ஐயப்பனும் அனிதாவும் பெண்ணிய சமத்துவமும்
சபரிமலை தொடர்பான இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கதே. அதில் சந்தேகமில்லை. ஆனால் அது ஏதோ ஆகப்பெரிய பெண்ணிய வெற்றி என்பதாக கொண்டாடி சாமியாடும் பெரியாரியர்களும் அம்பேத்கரியர்களும் அதற்கு இல்லாத ஒளிவட்டத்தை உருவாக்காமல் இருந்தால் தேவலாம்.
காரணம் சபரிமலை ஐயப்பன் கோவிலைப்போலவே தில்லை நடராஜர் கோவிலும் இந்துமத ஆகம நியமங்களின்படி தனித்துவமான கோவில்கள் என்பதே இரு கோவில்களிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புவோர் தொடர்ந்து முன் வைத்து வரும் வாதங்கள்.
தமிழில் பாடினால் தில்லை நடராஜனுக்கு தீட்டாகிவிடும் என்பதும் தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ்தான் நடராஜர் கோவில் இருக்க வேண்டும் என்பதும் அந்த அடிப்படையில் வைக்கப்பட்ட வாதங்களே.
அந்த வாதங்களை ஏற்று நூற்றாண்டுகளாக தில்லை கோவில் வருமானத்தை கொள்ளையடித்த கும்பலிடமே தில்லை கோவிலை திரும்பவும் அளிக்க உத்தரவிட்டதும் இதே உச்சநீதிமன்றம் தான்.
அந்த அடிப்படை முரண்பாட்டை இன்றைய கொண்டாட்ட சாமியாடிகள் மறக்காமலிருக்க ஐயப்பனும் ஆடல்வல்லானும் அருள்புரிவார்களாக.
அத்தோடு பெண்ணியம் என்பதை பாரதியும் பேசினார். பெரியாரும் பேசினார். அம்பேட்கரும் பேசினார். இதில் இன்றைய தீர்ப்பு பாரதி பேசிய ஆரம்பகட்ட பெண்ணியமே தவிர பெரியார் பெரிதும் வலியுறுத்திய அம்பேட்கர் சட்டப்பாதுகாப்பு கொடுத்த உண்மையான பெண்ணியமல்ல என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது.
இங்கே தினம் தோறும் பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு முகம் கொடுத்து அதில் கொடுரமாக கொல்லப்படும் தலித் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட பெண்களின் பிரச்சனைகளுக்கும் பெண்ணிய பார்வைக்கும் மைலாப்பூர் பெண்ணிய பிரச்சனைகளுக்கும் பார்வைக்கும் நிலவும் அடிப்படை முரண்களையும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதும் கூடுதல் கோரிக்கை.
அனிதா என்கிற தமிழ்நாட்டு இளம்குருத்து தன் ஒட்டுமொத்த வாழ்வின் கனவையும் காப்பாற்ற கதவைத்தட்டி மன்றாடியபோது தன் கருணைக்கதவை திறக்க மறுத்து அனிதாவின் உயிரை அநியாயமாய் பறித்ததும் இதே உச்சநீதிமன்றம் தான் என்பதையும் இன்றைய தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தை கொண்டாடும் பெண்ணிய பெருந்தகைகள் நினைவில் கொள்வது அவசியம்.
நம் அனிதாக்களின் தேவை மருத்துவக்கல்வி பயில்வதற்கான அடிப்படை உரிமை. ஐயப்பன் கோவில் சமத்துவமல்ல. அது அம்மாமிகளின் கவலை. அதை பாரதியின் பேரன்களும் பேத்திகளும் பார்த்துக்கொள்ளட்டும். பெரியாரின் பேரன்களும் பேத்திகளும் அனிதாக்களை நினைவில் நிறுத்துங்கள்.
கேரள அரசு ஆண்டுதோறும் மக்கள் வரிப்பணத்தில் கொளுத்தும் மகரஜோதியில் எப்படி உண்மையில் எந்த தெய்வீக மகாத்மியமும் இல்லையோ அதேபோல் தான் இந்த தீர்ப்பில் இன்றைய 21ஆம் நூற்றாண்டு பெண்ணியவாதிகள் பெருமைப்பட பெரிதாக ஒன்றுமில்லை.
ஐயப்பன் கேரளா அரசின் சுற்றுலாத்துறையின் விளம்பர முகவர் – Brand Ambassador. அனிதா அடுத்த தலைமுறை தமிழ்நாட்டு பெண்கள், குறிப்பாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட முதல்தலைமுறை பட்டதாரிப்பெண்கள் எதிர்கொள்ளும் சந்திக்கும் நிறுவனமயப்பட்ட இந்திய ஏகாதிபத்தியத்திற்கு களப்பலியான ஏதிலி. கேரள அரசின் tourism board Brand Ambassadorஇடம் சமத்துவம் கிடைத்துவிட்ட கனவில் முகத்தில் அறையும் குரூரமான நிஜத்தை மறந்துவிடாதீர்கள்.
No comments:
Post a Comment