலர், சிரித்து,கைதட்டினார்கள்.

ஆனால், அப்படியும் அவர் பேசிக் கொண்டே போனார்.அப்போது ஒரு இளைஞன் மேடையேறி ஐயா குமரி அனந்தனிடம் நெருக்கமாக  சென்று ஏதோ கூற, குமரி அனந்தன் முகத்தில் கோபம் வெளிப்பட்டது. தான் பேசி முடித்ததும், கீழே இருந்த அவரது ஆதரவாளர்களில் ஒருவரை அழைத்து ஏதோ பேசினார். அவர் அந்த இளைஞரை வெளியே அழைத்து சென்றார். கூடவே வேறு சிலருக்கும் சைகை காட்டினார். அவர்களும் வெளியேறினர். நானும் ஏதேச்சையாக வெளியே வந்த போது, அந்த இளைஞரை அனைவரும் ரவுண்டு கட்டி அடித்து உதைத்து கொண்டிருந்தனர்.

நான் அதிர்ந்து, என்ன நடக்கிறது இங்கே... அவரை அடிக்காதீங்க. ..என அலறினேன்.ஒரு வழியாக அவர்கள் அவனை விடுவித்த போது, முகத்தில் ரத்தம் வழிந்தது, சட்டை கிழிந்து தொங்கியது.
அவனை எனது டி வி எஸ் 50 யில உட்கார வைத்து, எங்க போகணும் என்றேன்.வடபழனி எனக் கூறி உட்கார்ந்தான்.
"நீ என்ன சொன்ன குமரியாரிடம்" என்றேன்.
அதற்கு அவன், "சார், நான் குமரி அனந்தன் ஐயா அவர்களின் ரசிகன். அவரை மற்றவர்கள் கேலி செய்வது கண்டு மனம் குமுறி , அவரிடம், "ஐயா, உங்களை மிகவும் கிண்டலடிக்கிறார்கள்.ஆகவே பேச்சை சுருக்க முடித்து விடுங்கள் ''என்றேன். அதற்கு அடித்து உடைத்துவிட்டனர்...என்று கூறி கதறி அழுதான்.
எனக்கும் கண்ணீர் துளிர்த்தது மனம் பதைத்தது.எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை.
வள்ளுவர் கோட்டம் வந்ததும், நான் பஸ்சில் ஏறிக்கிறன் என்றான்.முதலில் ஏதாவது ஆஸ்பத்திரிக்கு போப்பா..."என்றவாறு என் சட்டைப்பையில் இருந்த 20  ருபாய் எடுத்து தந்த போது, "இந்த உதவியே போதும் நன்றி, எனக் கூறி பஸ்சில் ஏறி சென்றான். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வு இன்னும் மறக்க முடியாதஅனுபவமாக மனதில்பதிந்துவிட்டது.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...